Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மாஜி அமைச்சருக்கு செக் வைக்க இலை தலைமை முடிவு செய்திருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘இடம் மாறி வந்தாலும்கூட எண்பது பர்சன்ட் கமிஷன் கொடுத்து ஆகணும்னு ரொம்பவே கறார் காட்டும் அதிகாரியால் ஊழியர்கள் திக்குமுக்காடுறாங்களாமே...’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘கோவை மாநகராட்சி உதவி கமிஷனர்கள் சிலர், பல்வேறு குற்றச்சாட்டு காரணமாக திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டாங்களாம்.. அதில் ஒரு உதவி கமிஷனர், நிர்வாக பிரிவிற்கு ஏற்கனவே வந்துவிட்டார்.

தற்போது திருப்பூரில் பணியாற்றி வந்த ஒரு அதிகாரி, கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள வருவாய் பிரிவிற்கு உதவி கமிஷனராக வந்துள்ளார். இவர் வந்து சேர்ந்ததில் இருந்து, கரன்சி குவிப்பதில் பல்வேறு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறாராம்.. மாநகராட்சி வருவாய் பிரிவில் பணியாற்றும் வரி வசூலர்கள் மற்றும் ஊழியர்களிடமிருந்து 80 சதவீதம் கமிஷன் கேட்கிறாராம்.. ‘அப்போதுதான் நீங்கள் கொண்டுவரும் கோப்பில் கையெழுத்து போடுவேன்’ என முரண்டு பிடிக்கிறாராம்..

இதனால், பல ஊழியர்கள் திக்குமுக்காடுகின்றனராம்.. இவர், அமைதியாக இருந்து வேட்டு வைப்பதில் வல்லவராம்.. அதனால், இவரை கண்டு பல ஊழியர்கள் மிரண்டுபோய் இருக்கிறார்களாம்.. இவரை போன்ற அதிகாரிகள் வருவாய் பிரிவிற்கு லாயக்கு இல்லாதவர்கள் என மனக்குமுறலை தெரிவித்தார்களாம் சில நியாயமான ஊழியர்கள்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இலை கட்சியில் அடுத்த கட்ட நிர்வாகிக்கு பொறுப்பு கொடுத்து மாஜி அமைச்சருக்கு செக் வைக்க தலைமை முடிவு செய்து திரைமறைவில் ரகசியமா வேலை நடக்கிறதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘டெக்ஸ்டைல்ஸ்ஸ் மாவட்டத்தில் இலை கட்சியை சேர்ந்த மாஜி அமைச்சர் மோசடி வழக்கு ஒன்றில் சிக்கினார். அதற்கு அப்புறம் அவரை தலைமை கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறதாம்... இதனால அதிருப்திக்குள்ளான அந்த மாஜி, தலைமையிடத்தில் நெருக்கம் இல்லாமல் இடைவெளி விட்டு இருந்து வருகிறாராம்.. ஆரம்பத்தில் கட்சி தலைமையும் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம்.. இதே நிலைமை தொடர்ந்தால் கட்சிக்கு சரியிருக்காது என தலைமை நினைக்கிறதாம்...

தொடர்ந்து, அடுத்த கட்ட நிர்வாகிகள் சிலருக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க தலைமை முடிவு செய்துள்ளது. அவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம், அந்த மாஜிக்கு செக் வைப்பதற்கான வேலைகள் திரைமறைவில் ரகசியமாக நடந்து வருகிறதாம்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பஸ்களில் பயணிகளோடு பயணிகளாக பதுங்கி கடத்தப்படும் போதைப்பொருட்கள் சேர வேண்டிய இடத்திற்கு கரெக்டா சேர்ந்துவிடுகிறதாமே தெரியுமா...’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘தமிழகத்துல போதைப்பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்குது.. ஆனா, அண்டை மாநிலங்கள்ல இந்த தடை இல்லை. இதனால கர்நாடகாவுல இருந்து தமிழ்நாட்டுக்கு போதை பொருட்கள் கடத்தல் நடந்து வருது.. தமிழகத்துல தடை இருக்குறதால அவ்வளவு எளிதுல கொண்டுவர முடியாது. இதனால கடத்தல் கும்பல் மாற்று வழிகளை யோசிச்சு கடத்தலை தடையில்லாம செஞ்சி வர்றாங்களாம்.. அந்த மாற்று வழி, பயணிகளை போல பஸ்களில் கடத்துறதுதானாம்..

இதுக்கு ஒரு சில பஸ் ஓட்டுனரும், நடத்துனரும் துணையாக இருக்காங்களாம்.. இப்படி கடத்துற பொருட்கள் எல்லாமே, வெயிலூர் மாவட்டத்துல போய் சேர வேண்டிய இடங்களுக்கு சரியாக போய் சேர்ந்துடுதாம்.. ஆய்வு செய்றவங்க செஞ்சி நடவடிக்கை எடுத்துகிட்டுத்தான் இருக்குறாங்க.. இதுல காக்கிகளும் கொஞ்சம் அக்கறை கட்டினால் தான் தடுக்க முடியும்னு ஜனங்க பேசிக்கிறாங்க.. வெயிலூர் மாவட்டத்தை தாண்டி, தலைநகரத்துக்கும் இடையில இருக்குற மாவட்டங்களுக்கும் கடத்தப்படுறதாக புகார்கள் வந்திருக்குது..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘புஸ் வாணமான திறப்பு விழாவால் ஏமாற்றத்தில் இருக்காங்களாமே புதுச்சேரி வாசிகள் தெரியுமா..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘தீபத் திருநாளுக்கு புதுச்சேரியில் ரேஷன் கடைகளை திறந்து அரிசி, சர்க்கரை கொடுக்கிறோம் என அறிவித்தார் புல்லட்சாமி. அதுமட்டுமல்லாம மானிய விலையில் 10 பொருட்களை 500 ரூபாய்க்கு தருவதாகவும் உதார் விட்டார். இதற்காக ஒரு வாரத்துக்கு முன்பு பிரமாண்ட விழாவும் நடத்தி முடித்தார். அதன்பிறகு ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை விநியோகம் சூடுபிடிக்கும் என எதிர்பார்த்திருந்த புதுச்சேரி வாசிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியதாம்..

பெரும்பாலான இடங்களில் ரேஷன் கடைகளை மக்கள் தேடி அலையும் அவலத்தை காண முடியுதாம்.. அதுமட்டுமின்றி இன்னைக்கு வந்திடும், நாளைக்கு வந்திடும் என மானிய விலை பொருள் அங்காடி திறப்பும் புஸ்வாணமாகி போச்சாம்.. இதனால் விரக்தியின் உச்சகட்டத்திற்கு சென்ற புதுச்சேரி வாசிகள், இது நமக்கு கிடைத்த வரம் என்று புலம்பி வருகிறார்களாம்.. ஏற்கனவே புதுச்சேரியில் எதுவும் கிடைப்பதில்லை என விரக்தியிலுள்ள இடம்பெயர் வாசிகள் மீண்டும் தங்களது சொந்த மாநிலத்தை நோக்கி பார்வையை திருப்பி உள்ளார்களாம்..’’ என்கிறார் விக்கியானந்தா.

‘‘மனநல காப்பகத்துக்கு எம்பி நிதியில் வாங்கி கொடுத்த ஆம்புலன்ஸ் தனியார் நிறுவனத்தில் அடமானத்திற்கு போனது கலெக்டர் வரை புகாரா போயிருக்காமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கடைக்கோடி மாவட்டத்தில் உள்ள தனியார் மன நல காப்பகத்துக்கு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மாநிலங்களவை உறுப்பினர் நிதியில் இருந்து ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்திருக்காங்க.. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம்தான் ஆம்புலன்சு வழங்கப்பட்டு இருக்கு.. பெரும்பாலும் இதுபோன்று எம்.பி. நிதி, எம்.எல்.ஏ.க்கள் நிதியில் வழங்கும் வாகனங்கள், அரசு சார்பில் கொடுக்கப்பட்ட வாகனமாகத்தான் பதிவு செய்யப்படும்..

ஆனால் இந்த ஆம்புலன்சை சம்பந்தப்பட்ட தனியார் காப்பகத்தின் பெயரிலேயே பதிவு செய்திருக்காங்க.. அது மட்டுமில்லாமல் அந்த வாகனத்தை தனியார் நிறுவனத்தில் அடமானம் வைத்து, பணமும் வாங்கி இருக்காங்களாம்.. தற்போது இந்த விஷயம் முறைகேடாக பார்க்கப்படுகிறதாம்.. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு செல்ல, நடந்தது தொடர்பான முழு விவரங்களை விசாரிக்க உத்தரவு போட்டு இருக்காங்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.