விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டியில் பிறந்தநாள் கொண்டாடிய 7 வயது சிறுமி ஹேமலதா காணாமல் போய் இன்றுடன் 25 நாட்களாகியுள்ள நிலையில், இது குறித்த வழக்கை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சிறுமி என்ன ஆனார் என்ற விடை இதுவரை கிடைக்காத சூழலில், சிபிசிஐடி அதிகாரிகள் இவ்வழக்கை ஏற்று 15 நாட்களாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புவனகிரி மற்றும் நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் சிறுமி பார்க்கப்பட்டதாக கூறப்படும் தகவலின் அடிப்படையில், அங்கும் சிபிசிஐடி அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து, சிறுமியின் தாய் பவானியிடமும் மற்றும் அவரது குடும்பத்தினரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. குறிப்பாக, சிறுமியின் தாயின் தொலைபேசி அழைப்பு விவரங்களை சேகரித்து, கடந்த சில மாதங்களில் அவர் யாருடன் எல்லாம் செல்பேசியில் பேசினார் என்பது குறித்தும் காவல் துறையினர் தீவிரமாக தரவுகளைத் திரட்டி வருகின்றனர்.
இவ்வழக்கில் 30க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ள போதிலும், சிறுமியின் இருப்பிடம் குறித்து இதுவரை எந்தவிதத் துப்பும் துலங்கவில்லை. சிபிசிஐடி அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.


