*வீட்டிலியே இருக்கும் பெண்கள் உணவைக் கூட ஒதுக்கிவிட்டு நான்கைந்து முறை டீயோ, காப்பியோ குடிக்கும் வழக்கத்திலிருப்பர். இந்த சமையல் சிலிண்டர் சிக்கனத்தைப் பயன்படுத்தி, காலையில் ஒரு முறை டீ என மாற்றிக்கொண்டு தண்ணீர், நீர்மோர், இளநீர், பழச்சாறு என்று குடிக்கலாம்.
*ஒவ்வொரு சமையல் முடித்தவுடன் ஸ்டவ் இணைப்பை உருளையிலிருந்து எடுத்து வைத்து விட்டால் அடிக்கடி பற்ற வைக்கத் தோன்றாது.
* இன்னும் மூன்று மாதங்களுக்கு கோடைக் காலமென்பதால் அசைவம் தவிர்க்கலாம். அல்லது சமையல் நேரம் குறைவாக எடுத்துக்கொள்ளும் கடல் உணவுகளை உண்ணலாம்.
*குழந்தைகளுக்கு விடுமுறைக் காலம், அவர்களுக்கு இரண்டு, மூன்று சமையல் சமைத்துக் கட்டவேண்டியதில்லை. அவர்களுக்கு கோடையின் கொடுமையையும், எரிபொருள் தட்டுப்பாட்டையும் விளக்கிப் புரிய வைத்து பழங்கள், சாலட்கள், ஜூஸ் என செய்து கொடுக்கலாம்.
*தேவையான அளவிற்கு மட்டுமே சமைத்து சாப்பிடுங்கள். மீதியை ஃபிரிட்ஜில் வைத்து எடுத்து சூடுபடுத்துவதால் ‘கேஸ்’ வீணாகும். மூன்றாவது நாள் கெட்டுப் போகும் அல்லது போரடித்து விட கீழே கொட்டப்படும்.
*கோடைக்காலத்தில் தர்பூஸ், இளநீர், வெள்ளரி, நுங்கு, தக்காளி போன்றவற்றை எடுத்துக் கொண்டால் உடலுக்கும் குளிர்ச்சி, சமைக்கவும் வேண்டாம். வயிறு நிரம்பிவிட்டால் வேறு எதையும் கேட்காது.
*பால் காய்ச்ச, சோறு சமைக்க, சப்பாத்தி செய்ய மட்டுமே ‘கேஸ்’ உபயோகப்படுத்த வேண்டி வரும். அதையும் இண்டக்ஷன், எலக்ட்ரிக் குக்கர் என பழக்கிக்கொள்ளுங்கள்.
*பொங்கல், எலுமிச்சை சாதம், புளிசாதம் போன்றவற்றை அடிக்கடி செய்யலாம். தவிர்க்க முடியாதவர்கள் வாரம் ஒரு முறை மட்டுமே அசைவம் சாப்பிட்டால் கூட கேஸ் சிக்கனமாகும். குறிப்பாக தயிர் சாதம் சாப்பிட ஏற்ற காலமிது.
* பகல் ஒரு வேளைக்கு வீடோ, பள்ளியோ, அலுவலகமோ எதுவாயிருந்தாலும் மோர் சாதம் அல்லது தயிர் சாதம், ஊறுகாய் என்று உறுதியாக திட்டமிடுங்கள். அரிசியை சோறாக்க மட்டுமே சமைக்க வேண்டும். அதற்கான ‘கேஸ்’ மட்டுமே செலவாகும்.
*காலைச் சிற்றுண்டியாக ஊறவைத்த அவல், பிரெட், பட்டர், வெல்லம் அல்லது தயிருடன் பச்சைக் காய்கறி, பழத்துண்டுகள் போதும் என்றால் சமைக்கவே வேண்டாம். இட்லி, தோசை, ஆம்லெட் என்றால் அதற்கான ‘கேஸ்’ அதிகம் செலவாகும். இட்லிப் பொடி, தேங்காய் சட்னி போன்ற கேஸ் செலவில்லாத துணை உணவை தேர்ந்தெடுக்கலாம். தொட்டுக் கொள்ள சாஸ், ஜாம், ஊறுகாய், நாட்டுச்சர்க்கரை என்று பல இருக்கின்றன.
*உடலுக்கு நல்லது என்று சொல்லி தினமும் காலையில் காப்பிக்கு பதிலாக நெல்லிச் சாறு, அருகம்புல் சாறு, நீர் மோர் என்று பிள்ளைகளுக்கு பழக்கப்படுத்துங்கள். பெரியவர்களுக்கும் மிக நல்லது.
*மாலையில் பிஸ்கெட், ரஸ்க், பொரி, கடலை, பழத்துண்டுகள் என்று ‘ஸ்நாக்ஸ்’ சமைக்காமல் கிடைக்கக் கூடியதை கொடுங்கள். பொதுவாக சூப் வெரைட்டிகள் ஒருமுறை குக்கரில் வைத்து இறக்கி சாப்பிடலாம்.
இன்னும் கேஸ் சிக்கனப் பயிற்சிகள் சில
சமையல் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நேரங்களில், அதைப் புத்திசாலித்தனமாக பயன்படுத்துவது மிகவும் முக்கியம். தினசரி பழக்கங்களில் சிறிய மாற்றங்கள் செய்தாலே, ஒரு சிலிண்டர் அதிக நாட்கள் போதுமானதாகும்.
திட்டமிட்ட சமையல் முக்கியம்
ஒவ்வொரு நாளும் என்ன சமைப்பது என்று முன்கூட்டியே திட்டமிடுங்கள். ஒரே நேரத்தில் பல பொருட்களை சமைத்து வைத்துக் கொண்டால், அடுப்பை மீண்டும் மீண்டும் பற்ற வேண்டிய அவசியம் குறையும். காலை-மதியம்-இரவு ஆகியவற்றுக்கான சில உணவுகளை ஒரே நேரத்தில் தயாரித்து வைத்துக் கொள்ளலாம்.
பிரஷர் குக்கர் - உங்கள் சிறந்த தோழன்
பருப்பு, சாதம், காய்கறி போன்றவற்றை பிரஷர் குக்கரில் வேக வைப்பது மிகுந்த கேஸ் சேமிப்பை தரும். திறந்த பாத்திரத்தில் சமைப்பதை விட இது பாதி நேரத்திலும், குறைந்த கேஸிலும் முடியும்.
மூடி வைத்து சமைக்கவும்
பாத்திரத்தைத் திறந்தவாறு வைத்தால் வெப்பம் வெளியேறி கேஸ் வீணாகும். மூடி வைத்து சமைப்பதால் வெப்பம் உள்ளே தங்கி உணவு சீக்கிரம் வெந்துவிடும், கிழங்கு வகைகளை மூடி வேக வைக்கும் போது பெருங்காயம் சிறிது சேர்த்தால் வாயுத் தொல்லைகள் வராது.
தீ அளவை கட்டுப்படுத்துங்கள்
அதிக தீயில் சமைப்பது வேகமாக இருக்கும் என்று நினைப்பது தவறு. தேவையான அளவு மிதமான தீயே போதும். அதிக தீ அதிக கேஸ் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.
சரியான பாத்திரம், சரியான அளவு
பர்னர் அளவுக்கு பொருந்தும் பாத்திரம் பயன்படுத்துங்கள். சிறிய பாத்திரம் பெரிய தீயில் வைத்தால் வெப்பம் வீணாகும்.
அடுப்பு பராமரிப்பு அவசியம்
பர்னர் துளைகள் அடைபட்டால் கேஸ் முழுமையாக எரியாது. அடுப்பையும், பர்னரையும் அடிக்கடி சுத்தம் செய்தால் கேஸ் பயன்பாடு குறையும்.
லீக் இருக்கிறதா கவனிக்கவும்
சிலிண்டர் அல்லது குழாயில் சிறிய லீக் இருந்தாலும் கேஸ் வீணாகும். சோப்பு நீர் மூலம் அவ்வப்போது சோதித்து பாதுகாப்பாக வைத்திருக்கவும்.
மீண்டும் மீண்டும் சூடு செய்ய வேண்டாம்
அடிக்கடி உணவை சூடு செய்வதை தவிர்க்கவும். ஒரே நேரத்தில் தேவையான அளவு மட்டுமே சூடு செய்து பயன்படுத்துங்கள். முடிந்தால் சூடு செய்யும் வேலைகளுக்கு இண்டக்ஷன் அடுப்பு, எலக்ட்ரிக் குக்கர்களை பயன்படுத்தலாம். ரூ. 500 முதல் கெட்டில்கள் உள்ளன. பிளாக் டீ, காபிகளுக்கு அதுவே போதும்.
சிறிய டிப்ஸ் - பெரிய சேமிப்பு
*அரிசி, பருப்பு ஊறவைத்து சமைத்தால் வேக நேரம் குறையும்.
* தண்ணீர் அளவை சரியாக வைத்தால் கேஸ் சேமிக்கலாம்.
*வெந்த பிறகு உடனே தீயை அணைக்கவும்.
சிலிண்டர் தட்டுப்பாடு இருக்கும் நேரங்களில் “சிக்கனம்” எனக் கடைபிடிக்காமல், அது ஒரு புத்திசாலித்தனமான வாழ்க்கை முறையாக மாற்ற வேண்டும். இந்த வழிமுறைகளை பின்பற்றினால், ஒரு சிலிண்டர் பல நாட்கள் நீடிக்கும். எரிவாயுவுக்கென செலவிடும் பணத்தில் கணிசமான தொகை மிச்சமாகும்.
- விசாலாட்சி கண்ணன்.
