Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எடப்பாடி மரியாதை தரவில்லை என போனார்கள்; இப்போ புஸ்ஸி காலில் விழுகிறார்கள்; விஜய்யோ மதிக்கவே இல்லை: அதிமுக மாஜி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கிண்டல்

சென்னை: எடப்பாடி மரியாதை கொடுக்கவில்லை. அதனால் விலகுகிறோம் என்று சொல்வதை நம்ப யாரும் தயாராக இல்லை என்றும், விஜய்யை தேடி செல்பவர்களுக்கு அவமானங்கள்தான் மிச்சம் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அளித்த பேட்டி:

முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை கொடுக்கவில்லை. அதனால் தான் தவெகவில் இணைந்ததாக குற்றம் சாட்டி உள்ளார்களே?

2 பேரும் அதை அமைச்சராக இருக்கிற போது சொல்லியிருந்தாங்கன்னா நாடும் கட்சி தொண்டர்களும் நம்புவாங்க. எலெக்ஷனுக்கு நிக்கிறதுக்கு முன்னாடி சொல்லியிருந்தாங்கன்னா நம்பியிருப்பாங்க. கட்சி ஆட்சிக்கு வந்திருக்கிற போது இதை சொல்லியிருந்தாங்கன்னா நம்பியிருப்பாங்க. இப்போ ஆட்சி, அதிகாரத்துல இல்லாததுனால அவங்க சொல்றதை வந்து யாரும் நம்புறதுக்கு தயாராக இல்லை.

சுமார் 300, 400 கிலோமீட்டர் தாண்டி டிராவல் பண்ணி சென்னைக்கு வர்றாங்க. அப்படி வந்தவர்களுக்கு தவெக தலைமைக் கழக ஆபீஸில் உரிய மரியாதை கொடுக்கவில்லை. உள்ள வந்தவங்களை கதவை பூட்டி வெளியே விரட்டி விட்டிருக்காங்க, சாப்பிட போனவங்கள விரட்டி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை எப்படி பார்க்கிறீங்க?

இக்கரைக்கு அக்கரை பச்சைன்னு போவாங்க. இக்கரையில இருந்து பார்த்தா அக்கரை பச்சையா தெரியும். அங்க போனதுக்கு அப்புறம்தான் தெரியும் அது பச்சை இல்லை அப்படின்னு. அந்த நிலைமைதான் இப்போ பனையூருடைய நிலைமையா இருக்கு.

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தான் சேர்ந்தவர்கள் இணைந்துள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு கூட கட்சி தலைவர் விஜய் கூட வரவில்லையே? இதை நீங்க எப்படி பார்க்கிறீங்க?

எவ்வளவு பெரிய கட்சியாக இருந்தாலும், அந்த கட்சியை தேடி வர்றவங்களை மதிச்சு தலைவர்கள் வந்து சேர்க்கிறது தான் பெரும்பாலும் வந்து, இதுவரைக்கும் தமிழ்நாடு வந்து அப்படித்தான் பார்த்திருக்கிறது. தேர்தலுக்கு முன்பு கூட விஜய் வந்து ஒரு முன்னாள் ஒன்றிய செயலாளரை சேர்க்கிறதுக்கு கூட அவரே வந்தார். தேர்தலுக்குப் பிறகு அவர் யாரையும் சேர்க்கிறது இல்லை. கூட்டணிக் கட்சிகளோடு கூட கைகோர்த்து நிக்கிறதுக்கு கூட அவர் தயாராக இல்லை. ஏன்னா அவர் வந்து அப்படிப்பட்ட ஒரு தியாக தலைவர். அதனால, ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்கணும்னு நினைக்கிறாங்க. அந்த புதிய கலாச்சாரத்தில் கட்சித் தலைவர்களுக்கும், அவரை தேடி வர்றவங்களுக்கும் ஏற்படுகிற அவமானங்கள் தான் ஒவ்வொரு நாளும் செய்தியாக வெளிவந்து கிட்டே இருக்கிறது.

விஜய் இல்லை என்றால் கட்சி இல்லை. புஸ்ஸி ஆனந்த், ஆதவ் இல்லா விட்டாலும் தவெக செயல்படும். அப்படியிருக்கும் போது அவர்களை போய் பார்க்க வேண்டிய அவசியம் என்ன?.

கட்சியில் இணைந்த 2 விஜய பாஸ்கரும், விஜய் பேரை சொல்றதுக்கு எங்களுக்கு ஒரு அனுமதி கொடுங்க. அது புஸ்ஸி ஆனந்த் கொடுத்தா என்ன, ஆதவ் அர்ஜுனா கொடுத்தா என்ன. யார் கொடுத்தா அவங்களுக்கு கவலை இல்லை. அவங்களுக்கு இப்போ வந்து விஜய் பேரை சொன்னா தான் அவங்களுடைய எதிர்காலம்னு நினைக்கிறாங்க. ஆனா தமிழ்நாட்டுடைய எதிர்காலத்தைப் பற்றி அவங்க நினைக்கவில்லை. அவங்க எதிர்காலத்துக்கு விஜய் பெயரை சொல்லணும்னு நினைக்கிறாங்க. அதுக்கு அனுமதி வந்து யார் மூலமாக கொடுத்தா? என்ன அப்படின்னு அவங்க நினைச்சு போறாங்க.

புஸ்ஸி ஆனந்த் காலில் விழுறதுக்கு கூட ரெடியா இருக்குறாங்க. இதை எப்படி பார்க்கிறீங்க?

இதான்... இதான் காலம் செய்த கோலம். எடப்பாடியார் அமைச்சர் பொறுப்பு கொடுத்து அழகு பார்த்தார். மாவட்ட செயலாளர் பதவி எல்லாம் கொடுத்தார். இப்போ பதவியை பிடுங்கி விட்டார்கள் என்று கூறி வெளியே வருகிறார்களே? இதை பற்றி என்ன நினைக்கிறீங்க? நிர்வாக நடவடிக்கைகளில், பேரறிஞர் அண்ணா சொன்ன மாதிரி ‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’. அதான் நமக்கு தாரக மந்திரம். தலைமைக்கு நாம கட்டுப்பட்டவங்களா இருக்க வேண்டும் என்று தலைமை எதிர்பார்க்கும். தலைமை நம்முடைய உழைப்பை அங்கீகரிக்கணும் அப்படின்னு தொண்டர்கள் எதிர்பார்ப்பார்கள். இது இரண்டும் இல்லாத நிலை உள்ளதால் அதை காரணம் காட்டி வெளியே போகிறார்கள்.

ஊழல் வழக்கில் இருந்து விடுபடுறதுக்காக வேண்டி கட்சியில போய் இணைகிறார்கள்? என்று ஒரு பேச்சு அடிப்படுகிறதே?

அவங்களுக்குதான் தெரியும் ஏன் போய் சேர்ந்தாங்கன்னு என்று. அவங்ககிட்ட தான் கேட்கணும்.

அதிமுகவில் இருந்து வெளியேறுபவர்களை பற்றி என்ன நினைக்கிறீங்க?

எப்பயுமே கட்சி தான் பெருசு, தனிநபர் பெருசு இல்லை. இப்படிப்பட்ட காலத்துல வந்து கட்சி தோற்கிற போதும், அதிகாரத்துல இல்லாத போதும், கட்சியில தனிநபர்கள் எடுத்த முடிவு வந்து தவறாகத்தான் முடியும். கட்சி எடுத்த முடிவுதான் வந்து சரியாக இருக்கும். அதனால கட்சி தான் என்னைக்கும் பெரிது, தனிநபர் என்னைக்கும் பெரிது இல்லை. போகிறவர்கள் போய் விட்டார்கள். அவங்களுக்கு எதுக்கு அட்வைஸ்? பண்ண வேண்டும். வாழ்கிறவர்களுக்கு தான் அட்வைஸ், செத்துப்போனவங்களுக்கு எதுக்கு அட்வைஸ்?.