‘‘பிரச்னையில் சிக்கிய காக்கி அதிகாரி மேல மீண்டும் ஆதாரங்களுடன் புகார் போயிருக்காமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘மான்செஸ்டர் மாநகருக்கு உட்பட்ட வடவள்ளி ஸ்டேசனில் தூத்துக்குடிக்கு பேர் போனதை முதல் பாதியாக பெயரில் வைத்துள்ள ஆறு எழுத்து எஸ்எஸ்ஐ ஒருவர் பணியாற்றி வர்றாரு.. இவர் ஏற்கனவே பல்வேறு பிரச்னைகளில் சிக்கி சஸ்பெண்ட் ஆன நிலையில் மான்செஸ்டர் மாநகருக்கு சமீபத்தில் போஸ்டிங் வாங்கிக்கொண்டு வந்துருக்காராம்.. இவருக்கு சொந்தமான நிலம் முருகப்பெருமானின் மூன்றாவது ஊரில் இருக்காம்..
நிலத்திற்கு அருகில் முதியவர் ஒருவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. அந்த நிலத்தில் இருந்து எஸ்எஸ்ஐ மண் எடுத்து தனது நிலத்திற்கு பயன்படுத்தி வந்தாராம்.. இதனை அந்த முதியவர் தட்டிக்கேட்டபோது போலீஸ் அதிகாரத்தை காட்டி மிரட்டியதோடு இல்லாமல் முதியவரின் தோட்டத்தில் இருந்த தண்ணீர் பைப்புகளையும் அடித்து உடைத்து சேதப்படுத்தினாராம்.. அதோடு அல்லாமல் முதியவர் தன்னுடைய சொந்த நிலத்திற்கு செல்லக்கூட தடைவிதித்து வருகிறாராம்.. இதனால் மன உளைச்சலான முதியவர் அங்குள்ள போலீசில் புகார் அளித்துள்ளாராம்..
ஆனா தன்னுடைய அதிகாரத்தை வைத்து புகார் மீது நடவடிக்கை எடுக்காம எஸ்எஸ்ஐ சரி செய்துவிட்டாராம்.. தற்போது எஸ்எஸ்ஐ மான்செஸ்டர் மாநகருக்கு போஸ்டிங் வாங்கி வந்துவிட்டதால் கமிஷனரிடம் ஆதாரங்களுடன் புகார் அளிக்க முதியவர் முடிவு செய்துள்ளாராம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கும்பாபிஷேகத்திற்கு வசூல் வேட்டையில் ஈடுபட்ட அதிகாரி ஒரு பகுதியை செலவிட்டு, மீதியை தன் வசப்படுத்திக்கிட்டாராமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தூங்கா நகரின் குளம் பகுதியில்தான் பொதுத்துறையின் அலுவலக வளாகம் இருக்கு.. இங்கு 30 ஆண்டுகளை கடந்த பழமையான விநாயகர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டதாம்.. இக்கோயில் கும்பாபிஷேகத்தைச் சிறப்புடன் செய்து முடிக்க முடிவு செய்தவங்க, அந்த பொறுப்பை இங்கிருக்கும் தண்ணீர் துறையின் தலைமையான மூன்றெழுத்து அதிகாரியிடம் ஒப்படைத்தாங்களாம்.. அவரோ ஒரு மடங்கே செலவுபிடிக்கும் இந்த கும்பாபிஷேகத்திற்கு நூறு மடங்கிற்கு வசூல் வேட்டையை நடத்திக் கொண்டிருக்கிறாராம்..
தன் கட்டுப்பாட்டிற்கு கீழான பெரிய ஆறு துவங்கி சிறிய ஆறு வரையிலும் அத்தனை ஆற்றுக் கோட்டங்களின் அதிகாரிகளிடமும் ஒவ்வொரு கோட்டத்திற்கும் தலா ரூ.50 ஆயிரமென பல லட்சங்களையும், ஒப்பந்ததாரர்கள் துவங்கி பலரிடமும் இஷ்டத்திற்கு நன்கொடைகளும் என பல லட்சங்களை வாரி வசூலித்துள்ளாராம்.. ஆனால் ஒரு பகுதியை மட்டுமே கும்பாபிஷேகத்திற்கென செலவிட்டு, மீதியை தன் கைவசப்படுத்திக் கொண்டிருப்பதாக இவரது வசூல் வேட்டையில் பாதிக்கப்பட்ட சக அதிகாரிகள் புலம்பி தவிக்கின்றனராம்..
கும்பாபிஷேகத்திற்கு பிறகு வரவு- செலவு விவரங்கள் அறிந்த சக பணியாளர்களில் பலரும், கடவுள் பெயரைச் சொல்லி நடந்திருக்கும் இந்த மோசடி வசூல் குறித்த விவரங்களை பலதரப்பட்ட ஆதாரங்களுடன் தமிழக தலைநகரத்து தண்ணீர் துறை தலைமை அதிகாரிக்கு புகார்களாக குவித்து வருகின்றனராம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘வருவாய்த்துறை பச்சை கொடியும், காக்கிகள் பச்சை சிக்னலும் காட்டுறதால, கனிமம் கடத்தல் ஜோரா நடக்குதாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கிரிவலம் மாவட்டத்துல செய் ஆறு வட்டத்துல கனிமம் அதிகமாக கடத்தப்படுதாம்.. குறிப்பாக அந்த வட்டத்துல இருக்குற, வாடி, பள்ளம், தாங்கல், பள்ளி என்று முடியுற பகுதிகள்ல இருந்து கனிமம் கடத்துறாங்களாம்.. இந்த கடத்தலுக்கு வட்டத்தோட ஆட்சியரு பச்சைக்கொடி காட்டிட்டாராம்.. இவருடன் கூட்டணியில், இவருக்கு கீழ பணிபுரிஞ்சு வர்ற, வருவாய்த்துறைய சேர்ந்த 2 பேரும் கூட்டணி சேர்ந்து கடத்தலுக்கு உடந்தையாக இருந்து வேண்டியதை வாங்கிக்கிட்டு சந்தோஷமாக இருக்குறாங்களாம்..
இவங்க பச்ைச கொடி காட்டுன மாதிரி, காக்கிகள் துறையில இருந்து பச்சை சிக்னல் காட்டிட்டாங்களாம்.. இதனால, கனிமம் எந்த தடையும் இல்லாம ஜோரா நடக்குதாம்.. கடத்தல் மேட்டர், வருவாய் கோட்டத்தோட அதிகாரிக்கு தெரிஞ்சதும், வட்ட அதிகாரியையும், மற்றவங்கைளயும் அழைச்சி, லெப்ட் ரைட், வாங்கி அனுப்புறாங்க.. ஆனாலும், ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்காதுன்ற பழமொழிக்கு ஏற்ப பச்சைக் கொடியுடன், பச்சை சிக்னலும் காட்டிக்கிட்டுதான் இருக்குறாங்களாம்.. கடத்தலும் தடையில்லாம நடக்குதாம்..
இனியாவது தடுத்து கனிமத்தை காப்பாத்தணும் என்பதுதான் ஜனங்களோட குரலாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இலைக்கட்சி மாஜி எம்எல்ஏவின் பெண் வாரிசு வளர்ச்சியை தடுக்க இலைக்கட்சியை சேர்ந்தவங்களே மலராத கட்சி நிர்வாகிகளிடம் தூபம் போடுறாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கடைகோடி மாவட்டத்துல இலை கட்சியை சேர்ந்த மாஜி எம்எல்ஏவின் பெண் வாரிசின் வளர்ச்சியை தடுக்க உட்கட்சிக்காரங்களே உள்ளடி வேலைகளை பார்க்க தொடங்கி இருக்காங்களாம்..
சட்டமன்ற தேர்தல்ல, தனது தந்தை போட்டியிட்டு வென்ற தொகுதியை குறி வைச்சு அந்த பெண் வாரிசு கடந்த சில ஆண்டுகளாகவே வேலை பார்த்து கிட்டத்தட்ட தொகுதி முழுவதும் மாற்று கட்சிக்காரங்க கிட்ட கூட செல்வாக்கு பெரும் அளவுக்கு உயர்ந்து இருக்கிறாராம்.. இலைக்கட்சி கூட கூட்டணியில் உள்ள மலராத கட்சியை சேர்ந்த மகாத்மா பெயரை கொண்டவர்தான் தற்போது எம்எல்ஏவாக இருக்காராம்.. சட்டமன்ற அலுவலகத்தை கூட திறக்காத இவரு மேல அவுங்க கட்சிக்காரங்களே கடும் அதிருப்தில இருக்காங்களாம்..
மீண்டும் இந்த மகானுக்கு சீட்டு கொடுத்தா தொகுதி, காலியாகி போகும் என்ற நிலைமை இருக்காம்.. இதனால அந்த கட்சியும், மீண்டும் இலை கட்சிக்கே தொகுதியை கொடுத்து விடலாமா என்றும் ஆலோசித்து இருக்காங்களாம்.. இதற்கு பதிலாக மேற்கு மாவட்டத்துல ஒரு தொகுதியை கேட்டு பெறுவோம் என முடிவு செய்து இருக்காங்களாம்.. அப்படி இலைக்கட்சிக்கு தொகுதி போனா, பெண் வாரிசு தான் வேட்பாளராக இருப்பார்னு மலராத கட்சிக்காரங்களே பேச தொடங்கி இருக்காங்களாம்..
ஆனால் அப்படி ஒரு நிலைமை வந்து இலைக்கட்சியை சேர்ந்த பெண் வாரிசு சீட்டு வாங்கி விடக்கூடாது என்பதால், இலைக்கட்சியை சேர்ந்தவங்க மலராத கட்சியை சேர்ந்தவங்களை சந்தித்து தூபம் போட தொடங்கிட்டாங்களாம்.. தொகுதியை மட்டும் விட்டு கொடுக்காதீங்க..
எப்படியாவது மகான் இல்லா விட்டாலும் வேற யாருக்காவது சீட்டு கேட்டு வாங்கிருங்க.. என வற்புறுத்தி வருகிறார்களாம்.. இந்த தொகுதி நிலவரம் இலைக்கட்சி தலைமையான சேலத்துக்காரர் கவனத்துக்கு போய் இருக்காம்.. அவரு யோசித்து பார்ப்போம்னு பெண் வாரிசுக்கு பதில் சொல்லி இருப்பதாகவும் தகவல் சொல்றாங்க..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.



