Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இலவச பஸ்சில் ஏறும் பெண்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்கின்றனர்: கேரள போக்குவரத்து துறை அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

திருவனந்தபுரம்: கேரளத்தில் கடந்த ஜூன் 15ம் தேதி முதல் அரசு போக்குவரத்து கழகத்தின் சாதாரண பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்திற்கு பெண்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. இலவச பஸ்சில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. இந்த திட்டத்தின் மூலம் கேரள அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு வருடத்திற்கு ரூ. 60 கோடி நஷ்டம் ஏற்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேரள போக்குவரத்து துறை அமைச்சர் சி.பி. ஜான் கொச்சியில் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியது: இலவச பஸ்களில் பெண்கள் முண்டியடித்து ஏறுகிறார்கள். ஆனால் அதே பெண்கள் தங்களது குழந்தைகளை பணம் கொடுக்கத் தேவையில்லாத பள்ளிகளில் கூட சேர்க்காமல் பணம் கட்டவேண்டிய தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். நோய் வரும்போது தனியார் மருத்துவமனைக்கு செல்லாமல் அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

ஏழைகள் போல பணக்காரர்கள் நடிக்கின்றனர். பணக்காரன் போல ஏழைகளும் நடிக்கின்றனர். கேரள மக்களின் இந்த மனநிலை எனக்குப் புரியவில்லை. இவ்வாறு அவர் பேசினார். இது குறித்து கேரள முன்னாள் அமைச்சர் ராஜீவ் கூறியது: கேரள பெண்களை இதற்கு முன்பு யாரும் இப்படி அவமானப்படுத்தியதில்லை. அமைச்சர் சி.பி. ஜானின் இந்த நடவடிக்கை தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு ஆளை எழுப்பி அவருடைய முகத்தில் காரித்துப்புவது போல் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.