அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள்-ஈரான் இடையிலான போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் இந்தியாவில் எரிபொருள் விலை உயரும் அபாயமும் எழுந்துள்ளது. இந்த நிலையில் விலை உயர்வை தடுக்கும் வகையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ஒன்றிய அரசு குறைத்துள்ளது. அதன்படி பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.13ல் இருந்து ரூ.3 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ரூ.10 என்றிருந்த டீசல் மீதான கலால்வரி முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அவசரக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் எரிபொருள் எளிதில் கிடைப்பதையும், விலை கட்டுப்படியாக இருப்பதையும் உறுதி செய்வதே இந்த முடிவின் நோக்கம். நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படவில்லை. ஒன்றிய அரசு பொதுமுடக்கத்தை அமல்படுத்தும் என்ற வதந்தியிலும் உண்மை இல்லை. எரிபொருள் விநியோகத்தில் எந்த இடையூறும் ஏற்படாது. பெட்ரோல், டீசல், விமான எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்வதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக எண்ணெய் வர்த்தக நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு ஆதரவு அளித்து வருகிறது.
உலகளாவிய நிலையற்ற தன்மை இருந்தபோதும், சில்லறை விலைகளில் எந்த உயர்வும் ஏற்படாமல் தடுப்பதே இதன் முக்கிய நோக்கம். உள்நாட்டில் கிடைப்பதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் விமான எரிபொருள் உள்ளிட்ட சில பெட்ரோலிய பொருட்களின் ஏற்றுமதி மீதான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது ஒருபுறமிருக்க, ஏற்கனவே இந்தியாவில் நயாரா எனர்ஜி நிறுவனத்தின் பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கலால் வரி குறைப்பு என்பது பொதுமக்கள் பயன்பாட்டுக்கான பெட்ரோல், டீசல் விலையை குறைக்குமா? என்ற கேள்வி மக்கள் மன்றத்தில் எழுந்துள்ளது.
போர்ச்சூழல் இல்லாத கடந்த காலங்களில் கச்சா எண்ணெய்யின் விலை பலமுறை குறைந்திருந்தது. ஆனால் அதன் பலனை ஒன்றிய அரசு, மக்களுக்கு வழங்கவில்லை. மாறாக பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் என்று அனைத்தின் விலையும் உயர்ந்தது. இந்த விலை உயர்வுச்சுமை என்பது மக்கள் தலையில் தான் ஏற்றப்பட்டது. எனவே எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கிய சலுகையின் சுமையை நமது தலையில் ஏற்றிவிடுமா? ஒன்றிய அரசு என்ற கேள்வியும் மக்களிடம் எழுந்துள்ளது. மேலும் இந்தியாவில் இப்போது, கடந்த காலங்களில் இல்லாத அசாதாரண சூழல் நிலவி வருகிறது.
முதற்கட்டமாக ஓட்டல்களுக்கும், உணவு விடுதிகளுக்கும் வர்த்தக காஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். இதற்கடுத்து வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகத்திற்கும் பெரும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நகர்ப்புறங்களில் 35 நாட்கள் கழித்தும், கிராமப்புறங்களில் 45 நாட்கள் கழித்தும் வீட்டு உபயோக காஸ் சிலிண்டருக்கு மறுபதிவு செய்ய முடியும் என்ற நிலை தற்போது உள்ளது. இதனால் உரிய நேரத்தில் சிலிண்டர் கிடைக்காமல் பல லட்சம் குடும்பங்கள் தடுமாறிக் கொண்டிருக்கிறது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு, சீரான ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்பது இந்திய மக்களின் மனக்குமுறல்.
