Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

கால்பந்து உலக கோப்பையில் முதல் அதிர்ச்சி; 4 முறை சாம்பியனை வீழ்த்தி பராகுவே அசத்தல்: பரிதாபமாக வெளியேறி ஜெர்மனி ஏமாற்றம்

ஃபாக்ஸ்போரோ: உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நடைபெற்று வருகிறது. 48 அணிகள் பங்கேற்ற இத்தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, முதல் சுற்றின் முடிவில் சிறப்பாக ஆடிய 32 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிட்ட நிலையில், ரவுண்ட் ஆப் 32 சுற்று தற்போது நடந்து வருகிறது. இதில் வெற்றிபெறும் அணிகள் அடுத்த சுற்றான ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்குள் நுழையும்.

இந்தநிலையில், ரவுண்ட் ஆப் 32 சுற்றில் அமெரிக்காவின் ஃபாக்ஸ்போரோவில் உள்ள பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 4 முறை சாம்பியனான ஜெர்மனியை பராகுவே அணி எதிர்கொண்டது. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்திருந்தன. இதனால் 1-1 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையில் இருந்தது. 90 நிமிடங்கள் முடிந்த நிலையில் இரு அணிகளும் சம நிலையில் இருந்ததால் கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டன. கூடுதலாக வழக்கப்பட்ட நேரத்திலும் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் பெனால்டி ஷூட் அவுட் முறை கொண்டுவரப்பட்டது.

பெனால்டி ஷூட் அவுட் முறையை சரியாக பயன்படுத்திக் கொண்ட பராகுவே அணி 4 கோல் அடிக்க, ஜெர்மனி அணியால் 3 கோல் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 4-3 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி பராகுவே அணி அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு பராகுவே முன்னேறியது. பராகுவேக்கு எதிராக தோல்வியை தழுவிய ஜெர்மனி அணி, நடப்பு உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இருந்து பரிதாபமாக வெளியேறியது.

4 முறை உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஜெர்மனி அணி நடப்பு தொடரில் இருந்து வெளியேறியது ஜெர்மனி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனி அணி கடந்த 1954, 1974, 1990, 2014 ஆகிய ஆண்டுகளில் கால்பந்து உலகக்கோப்பையை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.