Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாடகைக்கு வீடு எடுத்து கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் செய்து ‘கருவின்’ பாலினம் கண்டறிந்து கூறியவர் கைது: 2 பெண் உதவியாளர்களும் சிக்கினர்

வாழப்பாடி: வாழப்பாடி அருகே வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் செய்து கருவின் பாலினத்தை கண்டறிந்து கூறியவரை போலீசார் கைது செய்தனர். 2 பெண் உதவியாளர்களும் சிக்கினர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள்ள பேளூரில் சக்திவேல் என்பவருக்கு சொந்தமான வீட்டில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கொடுகூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (50) என்பவர் வாடகைக்கு தங்கியுள்ளார். இவர் அந்த வீட்டில் கருவில் இருக்கும் குழந்தை ‘ஆணா, பெண்ணா’ என பாலினம் கண்டறிந்து கூறும் நவீன ஸ்கேன் இயந்திரத்தை வைத்துக்கொண்டு சட்டத்திற்கு புறம்பாக கர்ப்பிணிகளுக்கு பரிசோதித்து தெரிவித்து வந்துள்ளார். இதனால், சுற்று வட்டார பகுதியில் இருந்து கர்ப்பிணிகள், இந்த வீட்டிற்கு இரவிலும், அதிகாலை நேரத்திலும் வந்து சென்றுள்ளனர். இதற்காக லதா என்ற பெண்ணை உதவியாளராக வைத்துள்ளார்.

இவர், அக்கம் பக்கத்தில் விசாரித்து கர்ப்பிணிகளை அழைத்து வந்து, பரிசோதனை செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார். சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மாவட்டங்களை சேர்ந்த பல கர்ப்பிணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தாரை தொடர்பு கொள்வதற்காக 10க்கும் மேற்பட்ட புரோக்கர்கள் கொண்ட ‘சிண்டிகேட் கமிட்டியை’ வெங்கடேசன் உருவாக்கியுள்ளார். அந்தந்த பகுதியில் இப்புரோக்கர்கள் மூலம் கர்ப்பிணிகள் இங்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இதற்காக இவர்களுக்கு குறிப்பிட்ட தொகை ‘கமிஷனாக’ வழங்கியுள்ளார். இதுகுறித்து அறிந்த சேலம் மாவட்ட சுகாதார அலுவலர்கள் ஒரு குழுவாக செயல்பட்டு, வெங்கடேசனின் நடவடிக்கையை கண்காணித்து வந்தனர். இன்று காலை கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் ஓமலூரை சேர்ந்த 4 கர்ப்பிணிகள், உதவியாளர் லதா மூலமாக கருவின் பாலினம் கண்டறிவதற்காக வெங்கடசனை அணுகினர்.

அவர்கள், அந்த வீட்டிற்குள் சென்றனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து, சுகாதார அலுவலர்கள் அந்த வீட்டிற்குள் அதிரடியாக புகுந்தனர். அங்கு நவீன ஸ்கேன் கருவி மூலம் கர்ப்பிணிகளை பரிசோதித்து பாலினத்தை கூறிக்கொண்டிருந்த வெங்கடேசனை கையும் களவுமாக பிடித்தனர். பெண் உதவியாளர் லதாவும் சிக்கினார். இவர்களிடம் இருந்து நவீன ஸ்கேன் கருவி உள்ளிட்ட உபகரணங்களை பறிமுதல் செய்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வாழப்பாடி போலீசார், கருவின் பாலினம் கண்டறிந்து கூறி வந்த வெங்கடேசனை கைது செய்தனர். சிக்கிய அவரது பெண் உதவியாளர் லதா உள்ளிட்ட 2 பெண்களை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், 10ம் வகுப்பு வரை படித்த வெங்கடேசன், கூகுளில் கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் செய்து பாலினத்தை கண்டறிவது பற்றி பார்த்து, அவராகவே பயிற்சி பெற்றுள்ளார்.

பிறகு அதனை செயல்படுத்த தனியாக ஸ்கேன் கருவியை வாங்கி வைத்து, பேளூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து கர்ப்பிணிகளுக்கு கருவின் பாலினத்ைத கண்டறிந்து கூறி வந்துள்ளார். ஆரம்பத்தில் இப்பரிசோதனைக்கு ரூ.15 ஆயிரம் பெற்றுள்ளார். பிறகு ரூ.30 ஆயிரமாக கட்டணத்தை உயர்த்தி, கர்ப்பிணிகளிடம் வாங்கிக்கொண்டு கருவின் பாலினத்தை கண்டறிந்து கூறியுள்ளார் என தெரியவந்துள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தலைமறைவான 3 புரோக்கர்கள்

வெங்கடேசனிடம், கர்ப்பிணி பெண்களை அழைத்து வருவதற்கு திருப்பத்தூரை சேர்ந்த கனகா, மகேஸ்வரி மற்றும் கோவிந்தன் ஆகிய 3 பேர் புரோக்கர்களாக செயல்பட்டுள்ளனர். அவர்கள், வாரத்திற்கு 10க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளை இங்கு அழைத்து வந்து, கருவின் பாலினத்தை கண்டறிந்து தெரிவித்து வந்துள்ளனர். இந்த புரோக்கர்களுக்கு கணிசமாக கமிஷன் தொகையை வெங்கடேசன் வழங்கி வந்துள்ளார். தற்போது வெங்கடேசனை போலீசார் கைது செய்ததையடுத்து, அந்த புரோக்கர்கள் 3 பேரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கணவருக்கு உதவிய மனைவி

கருவின் பாலினம் கண்டறிந்து கூறிவந்த வெங்கடசேன், தனது குடியிருப்பு முகாமை அடிக்கடி இடமாற்றம் செய்து வந்துள்ளார். தன்னிடம் பரிசோதனை செய்து பாலினம் கண்டறிந்து கொண்ட கர்ப்பிணிகள் மூலமாகவே பல கிராமங்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்து, தங்கியிருந்து பரிசோதனை ஆய்வுக்கூடத்தை செயல்படுத்தியுள்ளார். தற்போது பேளூரில் தங்கியிருந்த சக்திவேலின் வீட்டில், அவரது மனைவி, வெங்கடேசனுக்கு உதவியதாக கூறப்படுகிறது. அதனால் அவரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.