Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சூலூர் சிறுமி பலாத்கார கொலை வழக்கு: கொலையாளியை அடையாள அணிவகுப்பில் உறுதி செய்த சாட்சிகள்

கோவை: சூலூர் சிறுமி பலாத்கார கொலை வழக்கில் அடையாள அணிவகுப்பில் கொலையாளியை சாட்சிகள் உறுதி செய்தனர். கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளபாளையம், பாரதிபுரம், அருணகிரிநாதர் வீதியில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி கடந்த 21ம் தேதி மாலை சுமார் 5 மணி அளவில் மாயமானார். இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணையை துவக்கினர். 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

விசாரணையின் போது, சிசிடிவி காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அதில், சிறுமியின் குடும்பத்திற்கு பழக்கமான அண்டை வீட்டில் வசிப்பவரான நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த கார்த்தி (33), என்பவர் சிறுமியை அழைத்துச் சென்றது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள மரியா ரோஸ் கார்டன் அடுக்குமாடி குடியிருப்பின் முதல் மாடியில் பதுங்கியிருந்த குற்றவாளி கார்த்தியை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

விசாரணையில், குற்றவாளி கார்த்தி, சிறுமியை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததும், பின்னர் கண்ணம்பாளையம் குளம் அருகிலுள்ள தென்னைத் தோட்டத்தில் கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டார். இதற்கு பாரதிபுரம், பள்ளபாளையத்தை சேர்ந்த மோகன் (30) என்பவர், முக்கிய குற்றவாளியான கார்த்திக்கிற்கு உறுதுணையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இவ்வழக்கு போக்சோ கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் சிறுமியை கார்த்தி கடத்தி சென்றதை அதே பகுதியை சேர்ந்த 2 பேர் பார்த்துள்ளனர். அவர்கள் இந்த வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அடையாள அணிவகுப்பு நடத்த போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர்.

அதன்படி, கோவை மத்திய சிறையில் நேற்று முன்தினம் நீதிபதி முன்பு அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. அப்போது சாட்சிகளாக சேர்க்கப்பட்ட 2 பேரும் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த கார்த்தியை அடையாளம் கண்டு உறுதி செய்தனர். இதனை போலீசார் வீடியோவாக பதிவு செய்து நீதிபதியிடம் ஒப்படைத்தனர். அவை போக்சோ கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

* 3 நாள் கஸ்டடியில் விசாரிக்க அனுமதி

சிறுமி பாலியல் பலத்கார வழக்கில் போலீசார் கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் ஆகியோரை கஸ்டடி எடுத்து விசாரணை செய்வதற்காக கோவை போக்சோ கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். 5 நாட்கள் விசாரணை நடத்த வேண்டும். இதற்கு கஸ்டடி அனுமதி வழங்க வேண்டும் என போலீஸ் தரப்பில் கேட்கப்பட்டு இருந்தது.

இந்த கஸ்டடி மனு தொடர்பான விசாரணை நேற்று நடத்தப்பட்டது. அதற்காக கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் கோர்ட்டில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். தொடர்ந்து நீதிபதி மனுவை விசாரித்து கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரையும் 3 நாள் கஸ்டடியில் விசாரிக்க அனுமதி அளித்தார். இதையடுத்து இருவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.