திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பெண் காவலருடன் உல்லாசமாக இருந்து விட்டு 6 பவுன் நகை, பணம் மோசடி; வாலிபர் கைது
அண்ணாநகர்: திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பெண் காவலருடன் உல்லாசமாக இருந்து விட்டு 6 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் பணத்தை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அண்ணாநகரில் வசிப்பவர் சுமதி (33, பெயர் மாற்றம்). போலீசாக வேலை பார்க்கிறார். கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த வசந்த் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. செல்போனில் இருவரும் பேசி வந்தனர். இந்நிலையில் ஒருநாள், சுமதியிடம் வசந்த் பேசும்போது, ‘எனக்கு திருமணமாகவில்லை, உங்களை எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது. உங்களை காதலிக்கிறேன், உங்களை திருமணம் செய்து கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். மேலும் நேரில் சந்திக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதன்படி இருவரும் நேரில் சந்தித்தனர். நாளடைவில் சுமதியிடம் நைசாக பேசி அவருடன் உல்லாசாக இருந்துள்ளார்.
மேலும், அவரிடம் இருந்து 6 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் வாங்கி கொண்டு சுமதியிடம் பேசுவதை வசந்த் தவிர்த்து வந்தார். அப்போதுதான் அவர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதையடுத்து அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதில், ‘என்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி என்னுடன் உல்லாசமாக இருந்துவிட்டு நகை, பணத்தை பறித்து சென்று திருமணம் செய்ய மறுத்த வசந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். இதையடுத்து வசத்துக்கு போன் செய்து போலீசார் வரவழைத்தனர். உடனே அவர், இன்று காலை காவல் நிலையத்துக்கு வந்தார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் வசந்த்தின் உண்மையான பெயர் சிங்காரவேலு (35), சொந்த ஊர் தர்மபுரி மாவட்டம் என்பதும், ஏற்கனவே திருமணமாகி மனைவியுடன் வசித்து வருவதாகவும் முதல் திருமணத்தை மறைத்து சுமதியிடம் பழகி திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி அவருடன் உல்லாசமாக இருந்து நகை மற்றும் பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து சிங்காரவேலனை கைது செய்து கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுவது, நகை மற்றும் பணத்தை மோசடி செய்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

