Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சமையலறையில் கரப்பான் பூச்சி, காலாவதி பொருட்கள்; 5 நட்சத்திர ஓட்டல்களுக்கு எப்எஸ்எஸ்ஏஐ கண்டிப்பு: உணவு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்

புதுடெல்லி: நாட்டின் ஐந்து நட்சத்திர ஓட்டல் நிறுவனங்கள் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் கூறி உள்ளது. உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின்(எப்எஸ்எஸ்ஏஐ) அதிகாரிகள் கடந்த 26ம் தேதி ஜேடபிள்யூ மேரியட் மற்றும் அண்டாஸ் டெல்லி ஆகிய ஓட்டல்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கரப்பான்பூச்சிகள் இருந்தது, காலாவதியான உணவு, மோசமான சுகாதாரம் மற்றும் முறையற்ற உணவு சேமிப்பு உள்ளிட்ட தீவிர சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு விதிமீறல்கள் ஆய்வில் கண்டறியப்பட்டது.

இதனை தொடர்ந்து அந்த ஓட்டல் நிர்வாகங்களுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. உணவு பாதுகாப்பு தொடர்பான விதிமீறல்களுக்கு எதிராக எப்எஸ்எஸ்ஏஐ தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக டெல்லியில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் சார்பில் முக்கிய 5நட்சத்திர ஓட்டல் நிறுவனங்களின் உயரதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் எப்எஸ்எஸ்ஏஐ தலைமை நிர்வாக அதிகாரி ரஜித் புன்ஹானி பேசியதாவது: நாட்டில் உள்ள முன்னணி ஐந்து நட்சத்திர ஓட்டல் நிறுவனங்கள் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். விதிமீறல்கள் எதையும் சகித்துக்கொள்ள முடியாது. நுகர்வோருக்கு பாதுகாப்பான உணவை உறுதி செய்யும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இத்தகைய ஓட்டல்களில் ஆய்வுகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.