வெள்ளத்தில் சேதமடைந்த சைக்கிள் சிறுவனுக்கு புது சைக்கிளை பரிசளித்த ராகுல் காந்தி
சண்டிகர்: பஞ்சாப்பில் பலத்த மழையால் பல இடங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. 35 ஆண்டுகளுக்கு பின் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால் சட்லஜ், பியாஸ் மற்றும் ரவி ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு பல இடங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. பஞ்சாபில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பார்வையிட்டார். அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள கோனேவால் கிராமத்திற்கு ராகுல் காந்தி சென்றார்.
அப்போது தனது சைக்கிள் வெள்ளத்தில் சேதமடைந்ததாக கூறி சிறுவனான அம்ரித்பால் சிங்(6) அழுதான். இதை பார்த்த ராகுல் காந்தி அவனுக்கு ஆறுதல் சொல்லி புதிய சைக்கிள் வாங்கி தருவதாக உறுதி அளித்தார். இந்த நிலையில், சிறுவனுக்கு புதிய சைக்கிள் ஒன்றை ராகுல் காந்தி வாங்கி கொடுத்துள்ளார். இது தொடர்பாக நேற்று அந்த சிறுவனுடன் வீடியோ அழைப்பில் அவர் பேசினார். புதிய சைக்கிள் கொடுத்ததற்கு ராகுல் காந்திக்கு சிறுவன் நன்றி தெரிவித்ததாக பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் தெரிவித்துள்ளது.