தேனிக்காரரின் ஆதரவு மாஜி மந்திரி அதிரடி நடவடிக்கையில் இறங்கப் போவதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘இலை கட்சியுடன் மலராத கட்சி கூட்டணி வைத்துள்ளதால் தேர்தலுக்கு முன் தேனிக்காரரின் ஆதரவு மாஜி அமைச்சர் அதிரடி நடவடிக்கையில் இறங்க தயாராகி விட்டாராமே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘இலை கட்சியுடன் மலராத கட்சி கூட்டணி வைத்துள்ளதால் இலை கட்சியில் இருந்து வெளியேறிய தேனிக்காரர், குக்கர் கட்சி தலைமையானவர் ஆகியோரை மீண்டும் இலைக்கட்சியில் சேர்ப்பது குறித்து அந்த கட்சி தலைமை முடிவு எடுத்துக்கொள்ளலாம் என மலராத கட்சியை சேர்ந்த மேலிடத்து தலைவர்கள் கூறிவிட்டார்களாம்.. இதனால் டெல்டா மாவட்டத்தில் உள்ள தேனிக்காரர் அணியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மலராத கட்சி மீது கடும் அதிருப்தியில் இருக்காங்களாம்.. இதில் முக்கியமாக அடுத்த கட்ட முடிவுக்கு கூட நிர்வாகிகள் தாயராகி வருகிறார்களாம்.. இந்த தகவல் தெரிய வந்த தேனிக்காரர், இலைக்கட்சியுடன் மலராத கட்சி கூட்டணி வைத்திருப்பது குறித்து வெளிப்படையாக யாரும் பேச வேண்டாம் என தனது நிர்வாகிகளுக்கு ரகசிய உத்தரவு வேற போட்டு இருக்காராம்..
ஆனால் நெற்களஞ்சியத்தை சேர்ந்த மாஜி அமைச்சர் ஒருவர், கொஞ்சம் நாளைக்கு பொருத்திருந்து பார்ப்போம்.. நம்ம நினைப்பது எதுவும் நடக்க வில்லை என்றால் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக அதிரடி நடவடிக்கையில் இறங்குவோம்னு தனது ஆதரவாளர்களிடம் பேசி இருக்கிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா.‘‘மீண்டும் கூட்டணி சேர்ந்ததால் மெடல் மாவட்டத்தில் இலைக்கட்சியில் புலம்பல் சத்தம் கொஞ்சம் அதிகமாகவே ஒலிக்குதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘தாமரை, இலை மீண்டும் சேர்ந்ததால் மெடல் மாவட்ட தாமரை கட்சியினர் சிலர் சோகத்தில் உள்ளனராம்.. காரணம், கடந்த சட்டமன்ற தேர்தலில் மெடல் தொகுதி தாமரைக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.. ரெடிமேட் உற்பத்தி நிறுவனம் வைத்திருக்கும் தாமரை வேட்பாளர், தொகுதியை கைப்பற்றி விடலாம் என்ற கணக்கில் பம்பரமாக சுற்றினார்.
மெடல் தொகுதி தங்களுக்கு கிடைக்காத சோகத்தில் இருந்த இலைக்கட்சியினர், சில தில்லாலங்கடி வேலைகளை பார்த்தாங்க.. மேலிடம் தந்த கரன்சியில் 80 சதவீதம் லபக் செய்து விட்டனராம்.. மேலும், தங்கள் கட்சியினரை, ஓட்டுப்போட விடாமல் செய்ததாகவும் தகவல் பரவியது.. தங்களது ஓட்டை இலைக்கட்சியினர் தடுத்து விட்டதாக கூட தாமரை கட்சியினர் புகார் தெரிவிச்சாங்க.. இப்ப மீண்டும் தாமரை, இலை கூட்டணி ஆகியிருச்சு.. இந்த சூழலில் மீண்டும் தாமரைக்கட்சி அல்லது கூட்டணி கட்சிக்கு ஒதுக்க மேலிடங்கள் திட்டமிட்டுள்ளதாம்.. கடந்த தேர்தல் தோல்வியை மனதில் கொண்டு, கூட்டணிக்கு ஒதுக்குங்க.. இல்லாட்டி ஒழுங்கா கட்சி வேலையை பார்க்கச் சொல்லுங்க.. என மெடல் மாவட்ட தாமரைக்கட்சி நிர்வாகிகள், மேலிடத்துல புகாராகவே சொன்னாங்களாம்.. அதே நேரம் மாவட்டத்துல 5 தொகுதி வரைக்கும் நாமதான் போட்டி போடணும்..
கூட்டணிக்கு 2 போதும் என இலைக்கட்சி நிர்வாகிகள், தங்கள் தலைமை வசம் கூறியுள்ளார்களாம்.. இன்னும் பந்தியே போடலை... அதுக்குள்ளே அந்த இலையில பாயாசத்துல முந்திரி பருப்பு எக்ஸ்டிரா இருக்குன்னு பேச ஆரம்பிச்சுட்டாங்களே.. இப்பவே இப்படின்னா தேர்தல் நெருங்கும்போது என்னனென்ன பஞ்சாயத்து வரப்போகுதோங்கிற கவலையில் இலைக்கட்சியில் புலம்பல் சத்தம் கூடுதலாகவே ஒலிக்குது..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தாமரை வலையில் சிக்கிய மாஜிக்கள் டெல்லிக்கு படையெடுக்கிறாங்களாமே தெரியுமா..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.‘‘சுற்றுலாவுக்கு பெயர்போன தென்மாநில யூனியனில் எப்படியாவது ஆட்சியை மலரச் செய்ய வேண்டுமென்பதில் தாமரை குறியாக இருக்கிறதாம்.. இதற்காக புல்லட்சாமியை தனது கைக்குள் வைத்துள்ள டெல்லி பவர்புல் தரப்பு, ஆள்கரைப்பு வேலைகளை ரகசியமாக தொடங்கி இருக்கிறதாம். ஏற்கனவே புல்லட்சாமி கட்சியில் மாஜி பிரதிநிதிகளிடம் தூது அனுப்பி இருந்தார்களாம்.. சிலர் விலைபோன நிலையில் வரவுள்ள பொதுத் தேர்தலில் தாமரையில் நிற்க பச்சைக்கொடி காட்டி விட்டார்களாம்..
வேலு பெயர் கொண்டவர் டெல்லி சென்று ஒன்றிய அமைச்சரை சந்தித்துள்ளாராம்.. மற்றவர்களும் அடுத்தடுத்து டெல்லி சந்திப்புக்கு தயாராகி வருகிறார்களாம்.. தேர்தல் செலவுக்கான ப-விட்டமினுடன், சில பதவிகளையும் தருவதாக ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியுள்ளதாம் தாமரை தரப்பு. குறைந்தது 15 தொகுதிகளில் களமிறங்கும் வகையில் ஆள்வளைப்பு வேலைகளில் இறங்கியுள்ளதால் விழிபிதுங்கி நிற்கிறதாம் புல்லட்சாமி தரப்பு. மாப்ள அவருதான்... ஆனா அவர் போட்டிருக்கிற சட்டை என்னுது என்ற பேச்சுதான் ஊர் முழுக்க உலாவுகிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கூட்டணி அறிவிப்பால் இரண்டு மாவட்ட இலைக்கட்சியினர் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்க.. தேசிய கட்சியினர் புதிய உற்சாகத்தில் திளைக்கிறாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலை கட்சி தேசிய கட்சியுடன் கூட்டணி சேர்ந்ததால் அல்வா, முத்து மாவட்ட இலை கட்சியினர் ஏக வருத்தத்தில் இருக்கிறார்களாம்.. அதாவது கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக இந்த கூட்டணி உடைந்ததால் இலை கட்சியின் இரு மாவட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் பட்டாசு வெடித்து கொண்டாடினார்களாம்.. ஆனால் தற்போது ஓராண்டில் சட்டமன்ற தேர்தல் நடக்கும் நிலையில் இலை கட்சியுடன் தேசிய கட்சி வந்து ஒட்டிக் கொண்டதே என்பது தென் மாவட்ட இலை கட்சியினருக்கு பேரதிர்ச்சியாக உள்ளதாம்.. ஏற்கனவே கடந்த மக்களவைத் தேர்தலில் பல தொகுதிகளில் 2ம் இடத்தைக் கூட பிடிக்க முடியவில்லை. அல்வா மக்களவை தொகுதி உள்ளிட்ட தொகுதிகளில் 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டோம். தற்போது தேசிய கட்சியுடன் மீண்டும் கூட்டணி என்பதால் இலை கட்சியில் இருக்கும் சிறுபான்மையினருக்கு கூட பதில் சொல்ல முடியவில்லையாம்..
அனைவரும் வெதும்பிப் போய் இருக்கிறார்களாம்.. இப்போதே நிலைமை இப்படி என்றால் தேர்தலின் போது மக்களை எப்படி சந்திக்க முடியும். சிறுபான்மை மக்கள் இருக்கும் பகுதிக்கு நுழையக் கூட முடியாதே.. அவர்கள் ஓட்டுகள் சிதறினால் தேர்தலில் அட்ரஸ் இல்லாமல் ஆகி விடுவோமே என இலை கட்சியினர் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்களாம்.. அதே நேரத்தில் தேசிய கட்சியினர் இலை கட்சி கூட்டணியால் புதிய உற்சாகத்தில் இருக்கிறார்களாம்.. இலை கட்சியினரை பார்த்து எள்ளி நகையாடுகிறார்களாம்.. இப்போதே இப்படி என்றால் இன்னும் போகப் போக எப்படி இருக்கும் என்பதுதான் இலை கட்சியினரின் கவலையாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.