சூதாட்ட செயலி விளம்பரத்தில் சிக்கிய நடிகரிடம் சிஐடி கிடுக்கிப்பிடி விசாரணை: திரையுலகில் அடுத்தடுத்து சிக்கும் பிரபலங்கள்
ஐதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் ஆன்லைன் சூதாட்ட செயலிகளால் பொதுமக்கள் பணத்தை இழந்து பாதிக்கப்படுவதாக எழுந்த புகார்களை அடுத்து, கடந்த மார்ச் முதல் சிஐடி சிறப்பு புலனாய்வு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஐதராபாத், சைபராபாத் மற்றும் நிஜாமாபாத் பகுதிகளில் தெலங்கானா விளையாட்டுச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் நான்கு முக்கிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக, ஏற்கெனவே நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி, லட்சுமி மஞ்சு உள்ளிட்ட பிரபலங்களிடம் சிஐடி மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த வரிசையில், கடந்த ஆகஸ்ட் மாதம் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக விஜய் தேவரகொண்டாவிடமும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இந்த நிலையில், மேற்கண்ட வழக்கு தொடர்பாக நடிகர் விஜய் தேவரகொண்டா, தெலங்கானா சிஐடி சிறப்பு புலனாய்வுக் குழு முன்பு நேற்று விசாரணைக்கு ஆஜரானார். சுமார் 40 நிமிடங்கள் நீடித்த இந்த விசாரணையின்போது, குறிப்பிட்ட ஆன்லைன் தளங்களை விளம்பரப்படுத்தியதற்காக அவர் பெற்ற பணம் மற்றும் கமிஷன் தொகை குறித்து அதிகாரிகள் கேள்விகளை எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த விஜய் தேவரகொண்டா, ‘நான் சட்டப்பூர்வமான, திறமையை அடிப்படையாகக் கொண்ட விளையாட்டுச் செயலியை மட்டுமே விளம்பரப்படுத்தினேன்; அது ஒரு சூதாட்ட செயலி அல்ல’ என்றார். மேலும் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடந்துகொண்டதை நிரூபிக்கும் ஆவணங்களையும் அதிகாரிகளிடம் சமர்ப்பித்த அவர், ‘இனி இதுபோன்ற விளம்பரங்களில் ஈடுபட மாட்டேன்’ என்று உறுதியளித்தார். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணையைத் தொடர்கின்றனர்.
