வாழ்க்கை என்றால் சின்னதும் பெரியதுமாக ஆயிரம் பிரச்னைகள் வரத்தான் செய்யும். பிரச்னைகளை பார்த்து சோர்ந்து நின்றால், தளர்ந்து போய் உட்கார்ந்து இருந்தால் அதுவும் நம்மோடு உட்கார்ந்து கொண்டு கரையானைப் போல கொஞ்சம் கொஞ்சமாக நம்மைத் தின்னத் தொடங்கி விடும்.
நமக்கான பிரச்னைகளை எப்படி அணுகுகிறோம் என்பதில் தான் நமது வெற்றியும், தோல்வியும் அடங்கியிருக்கிறது. அரிதான இந்த மனிதப் பிறவியை வீணாக்குபவன் தங்கத்தட்டில் குப்பைகளை போடுவதற்கு சமம். தங்கத் தட்டாக இருக்க வேண்டிய நம் பிரச்னைகள், தோல்விகள் என்ற குப்பைகளை கொட்டி தன்னம்பிக்கையை இழக்கலாமா?
ஒரு மனிதனின் கற்பனை செய்யும் அளவினைப் பொறுத்தே அவனது எதிர்காலம் அமைகிறது என்பார் எலினார் ரூஸ்வெல்ட் நான் வெற்றியாளன் என் பிரச்னைகள் எல்லாம் தீர்ந்து விட்டன. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கற்பனை செய்து பாருங்கள். மனதில் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியை உண்டாவதை காண முடியும்.
இந்த வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க வேண்டுமானால் எது நடந்தாலும் நான் கலங்க மாட்டேன் என்ற உறுதி கொள்ள வேண்டும். எது உண்மையோ அதை நேருக்கு நேர் எதிர்கொள்ள வேண்டும். எதார்த்தம் எது என்பதை உணர்ந்து நடைமுறைக்கு ஏற்றத்தை மட்டும் செயல்படுத்த வேண்டும்.இதுவும் கடந்து போகும் என்ற மனநிலையோடு முயற்சி செய்வதற்கே வெற்றி காத்திருக்கும். நமக்கெல்லாம் எங்கே வாய்ப்பு வரப்போகிறது என்ற விரக்தியான எண்ணத்தைச் சுமப்பவர்கள் துருப்பிடித்த இரும்பை போல பயனற்று தான் கிடப்பார்கள்.
உன்னைப் பற்றி நீ எப்படி நினைக்கிறாயோ அப்படியே தான் நடக்கிறது.உனது எண்ணத்தால் தான் நீ உனது உலகை உருவாக்குகிறாய். உனது ஆசைகளால் தான் உனது உலகை நீ உருவாக்குகிறாய், நீ எதையெல்லாம் வலியுறுத்துகிறாயோ அவையெல்லாம் நடக்க ஆரம்பிக்கிறது. உண்மை நிலையானது. உன்னோடு எப்போதும் ஒத்துழைக்கிறது என்கிறார் ஓஷோ.
உறுதியான நம்பிக்கை தான் நமக்கு பல உயரங்களைக் கொடுக்கும்.வெற்றி என்பது பூதாகரமாக பெரிய அளவில் வராது, படிப்படியாகத்தான் வரும்,வெற்றி வரும்வரை தடுமாறாமல் காத்திருங்கள். கடின உழைப்பே வெற்றியைத் பெற சிறந்த வழி, என்பதையும் நம்புங்கள்.
எந்தத் துறையாக இருந்தாலும் உழைப்புடன் கூடிய அர்ப்பணிப்பு உணர்வு மற்றும் ஈடுபாடுடன் செயல்பட்டால் இந்த உலகில் மிகச்சிறந்த மகத்தான சாதனைகளை புரிய முடியும். இதற்கு உதாரணமாக இந்த சாதனை பெண்மணியை சொல்லலாம்.
37 ஆண்டுகளுக்கும் மேலாக செவிலியர் பணியாற்றி, சுகாதாரத் துறையின் முன்னேற்றங்களுக்காகவும், செவிலியர்களின் உரிமைக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து பல மாற்றங்களுக்கு வித்திட்ட கோவாவை சேர்ந்த நீலிமா, ரூ.2 கோடி பரிசுத் தொகையுடன் கூடிய உயரிய “ஆஸ்டர் கார்டியன்ஸ் குளோபல் நர்சிங் விருது”க்கான 10 இறுதி போட்டியாளர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சாதித்து உள்ளார்.
ஜிசிசி நாடுகளில் இயங்கி வரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஆஸ்டர் டிஎம் ஹெல்த்கேர், உலகம் முழுவதும் உள்ள செவிலியர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதத்தில், “ஆஸ்டர் கார்டியன்ஸ் குளோபல் நர்சிங் விருது”- ஐ வழங்கி வருகிறது. விருதுடன் ரூ.2 கோடி பரிசுத் தொகையையும் வழங்கி ஊக்கப்படுத்துகிறது.
2022ம் ஆண்டு முதல் விருதை வழங்கி வரும் நிலையில், இந்தாண்டுக்கான முதல் 10 இறுதிப் போட்டியாளர்களை வெளியிட்டது. இந்த ஆண்டுக்கான விருதிற்கு 202 நாடுகளைச் சேர்ந்த 78,000க்கும் அதிகமான செவிலியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதிலிருந்து 10 இறுதிப்போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் தான், நீலிமா பிரதீப்குமார் ரானே.
கோவாவை சேர்ந்த நீலிமா,ஒரு சுகாதார முகாமில் தன்னார்வத் தொண்டு செய்தபோது தான் செவிலியர் ஆகுவதற்கான உத்வேகம் பெற்றார்.அங்கு நோயாளிகளுக்கு உதவுவதற்காக மருத்துவர்களுடன் செவிலியர்கள் எவ்வாறு பணியாற்றுகிறார்கள் என்பதை கண்டார்.
பின்னர், அவர் பஞ்சிமில் உள்ள அரசு நர்சிங் பள்ளியில் பொது செவிலியர் படிப்பைத் படித்தார். அதைத் தொடர்ந்து IGNOU இல் நர்சிங்கில் BSc பட்டம் பெற்றார். பட்டம் முடித்த பின், கோவா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பணியாளர் செவிலியராக அவரது வாழ்க்கையைத் தொடங்கி, இறுதியில் உதவி மேட்ரனாக ஓய்வு பெற்றார். கிட்டத்தட்ட 37 ஆண்டுகளுக்கும் மேலாக சுகாதாரத் துறையில் பணியாற்றியுள்ளார். தற்போது நர்சிங் அசோசியேஷன் கோவா மாநிலக் கிளையின் தலைவராகவும், இந்திய நர்சிங் கவுன்சில் உறுப்பினராகவும் உள்ளார்.
2014ம் ஆண்டில் கோவா நர்சிங் கவுன்சிலை நிறுவ உதவினார். அவரது முயற்சிகளின் மூலம், புதிய அங்கீகாரம் பெற்ற நர்சிங் பள்ளிகள் உருவாகின. இதன்மூலம், ஆண்டுதோறும் கோவாவில் ஆர்வமுள்ள செவிலியர்களுக்கான கல்வி வாய்ப்புகளை மேம்பட்டு, தகுதிவாய்ந்த நர்சிங் நிபுணர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.பகுதி நேர பட்டதாரி மற்றும் முதுகலை நர்சிங் பட்டப்படிப்பு படிக்கும் செவிலியர்களுக்கு படிப்பு விடுப்பு வழங்க வேண்டும் என்று அவர் பொது சுகாதாரத் துறையிடம் கேட்டுக்கொண்டார்.
வண்ண-குறியிடப்பட்ட தொட்டிகளை செயல்படுத்துதல், உணவு கழிவுகளைக் குறைத்தல் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதை உறுதி செய்தல் மூலம் உயிரியல் மருத்துவக் கழிவுகளை பிரிப்பதை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் அவர் தலைமை தாங்கினார்.
அவர்களுடைய முயற்சிகளுக்கு பலன் கிடைத்ததுடன் அவருக்கான அங்கீகாரங்களையும் பெறத் தொடங்கினார். ஆம், 2008 ஆம் ஆண்டு ‘‘ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் தேசிய விருதை” பெற்ற முதல் கோவா செவிலியர் என்ற பெருமையை பெற்றார்.
தாய்ப்பாலை ஊக்குவிப்பதற்காக UNICEF மற்றும் WHO ஆல் தொடங்கப்பட்ட குழந்தை-நட்பு மருத்துவமனை முன்முயற்சியில் கோவா அரசுடன் இணைந்து அவர் பணியாற்றினார். மேலும், தாய்ப்பாலில் உள்ள ஊட்டச்சத்துகள், அதன் நன்மைகள், தாய்பால் புகட்டும் உத்திகள் பற்றியும், தாய்ப்பால் சுற்றி சமூகத்திலுள்ள தவறான புரிதல்களை கலைய செய்வதற்காகவும் நர்சிங் மாணவ,மாணவிகளுக்கு வொர்க்ஷாப்களை நடத்தி வருகிறார்.
இந்தியாவில் நர்சிங் துறை செழித்து வளர வாய்ப்பு உள்ளது. சம்பளத்தை அதிகரிப்பது மற்றும் பணி நிலைமைகளை மேம்படுத்துவது ஆகியவை நர்சிங் துறையை மேலும் கவர்ச்சிகரமானதாக மாற்றும் என்கிறார் நீலிமா. எந்தத் துறையாக இருந்தாலும் அந்தத் துறையில் அர்ப்பணிப்பு உணர்வு மற்றும் ஈடுபாடுடன் செயல்பட்டால் மிகப்பெரிய வெற்றியை பெறலாம் என்பதுதான் நீலிமாவின் வாழ்க்கை நமக்கு சொல்லும் உன்னதப் பாடமாகும். இவரை போல நீங்களும் வெற்றி பெற வேண்டும் என்றால் உங்கள் தோல்விகளை எட்டி உதைத்து தள்ளுங்கள், தோல்விகள் தோற்கும் வரை முயற்சிகளைக் கைவிடாதீர்கள்,வெற்றி பெற தயாராகுங்கள்.


