Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கோரதாண்டவம்

இயற்கை என்பது எப்போதும் சாதுவான சத்ரு என்பார்கள். அமைதியாகவும், இதமாகவும் வரும் காற்றை ஸ்பரிசிக்கும் நாம் தென்றல் என்று கொண்டாடுகிறோம். அதுவே மணிக்கு 100க்கும் மேற்பட்ட வேகத்தில் காற்றுவீசினால் கடும் சேதத்தை சந்திக்கிறோம். இயற்கை எப்போது சீற்றம் கொள்ளும் என்று கணிப்பது சிரமம். ஆனால் இயற்கையை பாதுகாத்து நாமும் பாதுகாப்பாக எப்படி வாழ வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்த முடியும். மண்வளத்தை, வனத்தை பாழாக்கும் மக்காத பிளாஸ்டிக் கழிவுகளை மனிதன் ஆங்காங்கே தூக்கி வீசுகிறான். இதனால் பாதிக்கப்படுவது சுற்றுச்சூழல் மட்டுமல்ல. கால்நடைகளும் தான். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புவி வெப்பமயமாவதை தடுத்தல் ஆகிய நடவடிக்கைகள் தற்போதைய காலகட்டத்துக்கு மிகவும் அவசியமாகி இருக்கிறது. அப்போது தான் இயற்கை பேரழில் இருந்து உலகத்தை காப்பாற்ற இயலும்.

நேபாளத்தில் குறிப்பிடத்தக்க அளவிற்கு எங்கும் மழை பெய்யவில்லை. குறிப்பாக, மலை பகுதிகளில் மழை பெய்தற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றே தெரியவந்துள்ளது. இப்படி இருந்தும் அந்த நாட்டில் உள்ள ரசுவா மாவட்டத்தில் உள்ள போட்டேகோசி ஆற்றில் திடீரென பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த கொடூரமான வெள்ளத்தில் சிக்கி இதுவரை 200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். நேபாளம் மற்றும் சீனாவின் திபெத் முழுவதும் குறைந்தது 160 பேர் உயிரிழந்துள்ளனர். 1,500 பேர் காணவில்லை. இதில், தமிழர்கள் உள்பட 105 இந்தியர்கள் மாயமாகியுள்ளனர். இந்த திடீர் வெள்ளத்திற்கு, பனிப்பாறை சரிவும், அதனால் தற்காலிகமாக உருவான ஏரி உடைந்ததும்தான் காரணமாக இருக்கலாம் என்று நேபாள வானிலை ஆய்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இமயமலையின் உயரத்தில் பல பனியாறுகள் ஓடுகின்றன.

அதில், ஆற்றின் ஒரு பகுதி சரிந்துள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு லெண்டே கோலா நதிப்பள்ளத்தாக்கை சூறையாடி அங்குள்ள கிராமங்களை மூழ்கடித்து 19 பாலங்கள், 40 கி.மீ. சாலைகளை அழித்து கோரதாண்டவம் புரிந்துள்ளது. இந்த இயற்கை பெரு சீற்றத்தில் கைலாஷ் யாத்திரை சென்ற சுற்றுலா பயணிகள் சிக்கி பலர் காணாமல் போய் உள்ளனர். சிலர் உயிரை இழந்துள்ளனர். மழை, வெள்ளம், நிலச்சரிவு, நிலநடுக்கம் என்பது திடீர் விபத்து என்று கருதப்பட்டாலும், அதனால் ஏற்படும் இழப்பு என்பதை ஜீரணிக்கவே முடிவதில்லை. மலைப்பாங்கான இடங்களில் சுற்றுலா பயணிகள் சுற்றிப்பார்க்க அனுமதிக்கும் முன்பு அதற்கு பொறுப்பு வகிக்கும் அரசுத்துறைகள் காலநிலை மாற்றம், தற்போது அங்குள்ள தட்பவெப்பம் உள்ளிட்ட நிலவரங்களை

தினமும் கண்காணித்து சுற்றுலா பயணிகளை எச்சரிப்பதன் மூலம் பெரிய விபத்துகள் தடுக்கப்படலாம்.

நேபாளத்தில் அரங்கேறியுள்ள இயற்கை சீற்றத்தில் சிக்கி மாயமானவர்களை மீட்கவும், உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கவும் ஒன்றிய அரசு துரிதமாக செயல்பட வேண்டும். ஆண்டுேதாறும் இது போல் ஒரு இயற்கை பேரழிவை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருப்பதால், இது குறித்து ஒன்றிய அரசு தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு பாதுகாப்பு கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும். சுற்றுலா பயணிகளின் உயிருக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் அவர்களது இன்ப சுற்றுலா இன்பமாகவே அமைவதற்கு உறுதி செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.