சீ ஃபுட்
கடல் உணவுகள் பிடிக்காது எனச் சொல்லும் அசைவப்பிரியர்கள்அரிதிலும் அரிது. மீன், இறால், நண்டு, கணவா என கடலில் கிடைக்கும் ஏதாவது ஒரு உணவையாவது சாப்பிட்டு ருசிக்க வேண்டும் என்ற ஆசை பலருக்குமே இருக்கும். அந்த வகையில் சுவையான அதே சமயம் ஆரோக்கியமான கடல் உணவுகளை சாப்பிட வேண்டுமென்றால் சென்னை பாலவாக்கம் பீச்சில் இருக்கிற ‘கல்லோரம் சீ ஃபுட்’ என்கிற ரெஸ்டாரென்ட் நல்ல சாய்ஸ். மீன்களை அவர்களே பிடித்து அவர்களே முறையான சமையல் மாஸ்டர்ஸ் கொண்டு சமைப்பதால் சுவையில் குறைவிருக்காது. அந்தக் கடையின் சிறப்பே உயிருடன் இருக்கிற லாப்ஸ்டர் தான். நமக்கு எந்த லாப்ஸ்டர் வேண்டுமோ அதை நாமே தேர்வு செய்து கொடுத்தால் சமைத்துக் கொடுப்பார்கள். அதேபோல அங்கு கிடைக்கும் வஞ்சிரம் மீன் குழம்பின் சுவையும் அலாதியானது.
துருக்கி ஸ்டைல் பிரியாணி
வெளிநாடுகளில் கிடைக்கக்கூடிய பல உணவுகள் இப்போது சென்னையிலும் கிடைத்து வருகிறது. மிகவும் ஸ்பெஷலான டெசர்ட்ஸ் முதல் ஸ்டார்டர்ஸ் வரை அனைத்து வகையான உணவுகள் கிடைக்கும் இடமாக சென்னை இருந்தாலும் துருக்கி ஸ்டைல் பிரியாணி எங்கு கிடைக்கும் என பார்த்தால் உணவகங்களைத் தேடத்தான் வேண்டும். இனி அந்த கவலையே இல்லை. சென்னை அண்ணா நகரில் இருக்கிற டார்க் லிக்ஸ் என்கிற உணவகத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் இந்த துருக்கி ஸ்டைல் பிரியாணி கொடுத்து வருகிறார்கள். சுவையில் தனித்துவமாக இருக்கிற இந்த பிரியாணியைச் சாப்பிட ஞாயிற்றுக்கிழமை இந்தஉணவகத்தை வட்டமடிக்கிறார்கள் ஃபுட்டிகள்.
அத்தோ
நாம் எப்படி இட்லி தோசை சாதம் சாப்பிடுகிறோமோ அது போல் பர்மாக்காரர்கள் அத்தோவை வெளுத்து கட்டுவார்கள். பர்மாவில் அத்தோ தினமும் சாப்பிடக்கூடிய உணவாகவே மாறியுள்ளது. தற்போது அத்தோ ஃபுட் சென்னையில் பயங்கர பிரபலமாகவும் விளங்குகிறது. குறிப்பாக சென்னையின் பாரிஸ் கார்னர் பக்கம் திரும்பும் இடமெல்லாம் அத்தோ கடைகள் சூழ்ந்து அத்தோ ஸ்பாட்டாக காட்சியளிக்கும். அந்த வகையில் சென்னை பாரிசுக்கு செல்பவர்கள் இப்ராஹிம் கடையில் கிடைக்கும் அத்தோவை சாப்பிடத்தவறுவது கிடையாது. அத்தோ சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு நல்ல ஸ்பாட்தான் இந்தக்கடை.



