ககன்யான் பணிக்கான ஒருங்கிணைந்த பாராசூட் ஏர் டிராப் சோதனை வெற்றி : இஸ்ரோ அறிவிப்பு
பெங்களூரு: ககன்யான் பணிக்கான ஒருங்கிணைந்த பாராசூட் ஏர் டிராப் சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) கனவு திட்டம் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம். இந்த திட்டத்தின்படி ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 ராக்கெட் மூலம் 3 இந்திய விண்வெளி வீரர்களை பூமியில் இருந்து 400 கிலோமீட்டர் உயரத்தில் இருக்கும் சுற்றுவட்டப்பாதைக்கு அனுப்பி, அவர்களைப் பாதுகாப்பாக மீண்டும் பூமிக்குத் திரும்ப அழைத்து வருவது தான் நோக்கமாகும். இதனை வருகிற 2027-ம் ஆண்டு செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.
இதற்கு முன்பாக 3 ஆள் இல்லாத ராக்கெட்டை விண்ணில் செலுத்தி சோதனை நடத்தப்பட உள்ளது. இதில் முதல் ராக்கெட் இந்த ஆண்டு இறுதியில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதில் ‘வியோமித்ரா' என்ற பெண் ரோபோ பயணிக்க இருக்கிறது. இதற்கான பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக விண்வெளிக்கு சென்று திரும்பும் விண்வெளி வீரர்களை பத்திரமாக கடலில் தரையிறக்குவதற்கு பயன்படுத்தப்படும் பாராசூட் சோதனைகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் கடல் பகுதி மற்றும் நிலப்பரப்புகளிலும் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள ராணுவப் பயிற்சிப் பகுதியான பாபினா பீல்ட் பயரிங் ரேஞ்சில், ககன்யான் பணிக்கான முக்கிய ஒருங்கிணைந்த பிரதான ‘பாராசூட் ஏர் டிராப்’ சோதனை நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (விஎஸ்எஸ்சி), இஸ்ரோ, வான்வழி விநியோக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (ஏடிஆர்டிஇ), டிஆர்டிஓ, இந்திய விமானப்படை மற்றும் இந்திய ராணுவத்தின் தீவிர பங்கேற்புடன், இந்த சோதனை வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது.