Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாலவாக்கம் பகுதியில் தொடர் மின்வெட்டு; முதலமைச்சர் செல்லும் சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டம்: அதிகாரிகளுடன் வாக்குவாதம்; பரபரப்பு

துரைப்பாக்கம்: பாலவாக்கம் பகுதியில் தொடர் மின்வெட்டை கண்டித்து முதலமைச்சர் செல்லும் சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மின்வாரிய அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. தமிழ்நாடு முழுவதும் கடந்த பல நாட்களாக தொடர்ந்து பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டு ஆங்காங்கே பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிடுதல், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பாலவாக்கம் பகுதியில் இரவு 9 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பல மணி நேரமாக தொடர் மின்வெட்டு ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் இரவில் தூங்க முடியாமல் தவித்தனர். மின்வாரிய அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மக்கள் 100க்கும் மேற்பட்டோர் தங்களது குழந்தைகளுடன் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு அங்கிருந்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, பொதுமக்களின் கேள்விக்கு மின்வாரிய அதிகாரிகள் முறையான பதில் அளிக்காததால், கோபமடைந்த மக்கள், கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் நீலாங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், முதலமைச்சர் தினந்தோறும் இவ்வழியாகத்தான் செல்கிறார்.

அவருக்கு மின்தடை பற்றி தெரியாதா, அவர் வீட்டில் ஜெனரேட்டர் வைத்துகொண்டு தூங்குவார், எங்கள் வீட்டில் ஜெனரேட்டர் இல்லையே, நாங்கள் ஏழைகள், என்ன செய்வது என சரமாரி கேள்வி எழுப்பினர். இதையடுத்து தவெக நிர்வாகிகளை பொதுமக்கள் சூழ்ந்துகொண்டு கேள்வி எழுப்பியபோது, எந்தவித பதிலும் அளிக்காமல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து போலீசார் தொடர்ந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், \\”இப்பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. தற்போது நள்ளிரவு 12 மணி ஆகிறது.

குழந்தைகளை வைத்துகொண்டு தூங்க முடியாமல் தெருவில் நின்றுகொண்டிருக்கிறோம். இதை எல்லாம் பார்த்தால் எங்களை அரசு அலட்சியப்படுத்துவதுபோல் இருக்கிறது. நாங்கள் எல்லாம் கஷ்டப்படுகிற குடும்பத்தை சேர்ந்தவர்கள். பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், முதியவர்கள், நோயாளிகள் வீட்டில் தூங்க முடி யாமல் அவதிப்பட்டு வருகிறோம். மின்சாரம் துண்டிக்கப்பட்டபோது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டால் சுவிட்ச் ஆப் செய்து வைக்கின்றனர். எனவே, அமைச்சர் மற்றும் உயரதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து எங்கள் பகுதிக்கு சீரான மின்சாரம் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என தெரிவித்தனர்.