Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

100 நாள் வேலைத்திட்டத்தில் காந்தி பெயர் நீக்கத்தை கண்டித்து தமிழகத்தில் இருந்து 10 ஆயிரம் பேரை திரட்டி பிரதமர் மோடி வீடு முற்றுகை: செல்வப்பெருந்தகை அறிவிப்பு

சென்னை: 100 நாள் வேலைத் திட்டம் எனப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் பெயரை ‘ விபி-ஜி ராம் ஜி’ என ஒன்றிய அரசு மாற்றியதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் இன்று நடைபெற்றது. அதன்படி, சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. உண்ணாவிரதப் போராட்டத்தில், செல்வப்பெருந்தகை பேசியதாவது:

பிரதமர் மோடிக்கு, மகாத்மா காந்தி பெயரை இந்திய தேசத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்பதுதான் நோக்கம். ஒரு மோடி அல்ல, ஆயிரம் மோடி வந்தாலும் காந்தி பெயரை நீக்க முடியாது. காந்தியின் புகழை அழிக்க வேண்டும் என்பதே ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நோக்கம். காங்கிரஸ் கட்சியின் நோக்கம் எல்லோரையும் நேசிக்க வேண்டும், பாதுகாக்க வேண்டும் என்பதுதான். பாஜகவின் கொள்கை என்ன? இந்த நாட்டை ஒரு தரப்பினர் தான் ஆள வேண்டும் என்று நினைக்கிறார்கள். மகாத்மா காந்தி பெயரைத் தாங்கி நிற்கும் 100 நாள் வேலைத்திட்டத்தைச் சீரழிக்க வேண்டும் என்று பா.ஜ.க., மோடி அரசு நினைக்கிறது. அதனைக் கண்டித்து தேசம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல இருக்கிறோம். தொடர்ந்து, தமிழகத்தில் இருந்து 10 ஆயிரம் பேரைத் திரட்டி டெல்லியில் உள்ள பிரதமர் மோடி வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும்.இவ்வாறு பேசினார்.

உண்ணாவிரத போராட்டத்தில் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சூரஜ் ஹெக்டே, முன்னாள் எம்.பி. செல்லக்குமார், ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ., சசிகாந்த் செந்தில் எம்.பி., துணைத் தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், இமயா கக்கன், பொருளாளர் ரூபி மனோகரன், பொதுச்செயலாளர்கள் எஸ்.ஏ.வாசு, காண்டீபன், பி.வி.தமிழ்செல்வன், அமைப்புச் செயலாளர் ராம் மோகன், மகிளா காங்கிரஸ் தலைவர் ஹசினா சையத், எஸ்.சி.துறை தலைவர் ரஞ்சன் குமார், இலக்கிய அணி தலைவர் பி.எஸ்.புத்தன், மாவட்ட தலைவர்கள் எம்.ஏ.முத்தழகன், எம்.எஸ்.திரவியம், அடையாறு டி.துரை,எஸ்சி துறை பொதுச்செயலாளர் மா.வே.மலையராஜா, துணை தலைவர் ஜி.முருகன், நிலவன், கிஷோர்குமார், அகரம் கோபி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.