கேட் நுழைவுத்தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு
சென்னை: நம்நாட்டில் ஐஐஎம் போன்ற தேசிய முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை மேலாண்மை படிப்புகளில் சேர கேட் (Common Admission Test-CAT) நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். அதன்படி நடப்பாண்டுக்கான கேட் தேர்வு நாடு முழுவதும் 170 மையங்களில் வரும் நவம்பர் 30ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வை கோழிக்கோடு ஐஐஎம் நடத்தவுள்ளது. மேலும், காலை 8.30-10.30, மதியம் 12.30-2.30, மாலை 4.30-6.30 என மொத்தம் 3 அமர்வுகளாக தேர்வானது நடைபெறும்.
இந்த தேர்வெழுத நாடு முழுவதும் சுமார் 2.9 லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களுக்கான ஹால்டிக்கெட் கடந்த நவம்பர் 5ம் தேதி வெளியாடும் என அறிவிக்கப்பட்டது. நிர்வாக காரணங்களுக்காக வெளியீட்டு தேதி நவம்பர் 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை கோழிக்கோடு ஐஐஎம் நேற்று வெளியிட்டது. பட்டதாரிகள் iimcat.ac.in வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 18002100175 எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.