கோடை நெருங்கிவிட்டது. நீர் வறட்சி அதிகமாகவே இருக்கும். குறிப்பாக வெயிலில் விளையாடும் குழந்தைகளுக்கு நீர் சமநிலை பாதுகாப்பது அவசியம். நீர் வறட்சிக்கு தண்ணீர் மட்டும் குடிக்காமல், உடன் பழங்கள் சேர்ப்பதால், நீருடன் பல ஊட்டச்சத்துகளும், பயன்களும் கூட கிடைக்கும். இதோ பழங்களும் அதன் இன்றியமையா பலன்களும். ஆரஞ்சுப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேனி பளபளப்பாக இருக்கும். அத்திப் பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் மாதவிடாய் வயிற்று வலி நீங்கும்.தினமும் அன்னாசிப்பழம் சாப்பிட்டால் பெண்களுக்கு வெள்ளைப் படுதல் குணமாகும்.அத்திப்பழம் சாப்பிட்டால் தாம்பத்யம் மேம்படும். அத்திப்பழத்தை தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டால் ஆண்மை பெருகும்.
இரவு படுப்பதற்கு முன்பு சில பேரீச்சம்பழங்களை சாப்பிட்டு பால் குடித்து வந்தால் உடல் வலிமை பெறும். கோவைப்பழம் சாப்பிடுவதால் பல்வலி குணமாகும். பேயன் வாழைப்பழம் வெப்பத்தைக் குறைக்கும். மாதுளம் பழத்தை வேகவைத்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு குணமாகும். மாதுளம் பழம் சாப்பிட்டால் ஜலதோஷம் குணமாகும்.மாம்பழம், பப்பாளிப் பழம் இரண்டையும் தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் மூலநோய் குணமாகும்.
தினமும் நாவல்பழம் சாப்பிட்டு வந்தால் விந்துவைக் கட்டுப்படுத்தும். எலுமிச்சம் பழம் மலச்சிக்கலைப் போக்கும். கமலாப்பழம் உடல் உஷ்ணத்தை தணித்து பித்தக் கோளாறுகளை நீக்கும். மாம்பழம் சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் சீராகும். திராட்சைப்பழம் சாப்பிட்டு வந்தால் ஈரல் நோய் குணமாகும். செவ்வாழைப்பழம் கல்லீரல் வீக்கத்தையும், சிறுநீர் பிரச்னைகளையும் குணமாக்கும்.
பச்சைவாழைப்பழம் குளிர்ச்சியைக் கொடுக்கும். தினமும் பப்பாளிப்பழம் சாப்பிட்டு வந்தால் செரிக்கும் திறன் பெருகும். ரஸ்தாளிப்பழம் கண்ணிற்கும், உடல் வலிமைக்கும் நல்லது. mமாதுளம்பழச் சாற்றில் பால் சேர்த்து சாப்பிட இரும்புச் சத்து கிடைக்கும். தினந்தோறும் அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும். தினமும் பகலில் சப்போட்டா பழம் சாப்பிட்டால் இரவில் நன்கு தூக்கம் வரும். வில்வப்பழம் சாப்பிட்டு வந்தால் மூளை சம்பந்தமான கோளாறுகள் நீங்கும்.மறதி நோய் தீரும்.
இலந்தைப் பழத்தை மிக்ஸியில் அரைத்து கருப்பட்டி சேர்த்து பருகி வந்தால் மூளைப்பதற்றம் ஏற்படாது. நன்கு தூக்கமும் வரும். தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை குணமாகும். தர்ப்பூசணிப் பழச் சதையை மிக்ஸியில் போட்டு அடித்து சிறிதளவு பால், இனிப்பு, ஏலக்காய் ஆகியவைகளையும் சேர்த்து அடித்து தேவையான ஐஸ் துண்டுகளையும் போட்டுச் சாப்பிட உடல் குளிர்ச்சி பெறும். தர்ப்பூசணிப் பழச் சதையை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து முகத்தினை அலம்பினால் முகம் பளிச்சென்று இருக்கும். பீச் பழம் சாப்பிட்டால் குடல் சுத்தம் அடையும். வயிற்றில் சதை போடாது. ‘அவகாடோ’ பழம் சாப்பிட்டால் கெட்ட கொழுப்பு குறையும்.
ஹார்மோன் உற்பத்தி அதிகரிக்கும்.கருப்பு பெர்ரி பழம் சாப்பிட்டால் சக்தி கிடைக்கும். செரிமானப் பிரச்னைகள் தீரும். ஸ்ட்ராபெர்ரி பழம் சாப்பிடுவதால் வளர் சிதை மாற்றம் அதிகரிக்கும். உடல் எடை குறையும். சேதமடைந்த திசுக்கள் சரியாகும்.கொழுப்பை எரிக்கும்.
- இரா. ரெங்கசாமி.
