வெளிநாட்டு வேலைக்கு அனுப்பும் நிறுவனம் நடத்தி போலி விசா கொடுத்து மோசடி அதிமுக நிர்வாகி அதிரடி கைது: டெல்லி போலீசார் நடவடிக்கை
பரமத்திவேலூர்: வெளிநாட்டு வேலைக்கு அனுப்பும் நிறுவனத்தை நடத்தி, இளைஞர்களுக்கு போலி விசா கொடுத்து மோசடியில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகியை டெல்லி போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே நன்செய் இடையாறு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (57). நாமக்கல் மாவட்ட அதிமுக இலக்கிய அணி துணை செயலாளர்.
பரமத்திவேலூரில் வெளிநாட்டு வேலைக்கு, ஆட்களை அனுப்பும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், வெளிநாட்டு வேலைக்கு செல்ல, பரமத்திவேலூர் மற்றும் காளப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த 2 இளைஞர்களுக்கு நேர்முக தேர்வு மற்றும் பயிற்சி அளித்துள்ளார். பின்னர், பிரான்ஸ் நாட்டுக்கு செல்வதற்கான விசாவை, அந்த இளைஞர்களுக்கு கொடுத்து உள்ளார். அந்த இளைஞர்கள், கடந்த மாதம் மும்பையில் இருந்து பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல ஏர்போர்ட்டிற்கு சென்றனர். அப்போது, போலீசார் அவர்களது விசாவை ஆய்வு செய்த போது, போலி விசா என்பது தெரியவந்தது.
தொடர் விசாரணையில், அவர்களுக்கு விசா பெற்று கொடுத்தது, பரமத்திவேலூரில் உள்ள வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பும் நிறுவனம் நடத்தி வரும் கண்ணன் என்பதும், அவர் அந்த இளைஞர்களுக்கு சென்னையை சேர்ந்த ஒரு நபரிடம் இருந்து, போலி விசா வாங்கி கொடுத்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, டெல்லி போலீசார் நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்ட எஸ்பி அலுவலகம் வந்தனர். பின்னர், பரமத்தி வேலூருக்கு வந்த அவர்கள் உள்ளூர் போலீசார் உதவியுடன் கண்ணனை கைது செய்தனர். பின்னர், அவரை பரமத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
தொடர்ந்து, விசா மோசடி வழக்கில் கண்ணனிடம் விசாரணை நடத்த வேண்டும் என, டெல்லி போலீசார் நீதிமன்றத்தில் மனு அளித்தனர். அதன்படி, நீதிமன்ற அனுமதியுடன், கண்ணனை நேற்று டெல்லிக்கு அழைத்துச்சென்றனர். வெளிநாடு செல்ல விரும்பிய இளைஞர்களுக்கு, போலி விசா கொடுத்த அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.