மந்தகதியில் நடைபெறும் 20க்கும் மேற்பட்ட மேம்பால பணிகள்: சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு: சென்னை டூ விழுப்புரத்துக்கு 5 மணி நேர பயணத்தால் மக்கள் அவதி
* போலீசார் இல்லாததால் பல கி.மீ.க்கு அணிவகுக்கும் வாகனங்கள்
* தடுப்புகள், எச்சரிக்கை பலகை இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம்
தமிழகத்தின் தலைநகரான சென்னையிலிருந்து தென்மாவட்டங்களை இணைக்கக்கூடிய முக்கிய பகுதியாக விழுப்புரம் மாவட்டம் விளங்கி வருகிறது. ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டமாக இருந்தபோது அதிக தூர தேசிய நெடுஞ்சாலை, நான்குவழிச்சாலையை கொண்டுள்ள மாவட்டமாகவும் விழுப்புரம் விளங்கியது. தென்மாவட்டங்கள் மட்டுமின்றி டெல்டா மாவட்டங்கள், கொங்கு மாவட்டங்களுக்கும் இணைப்பு பகுதியாக விழுப்புரம் உள்ளதால், எப்போதும் வாகன போக்குவரத்து மிகுந்தே காணப்படும்.
தமிழகத்தில் திருச்சி, மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற தென்மாவட்டங்களுக்கு செல்ல இந்த சாலையை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். மேலும் கோவை, சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி செல்லும் மக்கள் உளுந்தூர்பேட்டை வரை இந்த தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்துகின்றனர். அதுமட்டுமின்றி கேரள மாநிலத்துக்கு செல்லும் நான்கு வழிச்சாலையாக உள்ள இச்சாலை எப்போதும் படுபிசியாகவும், பரபரப்பாகவும் காணப்படும்.
குறிப்பாக முகூர்த்த நாட்கள், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை, அரசு விடுமுறை நாட்களில் இந்த சாலையில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதை காண முடியும். சென்னை எல்லையை தாண்டியதும் திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, வேப்பூர், தொழுதூர் வரை தொடர் போக்குவரத்து நெரிசல் காணப்படும். இந்நிலையில், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டபோது போதிய இணைப்பு சாலைகள், முக்கிய இடங்களில் உயர்மட்ட பாலங்கள் கட்டாததால் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வந்தது.
இதனை குறைக்கவும், தடுக்கும் வகையிலும் சாலை பாதுகாப்பு கமிட்டி ஆய்வு செய்து அளித்த அறிக்கையின்படி முக்கிய இடங்களில் உயர்மட்ட மேம்பாலங்கள் தற்போது படிப்படியாக கட்டப்பட்டு வருகின்றன. குறிப்பாக திண்டிவனம் முதல் விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, தொழுதூர் வரையிலான சாலைகளில் முக்கிய சந்திப்பு இடங்களில் உயர்மட்ட மேம்பாலங்கள் கட்ட ஆய்வு செய்து கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் சலாவதி, செஞ்சி புறவழிச்சாலை, விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் சாலை, அரசூர் உள்ளிட்ட பகுதிகளில் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்பட்டன. தற்போது திண்டிவனம், விக்கிரவாண்டி, விழுப்புரம் அய்யூர் அகரம், அரசூர் உள்ளிட்ட அடுத்தடுத்த இடங்களில் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கும் பணி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.
ஆமை வேகத்தில் இந்த பணிகள் நடப்பதால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் அதிகரித்துள்ளது. மேம்பால பணிகளால் குறுகி சாலையாக உள்ள சர்வீஸ் ரோட்டில் வாகனங்களை திருப்பி விடுவதால், தொடர் விடுமுறை, பண்டிகை விடுமுறையின்போது இந்த கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதுபோன்ற நேரங்களில் தென்மாவட்டங்களுக்கான போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பிக்கிறது. பயணநேரம் பல மணி நேரம் அதிகரிக்கிறது.
இதனால், வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலைதான் உள்ளது. திண்டிவனம், விக்கிரவாண்டி, அரசூர் என விழுப்புரம் மாவட்டத்தை கடந்து செல்லவே 2,3 மணி நேரம் ஆகிவிடுகிறது. ஒரு மணி நேரத்தில் மாவட்ட எல்லையை கடந்து செல்லும் நிலையில், தற்போது 2 மடங்கு நேரம் ஆகிறது. அதேபோல் சென்னையிலிருந்து விழுப்புரம் இரண்டரை மணி நேரத்தில் செல்ல முடியம். ஆனால் தற்போது 4 முதல் 5 மணி நேரம் ஆகிவிடுகிறது. விழுப்புரம் மாவட்டம் மற்றும் கடலூர் மாவட்டம் வேப்பூர், தொழுதூரை கடக்க நீண்ட நேரம் ஆகிறது.
ஏற்கனவே வாகன போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில் தற்போது ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறை இந்த உயர்மட்ட மேம்பால பணிகளை கிடப்பில் போட்டுள்ளது. பண்டிகை நேரத்தில் மக்கள் சொந்த ஊர்களுக்கு பரிதவித்து செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும்போது இந்த அவலநிலையை மக்கள் சந்திக்கின்றனர். இந்த போக்குவரத்து நெரிசலை ஒழுங்குப்படுத்த போலீசார் பணியில் ஈடுபடுவதில்லை. இதனால், குறுகிய சாலையில் ஆம்னி பஸ்கள், லாரிகள், வேன்கள், கார்கள் போட்டி போட்டு முந்துவதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கி நிற்கிறது.
இதேபோல், செங்கல்பட்டு மாவட்டம் வழியாக செல்லும் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புக்கத்துறை, உத்திரமேரூர், படாளம், வையாவூர், மதுராந்தகம், மோச்சேரி அருகே உள்ள தாளவாடி உள்ளிட்ட 4 இடங்களில் ரூ89.6 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருவதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதில் புக்கத்துறை மற்றும் படாளம் பகுதிகளில் மேம்பாலப் பணிகள் சுமார் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், மீதமுள்ள பணிகள் தொடர்ந்து தாமதமாகி வருகிறது. வார இறுதி நாட்கள், தொடர் விடுமுறை மற்றும் முகூர்த்த நாட்களில் சென்னை மற்றும் தென்மாவட்டங்கள் நோக்கி செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், படாளம், புக்கத்துறை, மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேம்பாலப் பணிகள் நடைபெறும் இடங்களில் சாலை அகலம் குறைவதாலும் சர்வீஸ் சாலையாக உள்ளதாலும் வாகனங்கள் மெதுவாக செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் பல நேரங்களில் படாளத்திலிருந்து செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலம் வரை வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நிற்கும் சூழல் உருவாகிறது.
பணிகள் நடைபெறும் பகுதிகளில் போதிய எச்சரிக்கை பலகைகள், தடுப்புகள், இரவு நேரங்களில் ஒளிரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முறையான போக்குவரத்து வழிகாட்டுதல்கள் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை முக்கிய போக்குவரத்து வழித்தடமாக இருப்பதால், செங்கல்பட்டு முதல் உளூந்தூர்பேட்டை வரைக்கும் 20க்கும் மேற்பட்ட மேம்பால பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
பணிகளுக்கு காலக்கெடு நிர்ணயித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் நேரடியாக கண்காணிக்கவும், பணிகள் நடைபெறும் காலத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
* பாலம் முடிஞ்சாதான் நெரிசல் குறையும்: போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள்
போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து மிகுந்த சாலையாக உள்ளது. வழக்கமாக வெள்ளி, சனி, ஞாயிறு என வாரந்தோறும் தற்போது தென்மாவட்டங்களுக்கும், விடுமுறை முடிந்து சென்னை மார்க்கத்துக்கும் வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன. சுங்கச்சாவடிகளில் நெரிசலை தடுக்க கூடுதல் கவுண்டர்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு அடுத்த படாளம் முதல் திண்டிவனம், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் மாவட்ட பகுதி தேசிய நெடுஞ்சாலைகளில் 20 இடங்களுக்கு மேல் உயர்மட்ட மேம்பாலப்பணிகள் தொடங்கப்பட்டது. அதில் சில இடங்களில்தான் பணிகள் முடிவடைந்துள்ளது. இதனை விரைந்து முடித்தால் மட்டும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண முடியும்’’ என்றனர்.
* சென்னை-திருச்சி 8 வழிச்சாலை அவசியம்
தமிழகத்தின் பிரதான சாலையான சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தற்போது தாம்பரம், சிங்கபெருமாள் கோயில் வரை 8 வழிச்சாலை உள்ளது. அதிலிருந்து நான்கு வழிச்சாலை தொடங்கும் நிலையில், நாளுக்குநாள் அதிகரித்து வரும் வாகன போக்குவரத்தால் தற்போது இந்த சாலையிலும் தினசரி நெரிசல் ஏற்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல், விபத்துக்களை குறைக்க 8 வழி பசுமைச்சாலையாக மாற்ற ஒன்றிய தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டு கடந்த 2024ம் ஆண்டு துவக்கத்தில் இதற்கான சாத்திய கூறுகள், பணிகளை ஆய்வு செய்தது.
நில எடுப்பு, உயர்மட்ட மேம்பாலங்கள் உள்ளிட்டவைகள் குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரித்து ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்தனர். விரைவில் ஒன்றிய அரசு இதற்கான ஒப்புதல் அளித்து பணிகள் தொடங்கலாம் என்று எதிர்பார்த்த நிலையில், இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வராமல் இருப்பது ஏமாற்றத்தை அளித்துள்ளது. சென்னை-திருச்சி இடையே 310 கி.மீ தூரத்துக்கு ரூ.26,500 கோடியில் இந்த 8 வழி பசுமைச்சாலையை அமைக்கலாம் என்றும்,
இதன் மூலம் பயண நேரம் 6 மணி நேரத்திலிருந்து 4 மணி நேரமாக குறையும் என்றும் ேதசிய நெடுஞ்சாலை அணையம் தெரிவித்திருந்தது. ஆனால் அதற்கான அடுத்தகட்ட நகர்வுகள் ஏதும் இதுவரை நடைபெறவில்லை. எனவே சென்னை - திருச்சி 8 வழிச்சாலை திட்டம் தற்போது அவசியமாக இருப்பதால் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
* மேம்பால பணி தாமதம் ஏன்? நெடுஞ்சாலை துறை அதிகாரி விளக்கம்
தேசிய நெடுஞ்சாலைத்துறை சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குனர் நெதன்யா கூறுகையில், கடந்த 2024 அக்டோபர் மாதம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை படாளம் புக்கத்துறை மோச்சேரி சாலவாடி ஆகிய பகுதிகளில் மேம்பால பணி தொடங்குவதற்காக நிதி ஒதுக்கப்பட்டு வேலை ஆரம்பிக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதாலும் சர்வீஸ் சாலையில் போதிய இடவசதி இல்லாததாலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மேம்பாலம் அமைக்கும் பணியும் தாமதமானது.
தற்போது படாளம் புக்கத்துறை மேம்பால பணிகள் 90% நிறைவடைந்துள்ளது இந்த இரண்டு பணிகளும் முடிவுற்று வரும் அக்டோபர் மாதம் மேம்பால பணி நிறைவடைந்து துவக்கப்படும். மதுராந்தகம் மோச்சேரி சிறிய அளவிளான பால பணி இன்னும் துவங்கப்படாமல் உள்ளது. அந்த பகுதியில் அம்பேத்கர் சிலை உள்ளது.
அதனை மாவட்ட நிர்வாகம் இன்னும் எடுத்து வேறு இடத்திற்கு மாற்றவில்லை. அதை உரிய முறையில் மாற்றி கொடுத்தால் நான்கு மாதத்தில் அந்த பணி நிறைவடையும் சாலவாடி பகுதியில் நிலம் கையகப்படுத்தும் பணி நிலுவையில் உள்ளது. அந்தப் பணி நிறைவு பெறுவதற்கு இன்னும் 5 மாதங்கள் ஆகும். இவ்வாறு கூறினார்.


