நெல்லை: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே ஆறுமுகமங்கலம் கிராமத்தை சேர்ந்த கவின் செல்வ கணேஷ் (27) காதல் விவகாரத்தில் ஆணவக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் காதலி சுபாஷினியின் தம்பி சுர்ஜித், தந்தை எஸ்ஐ சரவணன் கைது செய்யப்பட்டார். இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி நெல்லை தீண்டாமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு தாக்கல் செய்தது.
இந்த மனு நீதிபதி ஹேமா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சரவணன், சுர்ஜித் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கு ஆவணங்களை சரிபார்த்த நீதிபதி ஹேமா, விசாரணையை வருகிற 11ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அன்று சுர்ஜித் மற்றும் சரவணன் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்த பின்னர், சிபிசிஐடி காவலில் ஒப்படைப்பது தொடர்பாக நீதிபதி உத்தரவு பிறப்பிப்பார் என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. விசாரணைக்குப்பின் சுர்ஜித், சரவணன் ஆகியோர் மீண்டும் பாளை சிறையில் அடைக்கப்பட்டனர்.