போலியான உயில் தயாரித்து பூர்வீக தாத்தா சொத்தை ‘ஆட்டைய’ போட்டுட்டாங்க!: நடிகரின் புகாரையடுத்து சித்தப்பா மீது வழக்கு
அலிகார்: மறைந்த தனது தாத்தாவின் பூர்வீக சொத்து உயிலை போலியாக தயாரித்து ஏமாற்றிவிட்டதாக பாலிவுட் நடிகர் சந்திரசூட் சிங் தனது குடும்பத்தினர் 7 பேர் மீது பரபரப்பு போலீஸ் புகார் அளித்துள்ளார். பாலிவுட் நடிகர் சந்திரசூட் சிங்கின் (56) தந்தை மறைந்த கேப்டன் பல்தேவ் சிங், அலிகார் தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆவார். இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள ரோராவர் போலீஸ் நிலையத்தில் நடிகர் சந்திரசூட் சிங் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், ‘கடந்த 1997ம் ஆண்டு எனது தாத்தா தாக்கூர் ஹரேந்தர் பால் சிங் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த போது, அவரால் கையெழுத்திட முடியாத நிலையை பயன்படுத்தி சித்தப்பா கங்கா சிங் மற்றும் சித்தி காயத்ரி தேவி உள்ளிட்டோர் போலி கையெழுத்து போட்டு உயில் தயாரித்துள்ளனர். அந்த போலி ஆவணம் மூலம் எனது தந்தைக்கு சேரவேண்டிய பூர்வீக சொத்து பங்குகளை மறுத்து, பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முறைகேடாக விற்றுவிட்டனர்’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விவகாரத்தில் தனது சித்தி காயத்ரி தேவி, 2 ஒன்றுவிட்ட சகோதரர்கள் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சந்திரசூட் சிங், ‘எனது குடும்பத்தினரின் மோசடிக்கு எதிரான வலுவான ஆதாரங்களை திரட்டி போலீசாரிடம் சமர்ப்பித்துள்ளேன். எனது அதிகாரப்பூர்வ வாக்குமூலத்தையும் பதிவு செய்துள்ளேன்’ என்று தெரிவித்தார். தற்போது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், நடிகர் அளித்த புகாரின் உண்மைத்தன்மை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



