10 வகை காய்கறி மூலிகை பழமரங்கள் பூக்கள் கொடி வகைகள்...இப்படித்தான் இருக்கணும் இயற்கை விவசாயம்!
இப்படித்தான் விவசாயம் செய்ய வேண்டும் என்பதற்கு சான்றாக விளங்குகிறது இயற்கை விவசாயி மணிவண்ணனின் சாகுபடி முறை. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகில் சதுப்பேரிபாளையம் கிராமத்தில் அமைந்திருக்கும் இவரது விவசாய நிலத்தில், பணம் தரக்கூடிய பல வகையான பயிர்கள் செழித்து வளர்ந்திருக்கின்றன. மலர் சாகுபடி தொடங்கி மூலிகை சாகுபடி வரை அனைத்தும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டு, முறையாக விற்பனையும் செய்யப்படுகிறது. இவ்வாறு திட்டமிட்டு வெள்ளாமை பார்க்கும் மணிவண்ணனின் பண்ணைக்கு ஒரு காலைப்பொழுதில் சென்றிருந்தோம். மலர் அறுவடையில் ஈடுபட்டிருந்தவர், நம்மைக் கண்டதும் புன்னகையோடு வரவேற்று பேச ஆரம்பித்தார்.
``மற்ற பகுதிகளில் உள்ளதைப்போலவே எங்கள் பகுதியிலும் நெல்தான் பிரதானப் பயிர். எனது தாத்தா, அப்பா காலத்திலும் நெல் சாகுபடிதான் செய்தார்கள். ஆனால், நான் வேறு பயிர் சாகுபடி செய்யலாம், அதுவும் புதுமையான முறையில் விளைச்சல் எடுக்கலாமென நினைத்து விவசாயத்திற்குள் வந்தேன். பதிமூன்று வயதிலேயே உழவு வேலையெல்லாம் பார்ப்பேன். சிறுவயதிலேயே அனைத்து விவசாய வேலைகளும் எனக்கு அத்துப்பிடி. அதனால், அப்பாவுக்கு விவசாயத்தில் துணையாக இருந்தேன். பின், 24 வயதில் முழுநேரமாக விவசாயம் செய்யலாமென விவசாயத்திற்குள் வந்தேன். அப்போதே, கரும்பு சாகுபடி செய்து அதை நாட்டுச்சர்க்கரையாக மதிப்புக்கூட்டி விற்பனை செய்தேன். அதைத் தொடர்ந்து முப்பத்தி எட்டு வருடங்களாக தொடர்ந்து விவசாயம்தான் எனது தொழிலாக இருக்கிறது.
இப்போது எனக்குச் சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தில் அறுபது வகையான பயிர்களை சாகுபடி செய்கிறேன். அதாவது, 10 வகையான மூலிகைச் செடிகள், 10 வகையான மரப்பயிர்கள், 10 வகையான பழமரங்கள், 10 வகையான காய்கறிகள், 10 வகையான கொடிகள், 10 வகையான மலர்கள் என அனைத்தும் உண்டு. எனது தோட்டத்தில் விளைவித்திருக்கிற அனைத்து பயிர்களுமே சுழற்சி முறையிலும் சீசன் முறையிலும் மகசூல் தரக்கூடியவை. அதாவது, தினமும் அறுவடை செய்யக்கூடிய பயிர்களில் இருந்து வருடத்திற்கு ஒருமுறை அறுவடை செய்யக்கூடிய பயிர்கள் வரை அனைத்தும் உண்டு. மலர் சாகுபடியைப் பொருத்தவரை பன்னீர் ரோஸ், பாரிஜாதம், செண்பகம், மனோரஞ்சிதம், தாமரை உட்பட அனைத்தும் உண்டு. இவை அனைத்திலிருந்தும் தினமும் அறுவடை நடைபெறும். அதேபோல, கத்தரி, எலுமிச்சை, மா, இஞ்சி, சுரைக்காய், பூசணி போன்றவையும் தினந்தோறும் பலன் தரக்கூடியவை. இவை அனைத்தையும் தினசரி விற்பனைக்காக அறுவடை செய்வேன்.
அதுபோக சாத்துக்குடி, வெற்றிலை, வள்ளி கிழங்கு, கொடிஉருளை என பல பயிர்கள் அறுவடை தந்தவண்ணம் இருக்கும். எல்லா வகையான பயிர்களையும் சிறிதளவு பயிரிடுவேன். எல்லாப் பயிர்களிலும் இருந்து ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 2 முதல் 5 கிலோ வரை அறுவடை செய்வேன். அந்த வகையில் ஒரு நாளைக்கு 30 கிலோ விளைபொருட்கள் விற்பனைக்கு செல்லும். அந்த வகையில் ஒரு நாளைக்கு இரண்டாயிரம் வரை வருமானம் கிடைக்கிறது.நெல்லி, மா, சாத்துக்குடி உள்ளிட்ட பயிர்களில் ஆண்டுக்கு ஒருமுறை சீசன் நேரத்தில் அறுவடை செய்து விற்பனை செய்கிறேன். கடந்த வருடம் மா வில் இருந்து மட்டும் 85 ஆயிரம் கிடைத்தது. எனது பண்ணையில் உள்ள அனைத்து சாகுபடியுமே இயற்கை முறை சாகுபடிதான். உற்பத்திச் செலவை குறைக்க வேண்டும், நல்ல ஆரோக்கியமான விளைபொருட்களை விளைவிக்க வேண்டுமென நினைத்துதான் கடந்த 15 வருடங்களாக இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். அந்த வகையில் உற்பத்தி செலவை குறைக்கும் நோக்கில்தான் எனது விவசாய முறை இருக்கும்.
ஆரம்பத்தில் இயற்கை இடுபொருட்கள், மர இலைகள், கோடை உழவு போன்ற விசயங்களை செய்துவந்தேன். தற்போது எந்த இடுபொருட்களும் கொடுக்காமல் இயற்கையாகவே மகசூல் தரும் அளவிற்கு, பயிர்களை வளர்த்து வருகிறேன். இப்போது, எனது பண்ணையில் விளையும் பொருட்களுக்கு 10ல் 1 பங்குதான் செலவு செய்கிறேன். அதாவது, ரூ.1000 வருமானம் என்றால் ரூ.100 செலவு. அதற்காகத்தான், மலர் சாகுபடியைக் கூட நான் மட்டுமே அறுவடை செய்யக்கூடிய மலராக பயிரிட்டிருக்கிறேன். எனது உழைப்பு மட்டும்தான் செலவு. உரம், நீர், பராமரிப்பு என எதுவுமில்லாமல் காட்டில் தானாகவே விளையும் பயிர்களைப்போல, எனது தோட்டப் பயிர்களையும் முழுமையான இயற்கை விவசாய பயிர்களாக மாற்றும் முயற்சியில் இருக்கிறேன்’’ என பேசி முடித்தார் மணிவண்ணன்.
தொடர்புக்கு: மணிவண்ணன்: 93610 53327.
பயிர் சாகுபடி போக தனது பண்ணையில் குளம் அமைத்து மீன் வளர்ப்பு பணியை தீவிரப்படுத்தி வருகிறார் மணிவண்ணன். அதுபோக, 150 கோழிகளும் நாட்டுப் பசுமாடுகளும் வளர்த்து வருகிறார். கோழியிலிருந்து கிடைக்கும் முட்டை மூலம் தினசரி வருமானம் கிடைக்கிறது. கோழிகள் திறந்தவெளியில் பண்ணை முழுவதும் மேய்ச்சலுக்கு செல்வதால், அவை வெளியேற்றும் கழிவுகள் பயிர்களுக்கு உரமாகிவிடுகின்றன.