நமது தமிழ்ச் சமூகத்தில் ஏறக்குறைய 1500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களும், மன்னர்களும் எந்த விதமான உணவுகளைச் சாப்பிட்டு வந்தார்கள்? தங்களை நாடி வரும் விருந்தினர்களை அவர்கள் எப்படி உபசரித்தார்கள் என்பது குறித்த தகவல்கள் சுவாரஸ்யம் மிகுந்தவை. இந்த தகவல்கள் எல்லாம் நமது இலக்கியங்களில் ஆவணமாகி உள்ளன. அந்தக் காலத்தில் மன்னர் முதல் வறியவர் வரை பிறரைச் சாப்பிட வைத்து அழகு பார்த்தவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஏழை, பணக்காரன் என எப்படி இருந்தாலும், பசித்து வீட்டிற்கு வருகிறவர்களுக்கு உணவு கொடுத்துவிட்டு அதன்பிறகே சாப்பிடும் வழக்கத்தைக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
மன்னன் ஒருவன் தன்னைப் புகழ்ந்து பாடும் புலவருக்குப் பரிசும் அளித்து, உணவும் அளித்திருக்கிறான். புலவருக்கு அளித்த உணவு கொஞ்சம் விசேஷம் மிகுந்தது. அதாவது அறுகம்புல்லைத் தின்று கொழுத்த செம்மறியாட்டுக் கறியை கம்பியில் சொருகி தந்தூரியாகத் தயார் செய்து சூட்டுடன் கொடுத்தான் மன்னன். அந்த இறைச்சியை அந்த வறிய புலவர் (பாணன்) சூட்டுடன் வாயில் போட்டு இந்தப் பக்கம், அந்தப் பக்கம் சூடு தாளாமல் சுவைத்துச் சாப்பிட்டு முடிக்கிறார். இதுபற்றி பொருநராற்றுப்படை நூலில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
அந்தப் பொரித்த இறைச்சியோடு, முனை முறியாத முல்லை மொட்டு மாதிரியான அரிசிச்சோற்றையும் கழுத்து வரை சாப்பிடக் கொடுத்து மன்னன் வழி அனுப்பி வைத்தான் என்ற குறிப்பும் அந்த நூலில் காணப்படுகிறது.மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி. அதேபோல அந்தக் கால மக்களும் தன்னை நாடி வருகின்ற ஏழை மக்களுக்கு உணவு அளித்து, முகம் குளிரச்செய்து வழியனுப்பி வைத்தார்கள். அம்மக்கள் நெல் அரிசி மட்டும் சாப்பிடாமல் வரகரிசி, தினையரிசி, புல்லரிசி, மூங்கில் அரிசி எனப் பல்வேறு அரிசி வகைகளைப் பயன்படுத்தினர். வந்தாரை வரவேற்று உணவு படைத்து உபசரித்தனர் என்று பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இது தமிழர்களின் ஒரு நியதியாகவே இருந்துவந்திருக்கிறது.
குறிஞ்சிநில மக்களின் உணவும், விருந்து உபசரிப்பும்
மலையும் மலை சார்ந்த இடத்தையும்தான் குறிஞ்சிநிலம் என அந்தக் காலத்தில் பகுத்து இருக்கிறார்கள். இதையும் பல பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். அந்த நில மக்கள் தங்கள் வீட்டிற்கு விருந்தினர்கள் வரும்போது ஒரு விசேஷ உணவைப் பரிமாறி இருக்கிறார்கள். அதாவது வந்த விருந்தினர்க்கு அவர்கள் அளித்த உணவு என்னவென்றால் சிவப்பு அரிசிச் சோறு மற்றும் உடும்பு இறைச்சியும். உடும்பை வேட்டையாடிப் பிடித்துக் கறி சமைத்து அதில் சோறு மூடுகின்ற அளவிற்குச் சாப்பிடக் கொடுத்தார்களாம். இவர்கள் இன்னொரு விருந்தையும் கொடுத்திருக்கிறார்கள். மானின் கொழுப்பு மிக்க பகுதியான சதைக்கறி, பன்றிக்கறி, உடும்புக்கறி ஆகிய மூன்று வகைக் கறிகளையும் கலந்து சமைத்து, புளியும் மோரும் சேர்த்துச் சமைத்த மூங்கில் அரிசிச் சோற்றோடு விருந்து வைத்திருக்கிறார்கள். இது குறித்துக் கூத்தராற்றுப் படை என்ற நூலில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
முல்லைநில மக்களின் உணவும், விருந்து உபசரிப்பும்
காடும் காடு சார்ந்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் முல்லைநில மக்கள். இவர்கள் வாழ்ந்த வீடு வைக்கோலால் வேயப்பட்ட வீடாக இருக்கும். இந்த வீட்டில் வாழ்ந்த முல்லைநில மக்கள் பூ மாதிரி பொங்கி வைத்த வரகரிசிச் சோற்றையும், வேங்கைபோல் இருக்கின்ற அவரைப் பருப்புக் கூட்டையும் சமைத்து தங்களை நாடி வந்த விருந்தினர்களுக்குக் கொடுத்து உபசரிப்பார்களாம். வரகு அரிசிச்சோற்றை முல்லைநில மக்கள் பருப்புக் கூட்டில் பிசைந்து கொடுப்பது வழக்கமாக இருந்திருக்கிறது. இதன் மூலம் நாம் அவர்களின் உணவையும், விருந்து உபசரிப்பையும் அறிந்துகொள்ள முடிகிறது.
மருதநில மக்களின் உணவும் விருந்து உபசரிப்பும்
வயலும் வயலைச் சார்ந்த இடத்திலும் வாழ்ந்த மக்கள்தான் மருத நில மக்கள். இவர்களின் விருந்து உபசரிப்பு குறித்து சிறுபாணாற்றுப்படை நூலில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த நிலத்தில் வாழ்ந்த மக்களுக்கு நெல்அரிசி தாராளமாகக் கிடைக்கும். இவர்கள் இரும்பு உலக்கையால் குத்தி எடுக்கப்பட்ட வெள்ளை அரிசியைக் கொண்டு வெள்ளைச் சோறாக சமைத்து, நண்டுக் கறியுடன் வைத்து வீடு தேடி வரும் ஏழை வறியவர்க்குக் கொடுத்திருக்கிறார்கள். இதுவே இவர்களின் விருந்து உபசரிப்பாக இருந்திருக்கிறது.
நெய்தல்நில மக்களின் உணவும் விருந்து உபசரிப்பும்
கடலும் கடலைச் சார்ந்த இடத்திலும் வாழ்ந்த மக்களே நெய்தல் நில மக்கள். அங்கிருந்த பழங்கால மக்கள் நுளையர் நுளைச்சி என அழைக்கப்பட்டு இருக்கிறார்கள். நுளைச்சி தன் வீட்டை நாடி வரும் விருந்தினர்க்கு அவளே தன் வீட்டில் சொந்தத் தயாரிப்பில் வைத்திருக்கும் பானம், சுட்ட கருவாடு ஆகியவற்றை உணவாக விருந்தளிப்பாளாம். அந்த மீன் கருவாடு குழல் என்றொரு மீன் வகையைச் சேர்ந்த பதப்படுத்திய கருவாடு ஆகும்.
ஆ.வின்சென்ட் பால்


