Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

செங்கிஸ்கானின் வரவால் ஆதரவாளர்களிடம் பாம்புபோல சீறிய புஸ்ஸி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘இலைக்கட்சியின் மூத்த நிர்வாகியிடம் இளம் நிர்வாகி மல்லுக்கட்டுவது நாளுக்குநாள் அதிகரிச்சிக்கிட்டே வருதாமே எங்க..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.

‘‘எல்லாம் நெற்களஞ்சியம் மாவட்டம்தான். இங்குள்ள இலை கட்சியின் நிர்வாகிகள் இருவருக்கு இடையேயான பனிப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளதாம்.. இலை கட்சியில் பிரகாசமான குறைந்த வயதுக்காரர், லோக்கலில் உள்ள யாரும் தன்னை ஒன்றும் செய்ய முடியாது, தலைமையிடம் தனக்கு தனி செல்வாக்கு இருக்கு என சொல்லி வருகிறாராம்.. இதனால் இலை கட்சியில் உள்ள பெயரில் சாமியை கடைசியாக வைச்சிருக்கும் மூத்த நிர்வாகி என்ன செய்வதென்று தெரியாமல் புலம்பி வருகிறாராம்.. மூத்த நிர்வாகி பலமுறை தலைமையிடம் சொல்லியும், இளம் நபர் மீது நடவடிக்கை இல்லையாம்.. இளம் நபரின் செல்வாக்கு அதிகரித்த வண்ணம் உள்ளதாம்.. மிக விரைவில் நெற்களஞ்சியம் மாவட்டத்தில் பெரிய அளவிலான நிகழ்ச்சி ஒன்றை நடத்த இளம் நிர்வாகி முடிவு செய்துள்ளாராம்.. இதன் மூலம் தனக்கு உள்ள பவரை காண்பிக்க அவர் முடிவு செய்திருக்கிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘எந்த அணியில் சேர்ந்தால் நமக்கு பாதுகாப்புன்னு சொன்ன வைத்தியானவர் தேனிக்காரரிடம் இருந்து வெளியேற தயாராகி விட்டாராமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘இலைக்கட்சியில் இருந்து தொடர்ந்து புறக்கணிக்கப்பட்ட நிலையில், தொண்டர் மீட்பு குழு ஒன்றை தொடங்கினார் தேனிக்காரர்.. பெயருக்கு ஊருக்கு ரெண்டு பேர் அந்த குழுவில் இருக்காங்களாம்.. என்றாவது ஒரு நாள் பழம் பழுக்காதா என இலவுகாத்த கிளி போல பார்த்துக்கிட்டே இருக்காங்களாம்.. காலம் தான் போனதே தவிர, இலவம் பழம் பழுக்கலையாம்.. இதனால குழு என்ற வார்த்தையை கழகம் என மாற்றியது வரை எல்லாம் பழங்கதை தானாம்.. அரசனை நம்பி புருசனை விட்டது போல, மலராத கட்சியை நம்பி நடுரோட்டில் நிற்கும் நிலைதான் ஏற்பட்டு போச்சாம்.. எப்பவுமே தேனிக்காரருக்கு கோபம் என்பதே வராதாம்.. என்றாலும் தற்போது முழு வீரியத்துடன் எழுந்திருக்காராம்.. தன்னை நம்பி இருக்கும் மா.செ.க்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செஞ்சே ஆகணுமுன்னு கூட்டத்தை கூட்டியிருக்காரு.. இதில் பெரும்பான்மையான மா.செ.க்கள் நடிகருடன் போகலாமுன்னு சொல்லியிருக்காங்க.. ஆனால் ஒரத்தநாடு வைத்தியானவரு அரசியலை ஆராய்ஞ்சி பார்த்து, கூடவே கூடாதுன்னு கடும் எதிர்ப்பு தெரிவிச்சியிருக்காரு.. நடிகருக்கு அரசியல் பற்றி எதுவுமே தெரியாது.. அவருடன் ரசிகர்கள் தான் இருக்காங்க.. கட்சி என்றால் பேஸ்மட்டம் இருக்கணும்.. ஆனால் அவரிடம் பில்டிங் தான் இருக்குது.. இவரை நம்பி சென்றால் மீண்டும் நடுரோட்டில் தான் நிக்கணும் என சொன்னவரு... ஆளுங்கட்சி அணியில் சேர்ந்தால் தான் நமக்கு பாதுகாப்புன்னு அதிரடியா சொல்லியிருக்காரு.. அவருக்கு சில மா.செ.க்கள் ஆதரவு தெரிவிச்சி இருக்காங்க.. இதனால வைத்தியானவரு கழகத்தில் இருந்து வெளியேறப் போவதாக அவரது அடிப்பொடிகள் சொல்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘நடிகர் கட்சியில் தன்னுடைய முக்கியத்துவம் நாளுக்கு நாள் குறைஞ்சிட்டு வருவதை கண்டு ஆதரவாளர்களிடம் புஸ்ஸி பொங்கி எழுந்துட்டாராமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘செங்கிஸ்கானுக்கு கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படுவதை புஸ்ஸி விரும்பவில்லையாம். சமீபத்திய கட்சி நிகழ்வுகளில் அதிலும் குறிப்பாக மேற்கு மண்டலத்தில் நடந்த கூட்டங்களில் நடிகர்க்கு இணையாக பாதுகாப்பும், வரவேற்பும் அளிக்கப்பட்டு வருகிறதாம்.. இது புஸ்ஸிக்கு டென்சனை உருவாக்கி வருதாம்.. குறிப்பாக பனியன் மாவட்டத்துல நடந்த ஒரு ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட செங்கிஸ்கானுக்கு காரில் இருந்து இறங்கியதில் இருந்து மண்டபத்தில் நுழைந்து மேடையில் அமர வைக்கிற வரை இருபுறமும் இசட் பிளஸ் பாதுகாப்பு வளையம் போல அமைத்து ஆளுயர மாலைகள் எல்லாம் அணிவித்து அழைத்து சென்று சீட்டில் அமர வைத்தார்களாம்.. இதனால் புல்லரித்து போன செங்கிஸ்கான் தன்னுடைய உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் இனி நடிகர்க்கு தான் என்று புகழ்ந்து தள்ளியதோடு கண் கலங்கி நின்றாராம்.. இதனால் கூட்டத்தில் இருந்தவர்கள் விசில் அடித்து செங்கிஸ்கானுக்கு வாழ்க கோஷம் போட்டார்களாம்.. இதன் வீடியோ காட்சிகளை எல்லாம் பார்த்ததும் புஸ்ஸிக்கு பிரசர் அதிகமாகிவிட்டதாம்.. இதே நிலை நீடித்தால் கட்சியில் தன்னுடைய முக்கியத்துவம் குறைந்துவிடும் என்பதோடு நடிகரின் குட் புக்கில் செங்கிஸ்கான் இடம் பிடித்து விடுவாரோ என்ற பயமும் புஸ்ஸிக்கு வந்து விட்டதாம்.. அதனால மேற்கு மண்டலத்துல இருக்கிற தன்னோட ஆதரவாளர்களை தொடர்பு கொண்டு இத்தனை நாட்கள் எனக்கு இந்த மாதிரி ஆரவாரம், வரவேற்பு கொடுத்திருக்கிறீர்களா, இப்ப வந்த ஆளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் ஏன் கொடுக்கறீங்க அப்படின்னு கேள்வி எழுப்பினாராம் புஸ்ஸி. இதனால விரைவில் புஸ்ஸிக்கும், செங்கிஸ்கானுக்கும் பனிப்போர் தொடங்க வாய்ப்பு இருக்குன்னு சொல்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலைக்கட்சி தலைவர் கோட்டையில் ஓட்டை விழுகிறதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘இலைக்கட்சி தலைவரின் கூடாரத்தில் இருந்தே விக்கெட் ஒன்றை தூக்கிட்டாராம் கோபி கோட்டையன்.. ஓமலூர் பகுதியைச் சேர்ந்த அந்த மாஜி, எப்போதும் இலைக்கட்சி தலைவருக்கு எதிரானவருன்னு சொல்றாங்க.. இப்படித்தான் மம்மியோட பிறந்த நாள் கூட்டம் ஒன்று நடந்துச்சாம்.. அதில் மறைந்த மம்மியை புகழாமல், இலைக்கட்சி தலைவரை எல்லை மீறி புகழ்ந்துக்கிட்டே இருந்தாங்களாம்.. இதனால கோபமடைந்த அந்த பல்பாக்கி மாஜி, மேடையில இருந்து விருட்டென எழுந்து போயிட்டாராம்.. அதிலிருந்தே அந்த மாஜியை இலைக்கட்சி தலைவர் ஒதுக்கியே வச்சிருந்தாராம்.. என்றாலும் இலைக்கட்சி தலைவர் கோட்டையில், இன்னும் நிறைய விக்கெட்டுகள் சரியுமுன்னும் கட்சிக்காரங்க சொல்றாங்க.. ஏற்கனவே இலைக்கட்சி தலைவரும், தேனிக்காரரும் பிரிந்த நேரத்தில், தேனிக்காருக்கு தான் மாங்கனி நகரில் ஆதரவு அதிகமாக இருந்துச்சாம்.. விரல் விட்டு எண்ணும் வகையில் தான், இலைக்கட்சி தலைவருக்கு சப்போர்ட் செஞ்சாங்களாம்... அதன்பிறகு கட்சி இணைந்தவுடன் எல்லோரும் ஒண்ணாகிட்டாங்களாம்.. இந்த நேரத்துல, மாங்கனி மாநகர கட்சியில் ஒரே குழப்பமா இருக்குதாம்.. புதியதாக வந்துள்ள பொறுப்பாளரின் நெருக்கடியால், மூத்த மாஜிக்கள் எல்லோரும் ஒதுக்கப்பட்டுட்டாங்களாம்.. ஆரம்பத்தில் அமைதியாக இருந்தவர்கள், தற்போது தங்களால் முடிந்த எதிர்ப்பை தெரிவிச்சிக்கிட்டு வர்றாங்களாம்.. இவர்களில் பல பேரின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கட்சிக்காரங்க சொல்றாங்க.. சமீபகாலமாக கட்சியில் நிம்மதி இல்லாமல் செஞ்சிட்டதாகவும், இலைக்கட்சி தலைவரிடம் சொல்லியும், அவரும் கேட்கலை என்ற வேதனையோடு இருக்காங்களாம்.. இவர்களுக்கான வலையும் வீசப்பட்டிருக்காம்.. இதிலும் பலர் விழுந்துட்டாங்களாம்.. அவர்களை பூவைப் போல கோட்டையனுடன் சேர்க்கும் பணி நடந்துக்கிட்டிருக்காம்.. அதே நேரத்தில் யாரையும் வெளியே விட்டு விடக் கூடாது என இலைக்கட்சி தலைவரிடம் இருந்து உத்தரவு வந்திருக்காம்.. இதனால மாஜிக்களிடம் தாஜா செய்யும் வேலையும் நடந்துகிட்டிருப்பதாக கட்சிக்காரங்க சொல்றாங்க..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.