Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

செஞ்சி சிறுமியை 3 பேருடன் நாமக்கல்லில் பார்த்த பெண்: விசாரணையால் மனஉளைச்சல் என புலம்பல்: புவனகிரியிலும் பார்த்ததாக கொத்தனார் தகவலால் குழப்பம்

புவனகிரி: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி பகுதியில் கடந்த மாதம் 12ம் தேதி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி காணாமல் போனார். அவர் காணாமல் போய் 24 நாட்கள் ஆன நிலையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் அந்த வழக்கில் துப்பு எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் பச்சுடையாம்பட்டி புதூரை சேர்ந்த பெண் ஒருவர், செஞ்சியில் மாயமான சிறுமியை கடந்த மாதம் பார்த்ததாக தற்போது கூறியுள்ளார்.

இதுகுறித்து பச்சுடையாம்பட்டியைச் சேர்ந்த பவானி (48) கூறியதாவது: நாமக்கல் மாவட்டம் கோணனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், கடந்த 10 ஆண்டுகளாக சத்துணவு அமைப்பாளராக வேலை செய்து வருகிறேன். கடந்த மாதம் 23ம் தேதி காலை, பச்சுடையாம்பட்டி புதூர் சத்துணவு மையத்திற்கு காய்கறிகளை கொண்டு சென்றேன். செல்லும் வழியில் செஞ்சியில் காணாமல் போனதாக கூறப்படும் குழந்தையை பார்த்தேன். அந்த குழந்தையுடன் 3 பேர் இருந்தனர். அவர்களில் 2 பேருக்கு சுமார் 35 வயது இருக்கும். ஒருவருக்கு 50 வயது இருக்கும்.

அப்போது, அந்த குழந்தையை செஞ்சியில் காணாமல் போன குழந்தை என்று எனக்கு தெரியாது. கடந்த 29ம் தேதி இரவு, வீட்டில் எனது மகளின் செல்போனை பார்த்து கொண்டிருந்த போது தான், நான் பார்த்த குழந்தை செஞ்சியில் காணாமல் போன குழந்தை என்பது தெரியவந்தது. உடனே நான் 100க்கு போன் செய்து தகவல் கூறினேன். மறுநாள் நாமக்கல் சிபிசிஐடி போலீசார் வந்து, என்னை விசாரித்தனர். நான் குழந்தையை பார்த்த இடத்திற்கு அழைத்து சென்று, அங்கு வீடியோ புட்டேஜ் எடுத்து கொண்டனர்.

இப்போது, விழுப்புரத்தில் இருந்து வந்த சிபிசிஐடி போலீஸ்காரர் முத்துக்குமார், விசாரணை என்ற பெயரில் என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளார். இந்த தகவலை ஏன் சொன்னேனோ என்ற மன நிலைக்கு என்னை கொண்டு வந்து விட்டனர். பள்ளிக்கே வந்து, தலைமை ஆசிரியரிடம் என்னை பற்றி விசாரிக்கிறார்கள். சத்துணவு உதவியாளரிடமும் விசாரித்துள்ளனர். நேற்று மதியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கும் வந்து, என்னிடம் விசாரணை நடத்தினர். ​எனக்கு வேலைக்கு போகவே பயமாக இருக்கிறது. நான் எப்படி வேலைக்கு போவது?.

அந்த குழந்தையை நான் பார்த்த தகவலை மட்டும் தான் சொன்னேன். அதற்காக இவ்வளவு பிரச்னையையும் நான் எதற்காக எதிர்கொள்ள வேண்டும்?. இவ்வாறு அவர் தெரிவித்தார். இதனிடையே, பவானியின் பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், இதை மறுத்து உள்ள போலீசார், கணவனை பிரிந்த மன வேதனையில் உள்ள பவானி உண்மைக்கு புறம்பான செய்திகளை சொல்லி வருகிறார்’ என தெரிவித்து உள்ளனர்.

இதேபோல், கடந்த சில தினங்களுக்கு முன்பு புவனகிரியில் தான் முடி திருத்தம் செய்ய சென்ற இடத்தில் மாயமான சிறுமி போலவும், அவரது தாயாரை போலவும் தன்னிடம் வந்து காசு கேட்டதாகவும், அவர்களுக்கு 100 ரூபாய் கொடுத்ததாகது புவனகிரி அருகே உள்ள வயலாமூர் கிராமத்தை சேர்ந்த கொத்தனார் அருள்ஜோதி (43) 100க்கு போன் செய்து தெரிவித்து உள்ளார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் எந்த துப்பும் கிடைக்காததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.