Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பனிப்பாறை ஏரி உடைப்பு அல்ல; 5,200 மீ. உயரத்தில் இருந்து பனிப்பாறை விழுந்ததே வெள்ளம் ஏற்படக் காரணம்: நேபாள விஞ்ஞானிகள் தகவல்

காத்மாண்டு: ‘பனிப்பாறை ஏரி உடைப்பு அல்ல, 5,200 மீ உயரத்தில் இருந்து பனிப்பாறை செங்குத்தாக விழுந்ததே வெள்ளப்பெருக்கு ஏற்படக் காரணம்’ என நேபாள விஞ்ஞானிகள் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்திற்கான காரணத்தை பல தரப்பு விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்த வெள்ளப்பெருக்கிற்கு, இமயலையில் ஏற்பட்ட நிலநடுக்கம், பனிப்பாறை ஏரி உடைப்பு மற்றும் பனிப்பாறை சரிவு என பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இதில் 5.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வெள்ளப்பெருக்கு ஏற்படவில்லை என அமெரிக்க வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில், நேபாள சுற்றுச்சுழல் சங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கை நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில் நேபாள விஞ்ஞானிகள் கூறியிருப்பதாவது: செயற்கைகோள் படங்கள், நீரியல் மற்றும் வானிலை தரவுகள், நிலப்பரப்பு பண்புகள் மற்றும் ஆற்றுப்பாதையின் உயரம், சரிவில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்ததில், பனிப்பாறை ஏரி உடைப்பால் வெள்ளம் ஏற்பட்டதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. ரசுவா பகுதியின் லாங்டாங்-லிருங் பகுதியில் சுமார் 5,200 மீட்டர் உயரத்தில் இருந்து பனி, பாறை மற்றும் குப்பைகள் அடங்கிய பெரும் பனிப்பாறை சரிந்து லெண்டே ஆற்றில் விழுந்ததால், போட்டேகோஷி ஆறு வழியாக பெரும் வெள்ளப்பெருக்கு கீழ்நோக்கி பாய்ந்து திரிசூலி ஆற்றில் கலந்தது.

கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி காலை 8.37 மணி அளவில் லாங்டாங்-லிருங்கின் வடக்கு பகுதியிலிருந்து பனிப்பாறை சரிந்து 5,200 மீட்டர் உயரத்தில் இருந்து செங்குத்தான நிலப்பரப்பில் இறங்கி, சுமார் 2,930 மீ உயரத்தில் உள்ள லெண்டே ஆற்றில் விழுந்தது. அந்தப் பனிப்பாறை ரசுவாகதி வரை சுமார் 22 கிமீ தொலைவை 7 நிமிடங்களுக்கும் சற்று அதிகமான நேரத்தில் கடந்து சென்றது. வினாடிக்கு சராசரியாக 46.3 மீட்டர் அல்லது மணிக்கு 167 கிமீ வேகத்தை எட்டியது. ராசுவாகதி மற்றும் பெத்ராபாதி பகுதிகளுக்கு இடையே ஆற்றின் வேகம் மணிக்கு சுமார் 73 கிமீ ஆகவும், அதற்குக் கீழ்நோக்கிய பகுதிகளில் மணிக்கு சுமார் 22 கிமீ ஆகவும் குறைந்தது.

வேகம் குறைந்தபோதிலும், வெள்ளத்தில் பெருமளவிலான பாறைகள், சேறு மற்றும் மண்ணை அடித்துச் சென்றுகொண்டே இருந்தது. வெள்ளம் வருவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பே, ராசுவாகதி மற்றும் சியாப்ருபெசி ஆகிய பகுதிகளில் ஆற்றின் நீர்மட்டமும் நீரோட்டமும் குறைந்ததும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆற்றின் மேல்நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வழக்கத்திற்கு மாறான கனமழை பெய்ததற்கான எந்த சான்றுகளும் இல்லை. இதனால் இப்பேரிடர் தீவிர மழையாலோ அல்லது மேகவெடிப்பாலோ ஏற்பட்டது அல்ல என்பது உறுதியாகி உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ரூ.3 லட்சம் கோடி சேதம்

நேபாள அரசாங்கத்தின் ஆரம்பகட்ட மதிப்பீட்டை மேற்கோள்காட்டி, பெருவெள்ளத்தால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு சுமார் ரூ.3 லட்சம் கோடியாக இருக்கும் என ஆய்வறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது. துறைரீதியான இழப்புகளின் மதிப்பீடு தொடர்ந்து நடந்து வருகிறது.