காந்தியே ஆட்சி செய்தாலும் குற்றங்கள் நடக்கத்தான் செய்யும்: அதிமுக மாஜி அமைச்சர் ஓபன் டாக்
திண்டிவனம்: ‘காந்தியே ஆட்சி செய்தாலும் குற்றங்கள் நடக்கத்தான் செய்யும்’ என்று அதிமுக மாஜி அமைச்சர் சிவி சண்முகம் பேசி உள்ளார். மகளிருக்கு எதிரான குற்றங்களை தடுக்கக்கோரி விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் திண்டிவனம் காந்தி சிலை அருகே நேற்று மாஜி அமைச்சரும், எம்பியுமான சி.வி.சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டுமென கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக, அதிகளவில் கூட்டத்தை கூட்ட ஒன்றிய செயலாளர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால், சமீபத்தில் அதிமுக கூட்டத்தில் பேசிய சி.வி.சண்முகம், அரசு செயல்படுத்தி வரும் இலவச திட்டங்களை ஒப்பிட்டு, ‘தேர்தல் நேரத்தில் ஆளுக்கொரு பொண்டாட்டி இலவசம் என்று கூட அறிவிப்பார்கள்’ என பேசியிருந்தார். இதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள், அமைப்புகள் கண்டன தெரிவித்தன. மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதுதொடர்பாக மகளிர் ஆணையமும் சி.வி.சண்முகத்துக்கு சம்மன் அனுப்பி உள்ளது. இதனால், மகளிருக்கான அதிமுக அழைப்பு விடுத்த போராட்டத்துக்கு அதிமுக மகளிர் அணியே வராததால் பிசுபிசுத்தது. சொந்தக் கட்சியைச் சேர்ந்த 120 மகளிர் மட்டுமே பங்கேற்றனர். ஒன்றிய செயலாளர்கள் அழைத்தும் பல கிராமங்களைச் சேர்ந்த மகளிர் வரமறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
நீண்டநேரமாக காத்திருந்தும் எதிர்பார்த்த கூட்டம் வராத நிலையில் ஒருவழியாக பேச்சை தொடங்கினார் சி.வி.சண்முகம் எம்பி. ஆர்ப்பாட்டத்தில் சி.வி.சண்முகம் பேசும்போது, ‘காந்தியே ஆட்சி செய்தாலும் குற்றங்கள் நடக்கத்தான் செய்யும். ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும்’ என்று கூறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இவரது இந்த பேச்சை கேட்டு அதிமுக மகளிர் அணியினரே அதிர்ச்சி அடைந்தனர்.