‘‘பெண் ஏட்டு விவகாரம் என்னவாம்...’’ என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘மான்செஸ்டர் மாநகரை சேர்ந்த வில்வித்தை பயிற்சியாளர் தமிழகத்தில் மலராத கட்சியில் உறுப்பினராக இருந்தார். இவர் தன்னிடம் பயிற்சிக்கு வந்த ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி அந்த பயிற்சி மையத்தில் இருந்து விலகி வேறொரு பயிற்சி மையத்தில் சேர்ந்து கொண்டார்.
அதோடு இல்லாமல் பாலியல் தொல்லை கொடுத்த பயிற்சியாளர் மீது சிறுமியின் பெற்றோர் மேற்கு மகளிர் போலீசில் புகார் கொடுத்திருக்காங்க. அங்கு ஸ்டேசன் டூட்டியில் இருந்த ஜெயமான பெண் தலைமை காவலர் சட்டப்படி வழக்கு பதிவு செய்வதற்கு பதிலா தவறு செய்த பயிற்சியாளர்க்கு ஆதரவா செயல்பட்டதோடு புகார் அளிக்க வந்த சிறுமியின் பெற்றோரையும் மிரட்டி அனுப்பி இருக்கிறார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பில் இருந்து சிஎம் செல்லுக்கு பெட்டிசன் அனுப்பி இருக்காங்க.
அதன்பிறகு தான் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கே தகவல் தெரிந்திருக்கு. அதன்பிறகு சிறுமியின் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டு முறைப்படி போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டதாம். ஆனா தப்பு செய்த தலைமை காவலர் மீது இதுவரையும் எந்த நடவடிக்கையும் எடுக்கலைன்னு சக போலீஸ்காரங்களே அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்காங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலை கட்சியில் மாஜி அமைச்சருக்கு எதிராக உள்ளடி வேலையில் இறங்கியிருக்கும் மற்றொரு மாஜி அமைச்சர் பற்றி சொல்லுங்க..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘2026 சட்டமன்ற தேர்தலில் கடலோர மாவட்ட தொகுதியில் மாஜி அமைச்சர் தேர்தலில் நிற்காமல் இருப்பதற்காக சில உள்ளடி வேலையில் மற்றொரு மாஜி அமைச்சரான மணியானவர் இறங்கியிருக்காறாம்...
இதில் அவருக்கு நெருக்கமான மூத்த நிர்வாகி ஒருவரின் பெயரை தலைமை இடத்திற்கு பரிந்துரை செய்திருக்காறாம். அந்த மூத்த நிர்வாகி, நமது கட்சிக்காக கடுமையாக உழைத்திருக்காரு. இதனால் அவருக்கு தான் இந்த தடவை சீட் கொடுக்க வேண்டும் என தலைமையிடத்தில் பொய் சொல்லி இருக்காரு. ஆனால் இதுபற்றி தலைமையிடத்திற்கு தெரியாது என கட்சிக்குள்ளே அரசல் புரசலாக பேசிக்கிறாங்களாம்.
இந்த தகவல் தெரிய வந்த அந்த மாஜி அமைச்சரின் ஆதரவாளர்களான நிர்வாகிகள், கட்சிக்காக அயராது உழைப்பவர்களுக்கு சீட் வாங்கி கொடுக்காத மணியானவர், அவரது நெருக்கமானவருக்கு தான் சீட் வாங்கி தருவதற்கான குறிக்கோளாக இருந்து வர்றாரு. இதனால் மாஜி அமைச்சர் மணியானவரு பற்றி அவருக்கு எதிராக தலைமையிடத்தில் புகார் தெரிவிக்க அதற்கான வேலையில் இறங்கியிருக்காங்களாம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலைக்கட்சி தலைவர் ஊரில் நிலைமை சரியில்லையாமே..’’ என சந்தேக தொனியில் கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சியின் தலைவர் ஊரில் கட்சி நிர்வாகிகளிடையே மோதல் அதிகரித்துக்கொண்டே இருக்குதாம். கட்சியை சீரமைத்து கொண்டு செல்லும் வகையில் மொரப்பூரைச் சேர்ந்த மாஜி ஒருவரை கொண்டு வந்தாராம் இலைக்கட்சி தலைவர். இவ்வாறு மாங்கனி ஊருக்கு வந்தவரை அனைத்து நிர்வாகிகளும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றாங்களாம்.
ஆனால் அவருக்கு இலைக்கட்சி தலைவர் கொடுத்த அதிகாரத்தை வச்சி அதிரடி காட்டிட்டாராம். மூத்த நிர்வாகிகளுக்கு மாநில பொறுப்பு கொடுத்து ஓய்வு கொடுத்திட்டாங்களாம். கண் கெட்டபிறகு சூரியநமஸ்காரம் என்பது போல பதவி பறிபோனபிறகு தான் எல்லோரும் விழித்தாங்களாம். அவரை மாங்கனி நகரில் இருந்து சொந்த ஊருக்கே விரட்டிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் ஓரங்கட்டப்பட்டவர்கள் அணி திரண்டாங்களாம். தனக்கு ஊரெல்லாம் எதிர்ப்பு கிளம்பியதை தெரிஞ்சிக்கிட்ட மொரப்பூர்காரரோ ஓட்டமாக ஓடி இலைக்கட்சி தலைவரிடம், வயதான காலத்திலும் கட்சியை வலுப்படுத்தும் பணியில் தான் எனது உழைப்பை கொடுத்துக்கிட்டிருக்கேன். ஆனா என்னை விரட்டுவதற்கான அனைத்து வேலைகளையும் செய்கிறார்கள்.. எனவே என்னை சொந்த ஊருக்கே அனுப்பிடுங்கள் என கண்கலங்கினாராம்.
இதனை புன்முறுவலோடு கேட்டுக்கிட்ட இலைக்கட்சி தலைவர், கொடுத்த வேலையை செய்யுங்க என்று கூறி அனுப்பிட்டாராம்.. இதனால அந்த பொறுப்பாளர் ரொம்பவே ஹேப்பியாகிட்டாராம். சட்டையை முறுக்கிவிட்டுக்கிட்டு செல்லும் அவர், கட்சி ஆட்சியில் இருந்தபோது யாரெல்லாம் எவ்வளவு சம்பாதித்தார்கள் என்ற குற்றச்சாட்டையும் சொல்லி மாங்கனி மாநகர நிர்வாகிகளை பீதியடைய செஞ்சிருக்காராம்.
அதோடு மொரப்பூர் அரசியலை விட்டு வெளியே வந்து ரெண்டு வருசமாகிப் போச்சு.. இனிமேல் அங்கு செல்வதை விட மாங்கனி மாநகரிலேயே அரசியலை தொடரப்போவதாகவும் சொல்லியிருக்காராம். இதற்காக குடியிருப்பு மட்டுமின்றி ஓட்டு உரிமையையும் மாங்கனி நகருக்கு மாற்றபோவதாக முடிவு செஞ்சதோடு மட்டுமல்லாமல் நான் யார் என காட்டுகிறேன் என வேட்டியை மடிச்சி கட்டுறாராம். அதே நேரத்துல எதிரணியினரும் அவருக்கு பதில் கொடுக்கும் வகையில் பட்டை தீட்டிக் கிட்டிருக்காங்களாம்.
ஒரு ஏக்கர் நிலத்தை கொண்ட மொரப்பூராருக்கு நூறு ஏக்கரில் நிலம் வந்தது எப்படி என்ற கேள்வியோடு, எந்த மாஜி மந்திரிக்கெல்லாம் அவர் வால்பிடித்து வாங்கினார் என்ற கேள்வியை எழுப்பியிருங்காங்களாம். இதற்கான முழு ஆதாரத்தையும் தர்மபுரியை சேர்ந்தவர்கள் எடுத்துக் கொடுத்திருக்காங்களாம்.. இதே நிலை நீடித்தால் இலைக்கட்சி தலைவர் ஊரில் இலைக்கட்சி ஜொலிக்காது என்று ரத்தத்தின் ரத்தங்கள் சொல்றாங்க..’’ என்று சொல்லி முடித்தார் விக்கியானந்தா.


