இன்று நாளொரு மேனியும் பொழுதொரு பிரச்னையுமாக திருமண பந்தம் என்பது பெரும் கேள்விக்குறியாக மாறி வருகிறது. என்ன தான் சட்டதிட்டங்கள் இருந்தாலும், புதியதாக கொண்டு வந்தாலும் திருமண வாழ்வு நிலைக்க தனிமனித பொறுப்புணர்வும், சுய கட்டுப்பாடுமே முக்கியம். தற்போதைய திருமண பந்தம் குறித்த பிரச்னை களால் பெரிதும் பாதிக்கப்படுவது குழந்தைகள் சமூகம் தான். அவர்களை பாதுகாப்பதற்காகவாவது திருமண பந்தங்கள் நிலைக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும் எதிர்பார்ப்பும்.
திருமண பந்தம் சிறப்பாக இருக்க சில யோசனைகள்முதலில் திருமணத்திற்கு தனக்கு பொருத்தமான துணையை ஆண் பெண் என இருவருமே தேர்வு செய்ய வேண்டும்.
திருமண பந்தத்தில் நுழைந்து விட்டாலே நாம் அதற்குரிய பொறுப்புக்குள் நுழைவதாகத் தான் அர்த்தம். இஷ்டம் போல இருப்பேன் என்பதெல்லாம் வேலைக்காகாத விஷயம். அதற்கு தனியாகவே இருந்து விடுங்கள்.
முன்பு காலம் போல அதிக வயது வித்தியாசம் எல்லாம் தற்போது சரிப் பட்டு வராது. மூன்று நான்கு வயது வித்தியாசம் மட்டுமே சரியாக இருக்கும். அது தான் அவர்களுக்குள் ஒத்த மனநிலையை கொண்டு வரும். (சில விதிவிலக்குகள் இருக்கலாம்) திருமணத்திற்கு முன்பு மணமக்களுக்கு ஏதேனும் கெட்ட பழக்கவழக்கங்கள் இருந்தால் முதலிலேயே தெரிவித்து விடலாம். திருமணமானால் சரியாகி விடும், துணை வந்து அவரை திருத்திடுவிடுவார் என்பதெல்லாம் கிஞ்சித்தும் உதவாது. இப்போதெல்லாம் யாரும் யாரையும் திருத்துவதற்காக திருமண பந்தத்தில் நுழைவதில்லை. அதற்கு அவர்களுக்கு நேரமுமில்லை.
இன்றைய காலகட்டத்தில் இருவருக்குமே வேலை மற்றும் பொருளாதார சுதந்திரம் அவசியம். இதில் ஒருவருக்கு பிரச்னை என்றாலும் நிறைய உபப் பிரச்னைகள் கூடிவிடுகிறது. மேலும் வேலைவெட்டிக்கு செல்லாதவர்களால் வீட்டிலேயே இருப்பவர்களால் நிறைய தொந்தரவுகள் ஏற்படுவது என்பதும் யதார்த்த நிலை. அவசியம் ஏற்பட்டால் ஒழிய சும்மா இருக்காதீர்கள்.
முக்கியமாக தம்பதிகளின் விஷயத்தில் இருவரின் பெற்றோர்கள் தலையிடுவது என்பது பிரச்னைகளை மேலும் பெரியதாக்கி பிளவினை அதிகமாக்குமே தவிர வேறு பிரியோஜனமில்லை. ஆதி காலத்திய காலாவதியான பழைய பஞ்சாங்க சிந்தனைகள் தற்போதைய சூழலில் எடுபடாது என்பதை பெற்றவர்களும் புரிந்து கொள்ள வேண்டும். அந்த காலத்தில்ன்னு எதையாவது பேசி உங்கள் பிள்ளைகள் வாழ்வில் நீங்களே புயலை கிளப்பி விடாதீர்கள்.
வீட்டுவேலைகளோ, குழந்தை வளர்ப்போ கணவன் மற்றும் மனைவி இருவருமே பகிர்ந்து தான் செய்ய வேண்டும் என்பதையும் திருமணப் பந்தத்தில் நுழையும் போதே புரிந்து கொள்ள வேண்டும். மாறாக எனக்கு சமைக்க தெரியாது வீட்டு வேலை செய்ய தெரியாது என்றால் தெரிந்து கொண்டு திருமணம் செய்து கொள்ளுங்கள். நாளைய பெற்றோரான உங்களுக்கு இது அவசியமான தேவை.
குறிப்பாக குழந்தை பெற்றுக் கொள்ளுமுன் ஒரு முறைக்கு பலமுறை யோசியுங்கள். திட்டமிடுங்கள். ஆனால் திட்டமிட்ட பின்பு ஒரு பெற்றோராக நீங்கள் எதற்காகவும் பின்வாங்கவே கூடாது. குழந்தைக்கான முழுப் பொறுப்பு அப்பா அம்மாவான உங்களையே சேரும். அதையெல்லாம் நீங்கள் எக்காரணம் சொல்லியும் தட்டிக் கழிக்க முடியாது.
முக்கியமாக இந்த நவீன யுகத்தில் கணவனோ மனைவியோ உங்கள் கடுமையான வேலைகளுக்கிடையே குடும்பத்திற்காகக் கணிசமாக நேரம் ஒதுக்கியே ஆகவேண்டும். இதற்காக எந்த சால்ஜாப்புகளையும் சொல்லவே கூடாது. இல்லையென்றால் அந்த திருமண பந்தம் நிலைக்கவே நிலைக்காது. இது இல்லாத சூழலில் தான் மூன்றாவது நபர் மிக சுலபமாக உங்கள் வாழ்க்கையில் நூழைந்து விடுவார். அதற்கு பின்பு வாழ்க்கையே கேள்விக்குறிதான்.
காலம் மாறுவதற்கு ஏற்ப நீங்களும் மாறிடுங்க. ஒரு முறைக்கு பலமுறை யோசித்து திருமணம் செய்யுங்க. குழந்தை பெற்று கொள்ளுங்கள். ஆனால் இதையெல்லாம் செய்த பிறகு கொஞ்சம் கூட யோசிக்காதீங்க.
ஏதோ ஒரு சூழலில் ஒத்து வரவில்லை என தீர்மானமாக ஒருவர் முடிவு செய்து விட்டாலும் மனமொத்து பிரிந்து விடுங்கள். இன்று மறு திருமணம் எல்லாம் சர்வ சாதாரணமாகி விட்டது. மாறாக டாக்ஸிக் சிந்தனைகளை எல்லாம் வளர்த்து கொள்ளாதீர்கள். உங்கள் துணை உங்ககூட வாழ வந்தவங்க மட்டும் தான். அவங்க உங்க சொத்து எல்லாம் கிடையாது. அவர்களை கடுமையாக காயப்படுத்தவோ, தண்டிக்கவோ உங்களுக்கு உரிமை கிடையாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
- தனுஜா ஜெயராமன்.
