வருமானத்தை மீறி ரூ.8.35 கோடி சொத்து குவிப்பு அதிமுக மாஜி அமைச்சர் வங்கி லாக்கர்களில் சோதனை: ஆவணங்களை எடுத்து சென்ற விஜிலென்ஸ் போலீசார்
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தொகுதி எம்எல்ஏவாக அதிமுகவை சேர்ந்த சேவூர் எஸ்.ராமச்சந்திரன் இருந்து வருகிறார். இவர் கடந்த 2016 முதல் 2021 வரை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சராக இருந்தபோது, வருமானத்தை மீறி பல கோடி ரூபாய்க்கு சொத்து வாங்கி குவித்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தது. திருவண்ணாமலை விஜிலென்ஸ் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் வருமானத்தை மீறி 125.39 சதவீதத்திற்கு, ரூ.8.35 கோடி மதிப்பில் சொத்துகள் வாங்கி குவித்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, முன்ளாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், அவரது மனைவி மணிமேகலை, மகன்கள் சந்தோஷ்குமார், விஜயகுமார் ஆகிய 4 பேர் மீது கடந்த 16ம் தேதி விஜிலென்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, கடந்த 17ம் தேதி திருவண்ணாமலை மற்றும் வேலூர் விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டர்கள் அருள்பிரசாத், மைதிலி தலைமையிலான 20 பேர் கொண்ட குழுவினர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், அவரது மகன்கள் சந்தோஷ்குமார், விஜயகுமார் ஆகியோர் வீடுகளில் சுமார் 15 மணி நேரம் சோதனை செய்தனர். இதில், மகன் வீட்டில் ரூ.1.75 கோடி மற்றும் சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் ரூ.6.28 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தாக விஜிலென்ஸ் போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மகன் சந்தோஷ்குமார், மனைவி மணிமேகலை, மருமகள் சுவர்ணாம்பிகா ஆகிய 3 பேரையும் அழைத்து ஆரணி டவுன் தச்சூர் சாலையில் உள்ள வங்கியில் கணக்கு விவரங்கள், லாக்கரில் வைத்திருந்த நகைகளின் ஆவணங்கள் குறித்து திருவண்ணாமலை விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டர் அருள் பிரசாத் தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் நேற்று மதியம் 1 மணிக்கு அதிரடி சோதனை நடத்தினர்.அப்போது, அவர்களது வங்கி கணக்கிற்கு யார், யார் பணம் அனுப்பியுள்ளனர்.
இவர்கள் யாருக்கு பணம் அனுப்பியுள்ளனர். என்ன காரணத்திற்காக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. வங்கி லாக்கரில் உள்ள நகைகளின் விவரங்கள் உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்தினர். இந்த சோதனை மதியம் 1 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதையடுத்து மற்றொரு மகன், சேவூர் ராமச்சந்திரன் ஆகியோரின் வங்கி விவரங்கள் மற்றொரு நாள் ஆய்வு செய்யப்படும் என்று விஜிலென்ஸ் போலீசார் தெரிவித்தனர்.
