Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பழமரங்கள்... பாரம்பரிய நெல் ரகங்கள்...திட்டமிட்டு வெற்றி காணும் பட்டதாரி விவசாயி!

கன்னியாகுமரி மாவட்டம் அச்சன்குளம் பகுதியைச் சேர்ந்த பெலின் பொருளாதாரத்தில் எம்ஏ, எம்பில் படித்துவிட்டு கல்லூரியில் வேலை பார்த்தவர். அந்த வேலையை விட்டுவிட்டு இயற்கை விவசாயத்திற்கு வந்து பழமரங்கள் சாகுபடி, பாரம்பரிய நெல் உற்பத்தி, நேரடி விற்பனை என விவசாயத்திலும், சந்தைப்படுத்தலிலும் முத்திரை பதித்து வருகிறார். அவரைச் சந்தித்துப் பேசியபோது பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். `` பொருளாதாரத்தில் எம்ஏ, எம்பில் முடித்திருக்கிறேன். கன்னியாகுமரியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் 8 ஆண்டுகள் வேலை பார்த்த நிலையில் அந்த வேலையை உதறிவிட்டு இயற்கை விவசாயம் செய்யலாம் என முடிவெடுத்தேன். அதன்படி எனக்கு சொந்தமாக அச்சன்குளத்தில் உள்ள நான்கரை ஏக்கர் நிலத்தில் பல்வேறு பயிர்களை இயற்கை முறையில் சாகுபடி செய்ய ஆரம்பித்தேன். 12 ஆண்டுகள் ஆகிவிட்டது. இயற்கை விவசாயம் எனக்கு ஒரு அடையாளத்தையே வழங்கி இருக்கிறது.

எனது நான்கரை ஏக்கரில் ஒரு ஏக்கரைத் தவிர மற்ற நிலங்களில் பப்பாளி, கொய்யா, தென்னை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்திருக்கிறேன். கொய்யாவை எடுத்துக்கொண்டால் தைவான்பிங், அர்காகீரான் போன்ற ரகங்களை வைத்திருக்கிறேன். கொய்யா 6 மாதத்தில் இருந்து மகசூல் கொடுக்க தொடங்கிவிடும். 6 வருடங்கள் தொடர்ந்து மகசூல் கொடுக்கும். அதன்பிறகு அந்தச் செடிகளை அகற்றிவிட்டு, புதிதாக கொய்யாக் கன்றுகளை வாங்கி வந்து சாகுபடி செய்ய வேண்டும். இப்போது என்னிடம் 800 கொய்யாச் செடிகள் உள்ளன. இதுபோல் கொய்யாச் செடிகளுக்கு இடையே ரெட்லேடி ரக பப்பாளியை சாகுபடி செய்திருக்கிறேன். கொய்யா மற்றும் பப்பாளி சாகுபடி செய்துள்ள நிலத்தில் தற்போது செந்தெங்கு (சிவப்பு நிற இளநீர் உற்பத்தி செய்யக்கூடிய தென்னை) வைத்திருக்கிறேன்.

இந்தப் பயிர்களைச் சுற்றி உயிர்வேலியாக சீத்தாப்பழச்செடிகளை சாகுபடி செய்திருக்கிறேன். கொய்யா, பப்பாளி, தென்னை உள்ளிட்ட அனைத்து பயிர்களுக்கும் தொழுஉரம், வேம், நுண்ணூட்ட உரங்களைக் கொடுத்து வருகிறேன். எனது நிலத்தில் ஆழ்துளைக் கிணறும் இருக்கிறது. இந்தக் கிணற்றில் இருந்து அனைத்து பயிர்களுக்கும் சொட்டுநீர்ப் பாசன வசதி செய்து கொடுத்திருக்கிறேன். விவசாயப் பயிர்களை உற்பத்தி செய்வதை விட, அவற்றை சந்தைப்படுத்துவதுதான் பெரிய சவால். நாம் கஷ்டப்பட்டு உற்பத்தி செய்யும் விவசாயப் பயிர்களை வியாபாரிகளிடம் கொடுக்காமல், நாமே நேரடியாக விற்பனை செய்யலாம் என முடிவு செய்தேன். கன்னியாகுமரி - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள எனது விளைநிலத்தையொட்டி பழக்கடை ஒன்றை அமைத்திருக்கிறேன். இந்தக் கடை மூலம் எனது விவசாய நிலத்தில் உற்பத்தியாகும் பழங்களை வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்பனை செய்கிறேன்.

எனது விவசாய நிலத்தில் இருந்து கிடைக்கும் கொய்யா, பப்பாளி, மாம்பழம், சீத்தாப்பழம், இளநீர் உள்ளிட்ட அனைத்து விளைபொருட்களையும் விற்பனை செய்கிறேன். இதுதவிர கரும்பு ஜூஸ் தயாரித்தும் விற்பனை செய்கிறேன். வியாபாரத்தைக் கவனிப்பதற்காக தனியாக ஆட்களைக்கூட நியமித்து இருக்கிறேன். எனது விவசாய நிலத்தில் கிடைக்கும் கொய்யா, பப்பாளி உள்ளிட்ட பழங்கள் மூலம் மாதம் ரூ.50 ஆயிரம் வரை லாபம் கிடைக்கிறது. அனைத்து செலவுகளும் போக இந்த லாபம் கிடைக்கிறது.

இது தவிர ஒரு ஏக்கர் நிலத்தில் பாரம்பரிய நெல் பயிரிடுகிறேன். குமரி மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் இருபோக நெல்சாகுபடி நடந்து வருகிறது. ஜூன் மாதம் தொடங்கும் கன்னிப்பூ சாகுபடியின்போது கட்டிச்சாம்பா பயிரிடுவேன். அக்டோபர் மாதம் தொடங்கும் கும்பப்பூ சாகுபடியின்போது கொல்லம் சம்பா, கொட்டாரம் சம்பா உள்ளிட்ட பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிடுவேன். பாரம்பரிய நெல் சாகுபடி செய்யும்போது இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி வந்தேன். எனது நண்பர்களும், மற்ற விவசாயிகளும் என்னிடம் வந்து, நீங்கள் பாரம்பரிய நெல் சாகுபடி செய்து வருகிறீர்களே, தமிழக அரசு நடத்தும் பாரம்பரிய நெல் சாகுபடி போட்டியில் கலந்துகொள்ளலாமே எனக் கூறினர்.

அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு முறையாக விண்ணப்பித்து போட்டியில் கலந்துகொண்டேன். கும்பப்பூ சாகுபடியின்போது கொல்லம் சம்பா நெல்லைப் பயிரிட்டேன். ஆனால் அதிக மகசூல் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து அடுத்த வருடப் போட்டியில் கலந்துகொண்டு கொட்டாரம் சம்பா பயிரிட்டேன். அதிலும் எனக்கு போதிய மகசூல் கிடைக்கவில்லை. பின்னர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு கடந்த கும்பப்பூ சாகுடியின்போது மீண்டும் போட்டியில் கலந்துகொண்டேன். இந்த முறை கீரைச்சம்பா நெல் ரகத்தைப் பயிரிட்டேன். சில விவசாய நண்பர்களும், வேளாண்மைத்துறை அதிகாரிகளும் கீரைச்சம்பா நெல்லைப் பயிரிட்டு, அதற்கான உரங்களை முறையாக கொடுத்து பராமரித்து வந்தால் நல்ல மகசூலை அள்ளலாம் என டிப்ஸ் தந்தார்கள்.

அதன்படி வேளாண்மைத் துறையின் மூலம் 30 கிலோ கீரைச்சம்பா விதை நெல் வாங்கி டிரம்சீலர் மூலம் விதைப்பு செய்தேன். டிரம்சீலர் கொண்டு விதைப்பு செய்யும்போது இயந்திரம் கொண்டு நடவு செய்ததுபோல் வரிசையாக நெல் பயிர்கள் வளரும். இதனால் டிரம்சீலர் விதைப்பு முறையை நான் தேர்ந்தெடுத்து நடவு செய்தேன். (விவசாயி பெலினின் கீரைச்சம்பா சாகுபடி நுட்பங்கள் குறித்த கூடுதல் தகவல்கள் அடுத்த இதழில் இடம்பெறும்)

தொடர்புக்கு:

பெலின்: 90259 46387.