Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

Food spot

கச்சோரி

ஒரு ஏரியாவுக்குள்ள இறங்குனா அங்கு மக்கள் கூட்டம் அலைமோதும். அதற்கு ஒரே காரணம் அங்கு கிடைக்கும் நொறுக்குத்தீனிகள்தான். திரும்பும் பக்கம் எல்லாம் சின்ன சின்ன கடைகள். கடை முழுக்கவும் கட்டுக்கடங்காத கூட்டம். எந்தக் கடையில் என்ன சாப்பிடுவது என்று நமக்குள் எழும் ஒரு கேள்வி. இப்படி ஒரு பீக்கான ஏரியான்னா அது நம்ம சென்னை சவுக்கார்பேட்டையில் இருக்குற மின்ட் ஸ்ட்ரீட்தான். பெரும்பாலும் வடநாட்டு நொறுக்குத்தீனிகள் இங்க ரொம்பவும் ஸ்பெஷல். கட்லெட், லெஸ்சி, பன்பட்டர் ஜாம் என்று நிறைய இருக்கும். இந்த டிஷ் எல்லாத்துக்கும் போட்டியா இருக்கிற ஒரு டிஷ் என்றால் அது கச்சோரிதான். ஆம், காக்கடா ராம்பிரசாத் எனும் கடையில் கிடைக்கும் கச்சோரிதான் பல காலங்களாக மின்ட் ஸ்ட்ரீட்டில் ரொம்ப பேமஸ். வட நாட்டு ஸ்டைலில் கச்சோரி சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த ஸ்பாட்டை ட்ரை பண்ணலாம்.

மோர்

அக்னி நட்சத்திரம் முடிஞ்சிருச்சு. வெயில் காலம் முடியப்போகுது. இருந்தாலும் வெயில் கொளுத்திக்கிட்டு இருக்கு. சாயங்காலம் ஆகியும் அனல் காற்றா வீசுது. என்ன பண்றதுன்னே தெரியல என்று நினைப்பவர்கள், வெளிநாட்டுப் பானங்களைக் குடிப்பதை விட்டு விட்டு மோர் சாப்பிடலாம் என்று தரமான ருசியான மோரைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறார் ராமஜெயம் என்ற பெரியவர். திருவான்மியூர் பீச்சில் இரவு 7 மணிக்கு ராமஜெயம் மோர் விற்பனையைத் துவங்கிவிடுவார். மோரை ஒரு கப்பில் ஊற்றி, அதன்மேல் காரப்பூந்தியைப் போட்டு வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பார் நம்ம மோர்தாத்தா. ஒரு தரமான மோர் சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் திருவான்மியூர் பீச்சிக்கு ஒரு விசிட் போடுங்க.

பட்டர் பொடி தோசை

கொஞ்ச காலமாவே தோசைப்பிரியர்கள் அதிமாகிட்டாங்க. ஆமா, மூன்று வேளையும் தோசை சாப்பிடுற ஆளுங்ககூட இருக்காங்க. காலை டிபன் தோசை, மதிய லஞ்ச் தோசை, நைட் டின்னர் தோசைன்னு வெளுத்துகட்டுறாங்க. இந்த மாதிரியான தோசைப் பிரியர்களுக்கான அருமையான ஸ்பாட் அண்ணா நகர் கார்த்திக் டிபன் சென்டர்தான். தோசைக்கல்லு மேல ஒரு கப் மாவை ஊத்தி, அது மேல பட்டரை தடவிவிட்டு தோசை தங்க கலரா மாறிய பிறகு அதன்மேல் பொடியைப் போட்டு கொடுப்பார்கள். உண்மையிலே அது அமிர்தம்தான்.