Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வாய்ப்புகளை தேடிச் செல்லுங்கள்!

வாய்ப்புகளைத் தேடிச் செல்வதே விட வாய்ப்புகளை உருவாக்க முயற்சி செய்வதே சிறந்தது, என்றாலும் வாய்ப்புகளை உருவாக்கும் சூழல் இல்லாத போது உரிய வாய்ப்புகளை தேடி செல்வதே உகந்தது. வாய்ப்புகளைத் தேடி சென்று அதை பயன்படுத்துபவர்களே வெற்றிவானில் சிறகை விரிக்கிறார்கள்.

சமூகம் உங்களைச் சாதாரண நிலையிலேயே வைத்திருக்க பார்க்கும்.தன்னுடைய கெடுபிடிகளை உங்களுடைய வாழ்வின் முற்பகுதியிலேயே அது தொடங்கி விடும்.சாதாரண குடும்ப பின்னணியைக் கொண்டு இருந்து, தங்களுடைய கடும் உழைப்பு,தளராத முயற்சி, அதீத நம்பிக்கையோடு வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் இதனை அறிவார்கள்.நீண்ட காலம் கட்டுப்படுத்தப்பட்டவர்களால் அதிலிருந்து விடுபட்டு அதற்கான வாய்ப்பு இருந்தாலும் வெற்றி பெற முடிவதில்லை.

யானையை சர்க்கஸ் வேலைக்கு எப்படி பழக்குகிறார்கள் தெரியுமா?அந்த யானை குட்டியாக இருக்கும்போது, நிலத்தில் ஊன்றப்பட்ட ஒரு கம்பத்தில் தினமும் அதைக் கட்டிவைப்பார்கள்.தன்னுடைய கழுத்தில் உள்ள கயிற்றை விசையாக இழுத்தாலும் தன்னால் அதற்கு மேல் போக முடியாது என்பதை அந்த “பேபி”யானை தெரிந்து கொண்டுவிடும்.அது போதிய வளர்ச்சி அடைந்த போதும்,தான் பிணைக்கப்பட்ட கம்பத்தை முறித்துப் போட்டுவிட்டு அது போவதில்லை.இத்தனைக்கும் ஒரு சிறிய கம்பத்துடன்தான் அதைப் பிணைத்து இருப்பார்கள்.ஆனால்,அது கயிற்றில் இருந்து விடுபட முயற்சிப்பதில்லை, தன்னைக் கட்டிப்போட்ட இடத்துக்கு அப்பால் தன்னால் போக முடியாது என்ற பழைய நினைப்பிலேயே அது இருந்து கொண்டிருக்கும்.

நாமும் அந்த யானையைப் போலத்தான் நம்முடைய ஆசிரியர்களாலும்,சகமானவர்களாலும், நமக்குப் பயிற்சி அளிக்கிறவர்களும் கட்டுப்படுத்தப்படுகிறோம்.நம்முடைய பெற்றோர்களும் நம்மை சராசரிக் குழந்தைகளாகவே கருதிக் கொள்கிறார்கள்.

‘உன் வயசுக்கு மீறி காரியத்தைச் செய்யாதே’ ‘உன் தகுதிக்கு மீறி ஆசைப்படாதே’ என்கிற உபதேசம் எங்கும் ஒலிக்கும்.மற்றவர்கள் என்ன செய்கிறார்களோ, அதையே நீயும் செய்.மற்றவர்களைப் போலத்தான் நீயும் இருக்க வேண்டும். அவர்களிலிருந்து நீ வேறாகி விடக்கூடாது. இப்படி சமூகம் போதிக்கிற போது உங்கள் தனித்தன்மை வெளிப்பட வாய்ப்பு ஏது?

மற்றவர்கள் செய்யத் தயங்குற ஒன்றை நீ செய்து பார் என்று உங்களை யாரும் ஊக்குவிப்பதில்லை.வாழ்வின் எல்லா பரப்புகளிலும் சாதாரண நிலையில் இருந்து கொள்ளும்படியாகவே நாம் கட்டுப்படுத்தப்படுகின்றோம்.

அப்பா படிக்கச் சொன்ன படிப்பு. அம்மா பார்த்து வைத்த பெண், இப்படி மற்றவர்களின் பேச்சுக்குக் கட்டுப்படுகிறீர்கள். நீங்கள் வேலை செய்கிற இடத்தில் நிர்வாக மேலிடம் என்ன எதிர்பார்க்கிறதோ அதையே செய்து பழகிவிடுகிறீர்கள்.

சட்டென்று எதையும் தூக்கி எறிந்து விட்டு,புதிதாய் ஒன்றை செய்வதற்கு தோன்றாது.காரணம் நம்முடைய கடந்த காலம் தொடர்ந்து இருந்தபடி நம் எதிர்காலத்தையும் வரையறை செய்கிறது.நாம் வேறு விதமாய் தீர்மானிக்காத வரை அது அப்படியேதான் தொடரும்.

பெரிய அளவில் ரிஸ்க் எடுக்கவோ, பெரிய வெற்றியை பெறுவதற்கோ நம்மிடம் திறமை கிடையாது என்று நம்பிக்கொண்டு,புதிய சிந்தனைகளை தொழிலில் புகுத்தவோ,ரிஸ்க் எடுக்கவோ நாம் முயற்சிப்பதில்லை. “நம் கனவுகள் நடைமுறைப்படுத்தப்படாமல் வெறும் கனவுகளாகவே நின்று விடுகின்றன” இருக்கிற நிலையை இழக்காமல் இருந்தாலே போதும் என்று சாதாரண வாழ்க்கையில் சந்தோசப்படுகின்றோம்.இதில் பாதுகாப்பும்,பத்திரத்தன்மையும் இருக்கிறது. ‘இப்படியே இருந்து கொள்,’ என்று இரண்டாம் தர வாழ்க்கையை ஏற்பதற்குப் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் இதில் இருந்து வெளிவருவதும்,முன்நோக்கிச் செல்வதும் முடியாத காரியம் அல்ல. சொல்லப்போனால் நீங்கள் நினைப்பதை விட அது எளிது.அதற்கு தேவைப்படுவதெல்லாம் அரியதிறனுடன் கூடிய விழிப்புநிலையும், புதிய சூழ்நிலையுடன் பொருந்திக் கொள்ளக்கூடிய மனப்பாங்குதான்.

நீங்கள் இரண்டாம் நிலையில் இருக்கும்படி கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், உண்மையில் அசாதாரண சாதனைகளை நிகழ்த்தும் படியாகவே நீங்கள் படைக்கப்பட்டிருக்கின்றீர்கள்.இந்த நம்பிக்கை இருந்தாலே உங்களால் மேலெழ முடியும்.

நம்மால் வாழ்வின் எல்லாத் துறைகளிலும் சாதனை நிகழ்த்த முடியும் என்பதை நீங்கள் புரிந்து கொள்வது முக்கியம்.உங்கள் வீட்டின் எல்லா அறைகளுக்கும் போய் வருகிற மாதிரி வாழ்வின் எல்லாத் துறைகளிலும் நீங்கள் வாழ முடியும்.ஒருவர் ஐந்து மொழிகளில் வல்லவராயிருப்பது போல் ஏன் ஐந்து துறைகளில் வல்லவராயிருக்க முடியாது? ஒன்றுக்கொன்று தொடர்புடைய பல பிரிவுகளில் சிறந்து விளங்கினால் நீங்கள் தான் ‘நம்பர் ஒன்’. மிகப்பெரிய பதவிகளை நீங்கள் அடைய வேண்டுமென்றால் அதற்கு பல்வேறு துறைகளைப் பற்றி படித்து தெரிந்தவராக இருக்க வேண்டும்.அப்படிப்பட்டவர்கள்தான் அதிகாரமிக்க உயர்பதவிகளில் அமர்கின்றார்கள். இதற்கு உதாரணமாய் இந்த சாதனைப் பெண்மணியை சொல்லலாம்.

தஞ்சாவூரை சேர்ந்த 28 வயதான இளம் பெண், மணிப்பூர் மாநிலத்தின் இளம் வயது கலெக்டராக பொறுப்பேற்று கவனத்தை ஈர்த்திருக்கிறார். தற்போது மணிப்பூர் மாநிலம், காக்சிங் மாவட்ட ஆட்சியராக ஏஞ்சலின் ரெனிட்டா பதவி ஏற்றுள்ளார். இதனையடுத்து அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. தமிழ் வழியிலேயே படித்து ஏஞ்சலின் தற்போது மாவட்ட ஆட்சியராக பதவி ஏற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

தஞ்சாவூர், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏஞ்சலின் ரெனிட்டா. 1998ல் பிறந்த அவர் அதே பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ்வழிக்கல்வியில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தார்.

பத்தாம் வகுப்பில் 490 மதிப்பெண்ணும், பன்னி ரெண்டாம் வகுப்பில் 1158 மதிப்பெண்கள் எடுத்தார். பிறகு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியில் (CEG) Agricultural and Irrigation Engineering பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றார்.

படிப்பில் சிறந்து விளங்கிய அவர், அந்தப் பிரிவில் தங்கப் பதக்கமும் பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து UPSC தேர்வு 2021-ஐ எதிர்கொண்ட அவர், அகில இந்திய அளவில் 338-வது இடத்தைப் பிடித்து ஐஏஎஸ் பணிக்கு தேர்வானார். 2022-ம் ஆண்டு மணிப்பூர் கேடரில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். மணிப்பூரில் பணியைத் தொடங்கிய பின்னர் Lamphel SDO, உள்துறை இணைச் செயலாளர் மற்றும் Manipur AIDS Control Society-யின் Project Director உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்தார்.

இந்த நிலையில், கடந்த மே 29-ம் தேதி கக்சிங் மாவட்டத்தின் Deputy Commissioner ஆக ஏஞ்சலின் ரெனிட்டா பொறுப்பேற்றார். ஏஞ்சலின் ரெனிட்டாவின் சுறுசுறுப்பான துடிப்பான பணியை கண்ட அந்த மாநில அரசு தற்போது பதவி உயர்வு கொடுத்துள்ளது. தற்போது அவர் மணிப்பூர் மாநிலத்தின் இளம் ஐஏஎஸ் அதிகாரியாக உயர்ந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

தஞ்சாவூரில் பிறந்த ஏஞ்சலின் ரெனிட்டா தன்னுடைய கடினமான உழைப்பாலும், விடா முயற்சியாலும், சிறந்த படிப்பினாலும் உயர்ந்து இன்று தமிழ்நாட்டில் உள்ள பல இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து கொண்டிருக்கிறார் என பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

வாய்ப்புகள் உங்களைத் தேடி வருவது எப்போது நிகழும் என்று சொல்ல முடியாது. அவ்வாறு வந்தால் அது அதிர்ஷ்டம்.ஆகவே வாய்ப்புகளைத் தேடித்தேடி நாம் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். அத்துடன் வாய்ப்புகள் கிடைக்கும்போது நாம் அவற்றை முழுமையாக பயன்படுத்தி நமது திறமைகள் முழுவதையும் வெளிக்காட்டி வெற்றிகளை குவிக்க முடியும் என்பதற்கு ஏஞ்சலின் ரெனிட்டா மிகச்சிறந்த முன்உதாரணம். வாய்ப்புகளை தேடிக்கொண்டே இருங்கள். உங்களுடைய கனவுகள் விரைவில் நிஜமாகும்.அதன் மூலம் உங்கள் வாழ்வும் நமது நாடும் முன்னேற்றம் காணட்டும்.ஆம்! ஒவ்வொரு தனிமனித வளர்ச்சியும், நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாகிறது.