Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மலர் கண்காட்சிக்கு தயாராகும் ஊட்டி தாவரவியல் பூங்கா

*நுழைவுவாயில் கட்டிடத்தில் புகைப்பட காட்சியகம் அமைப்பு பணிகள் தீவிரம்

ஊட்டி : ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா மலர் கண்காட்சிக்காக தயாராகி வரும் நிலையில், பழமை வாய்ந்த நுழைவு வாயில் கட்டிடத்தில் புகைப்படம் காட்சியகம் அமைப்பதற்காக பொலிவு படுத்தப்பட்டு வருகிறது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சின்கோனா பிளாண்டேசன் கண்காணிப்பாளராக இருந்து வந்த மெக்ஐவர் மேற்பார்வையில் கடந்த 1848ம் ஆண்டு ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா உருவாக்கப்பட்டது. இப்பூங்காவில் சீனா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இத்தாலி, நியூசிலாந்து, அர்ஜென்டினா, நேபாளம் உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து தாவரங்கள், மரங்கள், மூலிகை செடிகள் ஆகியன நடவு செய்யப்பட்டன.

1867ல் முழுமையான பூங்காவாக உருவானது. இன்றளவும் பல வெளிநாடுகளை சேர்ந்த தாவரங்கள், மரங்கள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவை அலங்கரித்து வருகின்றன. தற்போது ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா நூற்றாண்டுகளை கடந்து இன்றும் சுற்றுலா பயணிகள் கண்களுக்கு விருந்து படைத்து வருகின்றன.

ஊட்டி வர கூடிய சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவை காணாமல் செல்வதில்லை. தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் மே மாதம் நூற்றாண்டுகளை கடந்து நடத்தப்படும் மலர் கண்காட்சி உலக பிரசித்தி பெற்றதாகும்.

இந்த மலர் கண்காட்சியை மட்டும் லட்சகணக்கான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு செல்வார்கள். இதனிடையே பூங்கா நுழைவுவாயில் பகுதியில் 1859ல் நுழைவுவாயில் கட்டிடங்கள் கட்டப்பட்டது. 1912ம் ஆண்டு முதல் அழகு செடிகள் மற்றும் பூ விதைகள் விற்கும் விற்பனை கூடமாக பயன்படுத்தப்பட்டது. அதன் பின்னர், பயன்பாடின்றி இருந்து வந்தது.

இந்நிலையில் கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 127-வது மலர் கண்காட்சி வரும் 16ம் தேதி துவங்கி 21ம் தேதி வரை 6 நாட்கள் நடைபெற உள்ளது. இதற்காக பூங்கா துரிதகதியில் தயாராகி வருகிறது.

இதனிடையே மலர் கண்காட்சிக்கு வர கூடிய சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் நோக்கில் பழைமை வாய்ந்த நுழைவுவாயில் கட்டிடங்களில் நீலகிரியின் சிறப்புகள் குறித்து புகைப்பட காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக இக்கட்டிடங்கள் பழைமை மாறாமல் வர்ணம் தீட்டப்பட்டு பொலிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கட்டிடங்கள் பொலிவுபடுத்தப்பட்ட பின்னர், அங்கு நீலகிரியின் இயற்கை அழகு, ஆங்கிலேயர் கால நீலகிரி, தாவரவியல் பூங்காவின் படங்கள், பழங்குடியின மக்களின் புகைப்படங்களை காட்சிபடுத்தப்பட உள்ளன. மேலும் பெரிய எல்ஈடி திரை பொருத்தப்பட்டு நீலகிரியின் சிறப்புகள், தாவரவியல் பூங்காவின் அழகு குறித்த வீடியோக்களும் ஒளிபரப்பப்பட உள்ளன. இப்பணிகளை மலர் கண்காட்சிக்கு முன்பு முடித்து சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.