Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

ஐந்திணை திட்டத்தின் முன்னெடுப்பால் பழங்குடியின மக்களின் பொருளாதார வாழ்வில் புதிய அத்தியாயம்

* வேளாண்மை சார்ந்த சிறு-குறு நிறுவனங்கள் கால்நடை வளர்ப்பில் புதிய அணுகுமுறை

* இடைத்தரகர் இல்லாத நேரடி சந்தை விற்பனை

* பெண்களை தொழில் முனைவோர் ஆக்குதல்

தமிழகத்தின் மலைப்பகுதிகளிலும், அடர்ந்த வனப்பகுதிகளிலும் வாழும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களைச் சமூகத்தின் முதன்மைச் நீரோட்டத்திற்குக் கொண்டு வரவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு புரட்சிகரமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கல்வி, பொருளாதாரம், இருப்பிடம் மற்றும் அடிப்படை வசதிகளில் இத்துறை பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக பழங்குடியினரின் ஒருங்கிணைந்த மேம்பாட்டிற்காக, நான்கு ஆண்டுகளில் (2024-28) ரூ. 1000 கோடியில் ‘தொல்குடி’ திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், பழங்குடியின மக்களின் பொருளாதார நிலையை உயர்த்தி, தனிநபர் வருவாயை பெருக்கும் வண்ணம், 4 ஆண்டுகளுக்கு ரூ.100 கோடியில் கள ஆய்வுகளின் அடிப்படையில் ‘தொல்குடியினர் வேளாண்மை மேலாண்மை திட்டம் - ஐந்திணை’ என்ற வாழ்வாதார திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த, பழங்குடியினர் நலத்துறையானது இந்திய அளவில் புகழ்பெற்ற நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து வாழ்வாதாரா பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் முத்தான சில வாழ்வாதார முன்னெடுப்புகள் குறித்து ஓர் அலசல்:

* சிறுதானிய மதிப்பு கூட்டல் நிறுவனம் - ஜவ்வாது மலை திருவண்ணாமலை

இயற்கை வளம் சூழ்ந்த திருவண்ணாமலை மாவட்டம், ஆன்மிகத்திற்கு மட்டுமல்லாமல் விவசாயத்திற்கும் பெயர் பெற்றது. குறிப்பாக, குறைந்த நீர் தேவையுள்ள சிறுதானியப் பயிர்கள் இங்கு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. விளைவித்த சிறுதானியங்களை அப்படியே விற்பனை செய்வதை விட, அவற்றை மதிப்புக் கூட்டி விற்பனை செய்வது விவசாயிகளுக்கும் தொழில்முனைவோருக்கும் அதிக லாபத்தைத் தரும். பழங்குடியின விவசாயிகள் சிறுதானியத்தை லாபத்திற்கு விற்க எளிதாகச் சந்தையினை அணுக முடிவதில்லை. இச்சிக்கலைத் தீர்க்க இந்திய சிறுதானிய ஆராய்ச்சி நிறுவனம் ஐதராபாத்துடன் இணைந்து சிறுதானிய மதிப்புக்கூட்டல் நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தை முற்றிலும் பழங்குடியின மகளிர் சங்கம் நிர்வாகிக்கிறது. இந்நிறுவனத்திற்காக 195 உறுப்பினர்கள் கொண்ட சங்கம் உருவாக்கப்பட்டு இந்நிறுவனத்தினைத் திறம்படச் செயல்படுத்த 25 உறுப்பினர்களுக்கு ஐந்து கட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிறுவனம் உறுப்பினர்களிடமிருந்து நேரடியாக இடைத்தரகர்களின்றி சிறுதானியங்களை கொள்முதல் செய்கிறது. இந்நிறுவனம் திணை, வரகு, பனி வரகு, சாமை, கம்பு, சோளம், கேழ்வரகு போன்றவைக்கு மதிப்புக்கூட்டி சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யும் சிறு தொழில் நிறுவனமாக உள்ளது. மேலும் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை மொத்தமாகவும் சில்லரையாகவும் விற்பனை செய்தல் மற்றும் சந்தைப்படுத்துதலை ஐஐஎம்ஆர் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது.

* அவகாடோ மற்றும் தக்காளி மதிப்புக்கூட்டல் நிறுவனம் கல்வராயன்மலை சேலம், கள்ளக்குறிச்சி

சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கல்வராயன், அருநூத்துமலை மற்றும் ஏற்காடு மலைப்பகுதிகளில் பழங்குடியின விவசாயிகள் அவகாடோ, தக்காளி மற்றும் மரவள்ளிக் கிழங்கு அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர். இவை எளிதில் அழுகும் தன்மை கொண்டவை என்பதாலும், குறுகிய காலத்தில் விவசாயிகள் இவற்றை மிகக் குறைந்த விலைக்கு உடனடியாக விற்பனை செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர். இச்சிக்கலுக்கு தீர்வாக, பெங்களூருவில் உள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் (ஐஐஎச்ஆர்) தொழில்நுட்ப உதவியுடன் மதிப்புக்கூட்டல் சிறு நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், பருவகாலங்களுக்கு ஏற்ப பலாப்பழம், மாம்பழம், பப்பாளி மற்றும் நாவல்பழம் ஆகியவற்றையும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றும் வகையில் பன்னோக்கு நிறுவனமாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தை இயக்குவதற்காக பழங்குடியின விவசாயிகளை கொண்ட சங்கம் உருவாக்கப்பட்டு உறுப்பினர்களிடமிருந்து நேரடியாக இடைதரகர்களின்றி விலை பொருட்களை கொள்முதல் செய்கிறது. இதிலிருந்து இந்நிறுவனத்தை இயக்கவும் மற்றும் பராமரிக்கவும் 50 விவசாயிகளுக்கு ஐஐஎச்ஆர் பயிற்சி மையத்தில் இரண்டு கட்டங்களாக விரிவான தொழில்நுட்பப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிறுவனம் தரமான முறையில் - அவகாடோ பவுடர் மற்றும் பழச்சாறு, தக்காளி சாஸ் மற்றும் தக்காளி பவுடர், பப்பாளி, நாவல்பழம் மற்றும் பலாப்பழப் பவுடர் போன்ற பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை விற்பனை மற்றும் சந்தைப்படுத்த, ஐஐஎச்ஆர் நிறுவனம் பெங்களூருவில் உள்ள கர்நாடகா எக்ஸ்போர்ட் அவுஸ் என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

* சீதாப்பழம் மதிப்பு கூட்டல் நிறுவனம் ஜவ்வாது மலை திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தின் ஜவ்வாது மலைப் பகுதிகளில் விளையும் சீதாப்பழங்கள் அவற்றின் இனிப்பு மற்றும் தரத்திற்குப் பெயர் பெற்றவை. பழங்குடியினர் மே முதல் செப்டம்பர் வரை வனப்பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களிலிருந்து சீதாப்பழங்களை பெருமளவில் சேகரிக்கின்றனர். இப்பழங்களை நீண்ட நாட்கள் சேமித்து வைக்க முடியாது. இவை எளிதில் அழுகும் தன்மை கொண்டவையாலும், லாப நோக்கில் எளிதாகச் சந்தையினை அணுக முடியாததாலும் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்தச் சிக்கலைத் தீர்க்க, பெங்களூருவில் உள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன் சீதாப்பழ மதிப்புக்கூட்டல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் 270 உறுப்பினர்களைக் கொண்ட சங்கம் செயல்படுகிறது.

இதனை இயக்குவதற்கும் பராமரிக்கவும் 25 பெண்களுக்கு 2 கட்ட சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்நிறுவனம் உறுப்பினர்களிடமிருந்து நேரடியாகச் சீதாப்பழங்களை கொள்முதல் செய்து, குளிர்சாதனக் கிடங்குகள் மூலம் பதப்படுத்தப்படுகிறது. இந்த மையத்தில் சீதாப்பழங்களில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களான - சீதாப்பழ பவுடர், பழச்சாறு மற்றும் சீதாப்பழ பார்கள் தயாரிக்கப்படுகின்றன. பெங்களுர் ஐஐஎச்ஆர் நிறுவனம் மூலம் மீள் கொள்முதல் (Buy-back) முறையில், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ‘Tribal Veda’ என்ற நிறுவனத்துடன், பொருட்களைக் கொள்முதல் செய்வதற்கான மும்முனை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

* மீன், நண்டு வளர்ப்பில் தடம் பதிக்கும் இருளர் பழங்குடியின மீனவர்கள்

பழவேற்காடு திருவள்ளூர் , கிள்ளை பேரூராட்சி கடலூர்

திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில், அழிவின் விளிம்பில் உள்ள இருளர் பழங்குடியினர், நன்னீர் மற்றும் உபரி நீர்நிலைகளில் மீன் பிடிக்கும் மீனவர்களிடம் தினக்கூலிகளாக வேலை செய்து வருகின்றனர். இவர்களின் பொருளாதார நிலையை உயர்த்த மீன் மற்றும் நண்டு வளர்ப்பு குட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் மற்றும் கடலூரில் 50 சென்ட் வீதம், 3 ஏக்கர் பரப்பளவில் கொச்சி - தேசிய மீன் மரபணு வளப் பேணகத்தின் தொழில்நுட்ப உதவி மற்றும் பராமரிப்பு ஆலோசனைகளுடன் 6 நவீன மீன் பண்ணைக் குட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இக்குட்டைகளில் கொடுவா, கறி மீன் மற்றும் களி/சேற்று நண்டுகள் வளர்க்கப்படுகின்றன.

இந்தக் குட்டைகளைப் பராமரித்து வருவாய் ஈட்டுவதற்காக திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த 100 இருளர் குடும்பங்களை உறுப்பினர்களாகக் கொண்டும், கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சியில் 200 குடும்பங்களை கொண்டும் சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், நவீன மீன் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு நுட்பங்களுக்காக மூன்று கட்டங்களாக கொச்சி, பிச்சாவரம் மற்றும் பழவேற்காட்டில் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. உற்பத்தியாகும் மீன்கள் மற்றும் நண்டுகளை சரியான விலைக்குச் சந்தைப்படுத்தும் பொறுப்பினை NBFGR ஏற்றுக்கொண்டுள்ளது. தினக்கூலிகளாக இருந்த இருளர் இன மக்கள், தற்போது சங்க அமைப்பின் மூலம் ஒரு தொழில் நிறுவனத்தை நடத்தும் ‘தொழில்முனைவோர்களாக’ உயர்ந்துள்ளனர்.

* வண்ண மீன்கள் வளர்ப்பு, தொழில்முனைவோர்களாக பழங்குடியின இருளர் பெண்கள்

பழவேற்காடு மற்றும் கடலூர் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின இருளர் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், NBFGR-ன் தொழில்நுட்ப உதவியுடன் வண்ண மீன்கள் உற்பத்தி மற்றும் விற்பனை மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக பழவேற்காடு மற்றும் கடலூர் பகுதியைச் சேர்ந்த 75 பழங்குடியின இருளர் குடும்ப பெண்களால் சங்கம் உருவாக்கப்பட்டு, இந்த உற்பத்தி நிலையம் நிர்வகிக்கப்படுகிறது. வண்ண மீன் வளர்ப்பில் மிகப்பெரிய சவாலாக இருப்பது அதன் விற்பனை வாய்ப்புகளே ஆகும். இதனை எளிதாக்க, NBFGR நிறுவனம் உற்பத்தி செய்யப்படும் வண்ண மீன்களைத் மீள் கொள்முதல் முறையில், சந்தைப்படுத்துதல் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளது.

* புளி மதிப்புக்கூட்டல் நிறுவனம் (திருப்பத்தூர்)

திருப்பத்தூர் மாவட்டம் பனகட்டேரி பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் மார்ச் முதல் ஜூன் மாதம் வரையிலான பருவ காலத்தில், வனங்களில் இருந்து புளியை சேகரித்து வருமானம் பெறுகின்றனர். மேலும், பொருளாதார நிலையை உயர்த்தும் நோக்கில், ரூ. 28.6 லட்சம் மதிப்பீட்டில் புளி மதிப்புகூட்டல் அலகு நிறுவப்பட்டுள்ளது. இம்மையம் மூலம், புளியை மதிப்பூட்டிய தயாரிப்புகளாக மாற்றி விற்பனை செய்வதன் மூலம் பழங்குடியினர் வருமானத்தை மேலும் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

* புளி மதிப்பு கூட்டல் நிறுவனம் திருவண்ணாமலை

ஜவ்வாது மலைப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின விவசாயிகள், வன உரிமை மூலம் காடுகளில் இருந்து புளியைச் சேகரித்து இடைத்தரகர்கள் மூலம் மிகக் குறைந்த விலைக்கு விற்கும் நிலை உள்ளது. இச்சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக புளி மதிப்புக்கூட்டல் தொழில்நுட்ப அலகு உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்திற்காக, கோவிலூர் ஊராட்சி பகுதியில் உள்ள புளி சேகரிக்கும் பழங்குடியின பெண் உறுப்பினர்களை கொண்டு “ஜவ்வாது மலை ஐந்திணை மகளிர் விவசாய மேம்பாட்டுச் சங்கம்” உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வுறுப்பினர்கள், இடைத்தரகர்களின் தலையீடு இன்றி நேரடியாக இந்த மதிப்புக்கூட்டல் மையத்திற்குப் புளியினைச் சந்தை விலைக்கு விற்கின்றனர்.

இந்நிறுவனத்தைச் சிறப்பான முறையில் இயக்குவதற்கும், பராமரிப்பதற்கும் கோயம்புத்தூரில் உள்ள வன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்கம் நிறுவனம், மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், திருவண்ணாமலை மூலம் 2 கட்டங்களாக 9 நாட்கள் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த அலகின் மூலம் 25 குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் நேரடியாக வேலைவாய்ப்பினைப் பெற்று வருகின்றனர். 2025ம் ஆண்டில், 7,000 கிலோ புளியைக் கொள்முதல் செய்து மதிப்புக்கூட்டி விற்பனை செய்ததில் ரூ. 3.24 லட்சத்தினை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இச்சங்கத்தின் சிறப்பான செயல்பாட்டை மதிப்பீடு செய்து, வாணியம்பாடி கனரா வங்கி தானாகவே முன்வந்து ரூ.15 லட்சத்தினை குறைந்த வட்டியில் பொருளாதாரக் கடனாக வழங்கியுள்ளது.

* முந்திரி மதிப்பு கூட்டல் நிறுவனம் - ஆண்டிமடம், அரியலூர்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பகுதியில் உள்ள 35 கிராமங்களில் வசிக்கும் இருளர் பழங்குடியினக் குடும்பங்கள் முந்திரித் தோட்டங்களில் தினக்கூலிகளாக வேலை செய்து வருகின்றனர். இம்மக்களுக்கு நிலையான வருவாயை உறுதி செய்ய, TAFCORN நிறுவனத்திடமிருந்து 956 ஏக்கர் வன முந்திரித் தோட்டங்கள் திறந்த ஏலமின்றி 8 ஆண்டுகள் அரசு செலவில் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளன. வன முந்திரித் தோட்டங்களில் இருந்து சேகரிக்கப்படும் முந்திரிக் கொட்டைகளை மதிப்புக்கூட்ட, ரூ. 71 லட்சம் மதிப்பீட்டில் அலகு நிறுவப்பட்டுள்ளது. இந்த மதிப்புக்கூட்டல் அலகினைப் பராமரித்தல் மற்றும் இயக்குவதற்கான தொழில்நுட்பப் பயிற்சியினை ICAR-முந்திரி ஆராய்ச்சி இயக்குநரகம் வழங்கி வருகிறது. மேலும், முந்திரி மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை TRIFED நிறுவனம் நேரடியாகக் கொள்முதல் செய்து வருகிறது. கடந்த 2025ம் ஆண்டில், முந்திரித் தோட்டங்களில் இருந்து சேகரித்தல் மூலம் ரூ. 20 லட்சமும், மதிப்புக்கூட்டல் மூலம் ரூ. 7 லட்சமும் நிகர லாபமாக ஈட்டப்பட்டுள்ளது. இதன் மூலம், கூலித் தொழிலாளர்களாக இருந்த இருளர் பழங்குடியினக் குடும்பங்கள் தொழில்முனைவோர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.