Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

குப்பை கொட்டும் தகராறு பெண்கள் மீது லாரியை ஏற்றி கொல்ல முயற்சி

ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்தூர் அடுத்த அம்மம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன் மகள் அனிதா (36). இவர் நேற்று முன்தினம் காலை, தனது வீட்டின் முன்பு குப்பைகளை கொட்டியுள்ளார். இதுதொடர்பாக, அவரது வீட்டின் அருகில் வசிக்கும் பூபதி(32) என்பவருடன் வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது, இருதரப்பிலும் அங்கு திரண்ட சிலர், வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். அப்போது, பூபதியின் உறவினரான டிரைவர் பாலமுருகன் (40) என்பவர், ஆத்திரத்தில் அங்கு நிறுத்தியிருந்த லாரியை ஓட்டி வந்து, வீட்டின் முன்பாக நின்றிருந்த அனிதா மற்றும் அவர்களது உறவினர்கள் மீது மோத முயன்றார்.

இதை எதிர்பார்க்காமல் அதிர்ச்சியடைந்த அனிதா தரப்பினர், நாலாப்புறமும் அலறியடித்தபடி ஓடி உயிர் தப்பினர். தொடர்ந்து வேகமாக சென்ற லாரி, அனிதா வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மோதியதில், காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. லாரி மோத வந்த போது, தப்பிக்க ஓடி கீழே விழுந்ததில், அனிதா மற்றும் பூபதி தரப்பை சேர்ந்த சிலருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து அனிதா அளித்த புகாரின் பேரில், ஆத்தூர் ஊரக போலீசார், டிரைவர் பாலமுருகன் மீது வழக்குபதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர். லாரியை ஏற்றி கொல்ல முயன்ற விடியோ காட்சிகள், சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.