சைவ, வைணவ சமயங்கள், பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு; முன்னாள் அமைச்சர் பொன்முடி விடுதலை: வழக்கு வாபஸ் பெறப்பட்டதால் ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை: சைவ, வைண சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சை கருத்துகள் தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான புகார் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, வழக்கில் இருந்து அவரை விடுதலை செய்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னையில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கடந்த 2025ம் ஆண்டு நடந்த கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து பேசியது சர்ச்சையானது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டார்.
இந்த சர்ச்சை பேச்சு தொடர்பாக, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி பாஜ மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்தன், பொன்முடிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். அவரது மனுவில், மத ரீதியாக வெறுப்புணர்வை தூண்டுதல், மத உணர்வுகளை புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் பொன்முடியை தண்டிக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கு எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கு நீதிபதி சி.சுந்தரபாண்டியன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, புகார்தாரர் உமா ஆனந்தன் நேரில் ஆஜராகி, வழக்கை திரும்ப பெறுவதாக கூறி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தனது பேச்சுக்கு பொன்முடி பொதுவெளியில் மன்னிப்பு கோரியுள்ளார். அவரது வயது மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு இந்த வழக்கை திரும்ப பெற்றுக்கொள்கிறேன்.
தவறு மனித இயல்பு. மன்னிப்பது தெய்வ செயல் என்பதால், யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல் எந்த சமாதானமும் இல்லாமல், வழக்கை திரும்ப பெற்றுக் கொள்கிறேன். வழக்கில் இருந்து பொன்முடியை விடுவிப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, பொன்முடிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி வழக்கில் இருந்து பொன்முடியை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.


