Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து காலமானார்: மதுரையில் இன்று இறுதிச் சடங்கு

மதுரை: நெல்லையை சேர்ந்தவர் நெல்லை சு.முத்து (74). கேரள மாநிலம் திருவனந்தபுரம் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றினார். மறைந்த முன்னாள் ஜனாதிபதியும், அணு விஞ்ஞானியுமான அப்துல் கலாமுடன் பணியாற்றியுள்ளார். அறிவியல், விண்வெளி தொடர்பாக இவர் ஏராளமான நூல்கள் மற்றும் கட்டுரைகள் எழுதியுள்ளார். இவரது 4 புத்தகங்களுக்கு தமிழ்நாடு அரசு சிறந்த நூலுக்கான விருதை வழங்கியுள்ளது.

பணி ஓய்விற்கு பின் சு.முத்து திருவனந்தபுரம் மண்விளையில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் பிற்பகலுக்கு பின்னர் இவரது வீடு திறக்கப்படவில்லை. பக்கத்துவீட்டினர் கதவைத் தட்டியும் திறக்கவில்லை. மதுரையில் உள்ள அவரது மகளான டாக்டர் கலைவாணிக்கு தெரிவித்தனர். அவர் ெசல்போனுக்கு தொடர்பு ெகாண்டும் எடுக்காததால் கதவை உடைத்து பார்க்குமாறு கூறியுள்ளார்.

இதையடுத்து கதவை உடைத்து பார்த்தபோது முத்து, குளியலறை அருகே கீழே விழுந்து இறந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்து ஸ்ரீகாரியம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனைக்குப் பின் திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தில் சு.முத்துவின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தமிழ்ச்சங்க புரவலர் பி.ஆர்.எஸ்.முருகன், தலைவர் முத்துராமன் உள்பட ஏராளமானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். அதன்பின் உடல் மதுரை கலைநகரில் உள்ள மகள் டாக்டர் கலைவாணியின் வீட்டுக்கு நேற்று இரவு வந்தது. இன்று இறுதிச் சடங்கு நடக்கிறது.

மறைந்த நெல்லை சு.முத்துவுக்கு மரகதம் என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். முதல்வர் இரங்கல் செய்தி: முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், இஸ்ரோ முன்னாள் அறிவியலாளர் மற்றும் எழுத்தாளர் நெல்லை சு.முத்து மறைந்த செய்தியறிந்து வேதனையுற்றேன். இந்தியாவுக்கு பெருமை சேர்த்து, தமிழ்மொழிக்கு வளம் சேர்த்து வாழ்ந்து மறைந்துள்ள நெல்லை சு.முத்துவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.