Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

உழைக்கத் தயாராகுங்கள்!

வாழ்க்கை என்பது நம்பிக்கையெனும் அச்சில் சுழன்று கொண்டிருக்கிறது. ஆடை இல்லாத மனிதனை விட, நம்பிக்கை இல்லாத மனிதனே அரைமனிதனாவான். ஒருவனுக்கு தன்னம்பிக்கை என்பது எந்த சூழலில் குறைந்து போகிறது என்பதை ஆய்வு செய்தால் உண்மை நிலையை அறியலாம்.

நான் ஒன்றுக்குமே உதவாதவன் என்னும் நினைப்பும், தவறு நிகழ்ந்து விடுமோ என்னும் குழப்பமும் அதனால் உண்டாகும் விரக்தியும் தான் தன்னம்பிக்கையே துளிர்க்கவிடாமல் செய்து விடுகின்றன. முதலில் அடிக்கடி தலை காட்டும் அச்ச உணர்வை போக்க வேண்டும். ஒரு செயல் புரிய திட்டமிடும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

உழைப்புக்கேற்ற ஊதியம் வேண்டும் என்பது பொது விதி, ஊதியத்திற்காக உழைக்கிறேன் என்பது முரண்பாடான விதி.ஊதியம் மட்டுமே உங்கள் உழைப்புக்கான இலக்காக இருக்குமானால், நீங்கள் வாழ்நாளில் எதையும் கற்றுக் கொள்ளமுடியாது.

ஊதியம் மட்டுமே குறிக்கோள் என்றால் எதை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் இலட்சியவாதிகள் இப்படி செய்ய மாட்டார்கள்.எதையும் ஒரு முறையோடு தான் செய்வார்கள்.உங்களுக்கு வைரம் வேண்டுமானால் அது தெருவோரத்தில் குப்பைத் தொட்டில் கிடைக்காது. பல ஆயிரம் அடிகள் பூமியை தோண்ட வேண்டும்.

அப்போதுதான் வைரம் கிடைக்கும்.

இன்றைய உலகம் போட்டி மிகுந்ததாக மாறிவிட்டது. ஆகையால் நீங்கள் முன்னேற வேண்டுமானால் புதிய சிந்தனையுடன் உழைக்க தயாராக வேண்டும். ஊதியதற்காக உழைக்காமல் நமக்கான ஒரு இலக்கை உருவாக்கி அதை அடைவதற்காக இலட்சியத்துடன் உழைக்க வேண்டும். உங்களுக்கென்று ஒரு குறிக்கோளையும், பாதையையும் நிர்ணயித்தால் உங்களால் எந்த புயலையும் சந்திக்க முடியும். நம்மிடம் முடியும் என்ற மந்திரம் இருந்தால் நாம் எத்தனையோ அற்புத செயல்களை செய்ய முடியும்.

இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட கணிதமேதை சி.ஆர்.ராவ் கணிதம் மற்றும் புள்ளியியல் துறையில் புகழ்பெற்ற மேதை, இவர் சாதனைகளை பாராட்டி அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஸ் அவர்களின் கையால் ‘நேஷனல் மெடல் ஆப் சயின்ஸ்’ என்ற தேசிய உயர்விருது வழங்கப்பட்டது. இவர் பெற்றுள்ள டாக்டர் பட்டங்கள் மட்டும் முப்பதை கடந்தன. இதில் 17 பட்டங்கள் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் தந்தவை.தனது வாழ்க்கையே கணிதம் மற்றும் புள்ளியியல் துறைக்கு அர்ப்பணித்தவர். 350 ஆராய்ச்சிக் கட்டுரைகளையும்,14 புத்தகங்களையும் எழுதி உள்ளார். தனது 85 ஆவது வயதிலும் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் உயர் பதவியில் இருந்தார். உலகின் பல மொழிகளிலும் இவரது புத்தகங்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

தனது வாழ்க்கையின் வெற்றி பற்றிச் சொல்லும் போது நான் ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை. சாதிக்க எவ்வளவோ உள்ளது என்கிறார் சி.ஆர்.ராவ்.எவ்வளவு பெரிய சாதனை செய்துவிட்டு இன்னும் எவ்வளவோ இருக்கிறது என்று அடக்கத்தோடு இருக்கும் நம்மவரின் சாதனை நமக்குத் தூண்டுதல் தானே. மரம் தனக்காக பழுப்பதில்லை, ஆறு தனக்காக ஓடுவதில்லை, சான்றோர்கள் தனக்காக வாழ்வதில்லை, இப்படி தனக்காக மட்டுமில்லாமல் பொதுநல நோக்கில் உழைப்பவர்கள் உயர்ந்திருக்கிறார்கள். இதற்கு உதாரணமாய் இந்த சாதனைப் பெண்மணியை சொல்லலாம்.

கீர்த்தி கரந்த் இந்தியாவின் முன்னணி வனவிலங்கு பாதுகாப்பு உயிரியலாளர் மற்றும் ஆராய்ச்சியாளர். பெங்களூருவைச் சேர்ந்த சென்டர் பார் வைல்ட் லைப் ஸ்டடீஸ் (CWS) அமைப்பின் தலைமை அதிகாரியும் இயக்குநருமான இவர், மனித-விலங்கு மோதல்களைத் தவிர்ப்பது மற்றும் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார்.

பெங்களூருவிலுள்ள வனவிலங்கு ஆய்வுகளுக்கான மையத்தின் தலைமைப் பாதுகாப்பு விஞ்ஞானியாகவும் தலைவராகவும் உள்ளார். கிராமப்புறக் குழந்தைள் மற்றும் மாணவர் களிடையே வனவிலங்குகள் பாதுகாப்பு குறித்து கற்பிக்க ‘Wild Shaale’ கல்வித் திட்டத்தை நடத்தி வருகிறார். வனவிலங்கு பாதுகாப்புத் துறையில் சிறப்பான சேவையாற்றியதற்காக நேஷனல் ஜியோகிராபிக்யின் ‘Explorer of the Year’ உள்ளிட்ட பல உலகளாவிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

கீர்த்தி கரந்த் இந்தியாவின் கர்நாடகாவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வளர்ந்தார், அங்கு அவரது தந்தை, பாதுகாப்பு உயிரியலாளர் உல்லாஸ் கரந்த் புலிகளைப் பற்றி ஆய்வு செய்பவர். கீர்த்தி மூன்று வயதில் ஒரு களப்பயணத்தின் போது அவர் முதலில் புலியைப் பார்த்தார். சிறு வயதிலேயே, புலிகளைக் கண்காணிப்பது மற்றும் கேமராவை அமைப்பது எப்படி என்பதை அவர் கற்றுக்கொண்டார். அவரது தாயார் பிரதிபா கரந்த் பெங்களூரில் உள்ள எஸ்ஆர்சி பேச்சு மற்றும் செவித்திறன் நிறுவனத்தில் பேராசிரியராகப் பணியாற்றி உள்ளார்.

கீர்த்தி கரந்த், புளோரிடா பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் அறிவியலில் இளங்கலைப் பட்டமும், புவியியலில் இளங்கலைப் பட்டமும், யேல் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் அறிவியலில் முதுகலைப் பட்டமும் மற்றும் டியூக்  பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் கொள்கையில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.

31 வயதில் கீர்த்தி கரந்த் இந்தியாவுக்குத் திரும்பி, ராமானுஜன் ஃபெலோவாகவும், வனவிலங்கு ஆய்வுகளுக்கான மையத்தில் (CWS இந்தியா) ஆராய்ச்சி ஃபெலோவாகவும் இருந்து உள்ளார்.இந்திய மற்றும் ஆசியாவில் ஆராய்ச்சி மூலம், கரந்த் மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையிலான தொடர்புகளையும், பாதுகாப்பில் அவற்றின் தாக்கங்களையும் ஆராய்து வருகிறார்.

குழந்தைகள் மற்றும் குறிப்பாக வனவிலங்கு சரணாலயங்களுக்கு அருகில் வசிப்பவர்கள் பாதுகாப்பு ஏற்படுத்த கீர்த்தி முடிவு செய்தார். வனவிலங்குகளால் மக்கள், பயிர்கள் மற்றும் கால் நடைகளுக்கு சேதம் விளைவிக்க வாய்ப்புள்ளது. இது மன அதிர்ச்சியை ஏற்படுத்தி, குறிப்பிடத்தக்க பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுக்கும். இதனால் 2017 ஆம் ஆண்டில், கரந்த் கல்வியாளர் கேபி சலாசருடன் இணைந்து, வனவிலங்குகளுடன் அடிக்கடி தொடர்பு கொள்ளக்கூடிய உள்ளூர் மக்களுக்கும், குறிப்பாக மாணவர்களுக்கும் உதவ, கல்வி, கலை, கதைசொல்லல் மற்றும் விளையாட்டுகளைப் பயன்படுத்தும் ஒரு பாதுகாப்புத் திட்டத்தை உருவாக்கத் தொடங்கினார்.

இதனால் மாணவர்கள் தங்கள் வாழ்விடங்களில் எதிர்கொள்ளக்கூடிய வனவிலங்குகளை நன்கு புரிந்துகொள்ளவும், மோதலைக் குறைக்கும் வழிகளில் புதிய உத்திகளை உருவாக்கவும் கற்றுக்கொள்கிறார்கள்.

இவருடைய சாதனைகளை பாராட்டி நேஷனல் ஜியோகிராபிக் அமைப்பின் 2026 ஆம் ஆண்டின் சிறந்த ஆய்வாளர் விருதினை பெற்று வரலாற்று சாதனை படைத்திருக்கிறார் கீர்த்தி கரந்த். வனவிலங்குப் பாதுகாப்பு துறையில் உலக அளவில் மிக உயரிய அங்கீகாரமாக கருதப்படும் இந்த விருதினை வென்ற முதல் சாதனைப் பெண்மணியாக கீர்த்தி ஜொலித்துக் கொண்டிருக்கிறார். வெகுமதிக்காக மட்டுமே காத்திருக்காமல், உழைத்துக் கொண்டே இருப்பவர்களுக்கு உலகத்தின் சிறந்த வெகுமதிகள் தானாகவே வந்து சேரும் என்பதற்கு கீர்த்தி கரந்த் மிகச் சிறந்த உதாரணம்.

ஒவ்வொரு வினாடியும் முன்னேற வேண்டும் என்பதற்காகத்தான் கடவுள் மனிதனுடைய கால்களை முன்னோக்கி நடக்கும் விதத்தில் அமைத்திருக்கிறார் என்கிறார் எட்வின் ஆஸ்கன். நமது முதல் அடியை எடுத்து வைப்பதில் தான் முன்னேற்றம் இருக்கிறது.மேல்நோக்கிய சிந்தனை இருந்தால் மட்டுமே மேம்பட முடியும்.உங்களுக்குள்ளும் ஒரு கீர்த்தி இருக்கலாம் யாருக்கு தெரியும், எனவே இப்போதே உழைக்கத் தயாராகுங்கள்!