Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்த மலர்களுக்கு மார்க்கெட்டில் தனி மவுசு!

மண்வளத்தைக் கூட்டும் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை விவசாயம் என்ற வார்த்தையை உச்சரிப்பதே அபூர்வமாக இருக்கும். சிலர் இதெல்லாம் கதைக்கு ஆகாத விசயம், உற்பத்தியைப் பெருக்க முடியாது. சந்தைப்படுத்த முடியாது என எதிர்மறையாக பேசுவார்கள். இன்று அந்த நிலை முற்றிலும் மாறி இருக்கிறது. ஊர் ஊருக்கு இயற்கை விவசாயம் செழிப்பாக நடைபெறுகிறது. இயற்கை விவசாயத்தில் உற்பத்தியைப் பெருக்கிக் காட்டுகிறார்கள். இந்த முறையில் விளையும் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்கிறார்கள். உற்பத்தியைப் பெருக்கி, கூடுதல் விலைக்கு விற்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆர்கானிக் முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்பவர்களும் அதிகரித்து இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் புதுக்கோட்டையைச் சேர்ந்த நிஷா மைதீன். இவர் தனது 5 ஏக்கர் நிலத்தில் தென்னை, எலுமிச்சை, பந்தல் காய்கறிகள் உள்ளிட்டவற்றை இயற்கை முறையில் சாகுபடி செய்வதுடன், அவற்றை மதிப்புக்கூட்டி டீத்தூள், ஊறுகாய், எண்ணெய் உள்ளிட்ட பொருட்களாக மாற்றி விற்பனை செய்கிறார். தற்போது அரை ஏக்கரில் சம்பங்கி மலரை சாகுபடி செய்து வருகிறார். இயற்கை முறையில் பயிரிடப்பட்டுள்ள இந்த மலருக்கு மார்க்கெட்டில் தனி மவுசு. ஒரு மாலைப்பொழுதில் நிஷா மைதீனைச் சந்தித்துப் பேசினோம்.

`` எம்பிஏ, எம்.பில், எம்எஸ்டபிபுள்யூ படித்துவிட்டு அரசுக்கல்லூரியில் கவுரவ விரிவுரையாளராக பணியாற்றினேன். பின்னர் தனியார் கல்லூரியிலும் பணியாற்றினேன். எனது கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். நாங்கள் அருகில் உள்ள கிராமத்தில் 5 ஏக்கர் நிலம் வாங்கினோம். ஆனால் அதில் எந்தப் பயிரை விளைவிப்பது என்ற குழப்பம்தான் இருந்தது. 2015ல் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோது இயற்கை விவசாயம் குறித்த தேடலில் இறங்கினோம். பின்னர் நானே இயற்கை விவசாயம் செய்ய களத்தில் இறங்கிவிட்டேன். முதலில் மண்புழு உரத்தைப்போட்டு நிலத்தை நன்றாக தயார் செய்தேன். பின்னர் காய்கறி, கீரை சாகுபடியில் இறங்கினேன். முதலில் சவாலாக இருந்தது. பின்னர் நல்ல மகசூல் கிடைத்தது. விற்பனையும் நன்றாக இருந்தது. அப்படியே எலுமிச்சை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்தேன். பயிர்களுக்காக மண்புழு உரம், மீன் அமிலம், பஞ்சகவ்யம் உள்ளிட்ட இயற்கை இடுபொருட்களை தயாரிக்க ஆரம்பித்தேன். இதை பலரும் கேட்க ஆரம்பித்ததால் கமர்ஷியலாகவே தயாரித்து விற்கத் தொடங்கினேன். காய்கறி உள்ளிட்ட விளைச்சல் பொருட்களை மதிப்புக்கூட்டி விற்கத் தொடங்கினேன். அதற்கும் நல்ல வரவேற்பு. இப்போது அரை ஏக்கரில் சம்பங்கி வைத்திருக்கிறேன். பூக்கள் வந்துகொண்டிருக்கிறது’’ என்றவர், சம்பங்கி சாகுபடி விபரங்களையும் பகிர்ந்துகொண்டார்.

`` சம்பங்கியைப் பயிரிட முதலில் 2 முறை நன்றாக உழவு செய்தோம். அதன்பிறகு நெல் அவியலில் கிடைத்த சாம்பலை மண்ணில் கொட்டினோம். இதன்மூலம் மண் நன்றாக இலகுவானது. எங்களது நிலத்தில் சாம்பல் சத்து குறைவாக இருக்கிறது. அதையும் இந்த சாம்பல் சரிகட்டும். நெல் சாம்பலில் கார்பன் மிகுதியாக இருக்கும். அது மண்ணை வளமானதாக மாற்றும். சாம்பலைக் கொட்டியபிறகு குப்பை எருவைக் கொட்டி மீண்டும் உழவு செய்தோம். பின்பு நிலத்தில் மல்ச்சிங் ஷீட் போட்டு, அதில் துளையிட்டு செடிக்கு செடி, வரிசைக்கு வரிசைக்கு 1 அடி என்ற அளவில் சம்பங்கி விதைக்கிழங்கு ஊன்றினோம். பாசனத்திற்கு ஸ்பிரிங்க்ளர் அமைத்திருக்கிறோம். எள், தேங்காய், கடலை, வேம்பு புண்ணாக்கு கரைசலை பாசன நீரில் கலந்துவிடுவோம். இது பயிர்களுக்கு நல்ல ஊட்டம் கொடுக்கும். பஞ்சகவ்யம், மீன் அமிலம், ஐந்திலைக்கரைசல் போன்றவற்றையும் பாசன நீரில் கொடுப்போம். மல்ச்சிங் ஷீட் இருப்பதால் களை வராது. ஐந்திலைக்கரைசல் பூச்சி, நோயைக் கட்டுப்படுத்தும்.

சம்பங்கியில் 4வது மாதத்தில் இருந்து பூக்கள் வர ஆரம்பிக்கும். 5வது மாதத்தில் இருந்து நாங்கள் அறுவடையை ஆரம்பிப்போம். தினமும் பூக்கள் பறிக்கலாம். ஒரு பறிப்பில் 8 முதல் 10 கிலோ வரை பூக்கள் கிடைக்கும். பூக்களைப் பறித்து புதுக்கோட்ைட மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு அனுப்புவோம். அங்கு நமது பூக்களுக்கு தனி மரியாதை. நல்ல நிறத்தில் இருக்கும். மாலை கட்டினால் 2 நாளுக்கு பிறகும் நல்ல நிறத்தில் வாடாமல் இருக்கும் என்பார்கள். ஒரு கிலோ பூவுக்கு ரூ.50 முதல் ரூ.300 வரை விலை கிடைக்கும். சராசரியாக 8 கிலோ பூக்கள் கிடைத்து ரூ.100 விலை கிடைத்தால் கூட தினமும் ரூ.800 வருமானம் கிடைக்கும். மாதத்திற்கு ரூ.24 ஆயிரம் வருமானம். இதில் செலவு போக ரூ.15 ஆயிரம் லாபம். மற்ற பயிர்களைப் போல சம்பங்கியிலும் மதிப்புக்கூட்டுப்பொருட்கள் தயாரிக்கும் ஐடியா இருக்கிறது. இதன் எசன்ஸ் ஆயில் மூலம் சென்ட் தயாரிக்கலாம். சோப்பு, ஹேர் ஆயில் தயாரிக்கவும் பயன்படுத்தலாம். இதையும் நிச்சயம் செய்வோம்’’ என நம்பிக்கையாக பேசுகிறார்.

தொடர்புக்கு:

நிஷா மைதீன்: 99948 07068.