Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

நாகை மீனவர்களை தாக்கி மீன்பிடி உபகரணங்கள் பறிப்பு: இலங்கை கடற்கொள்ளையர் அட்டூழியம்

நாகப்பட்டினம்: நாகை மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி ரூ.7 லட்சம் மீன்பிடி உபகரணங்களை பறித்து சென்றனர். நாகப்பட்டினம் அருகே செருதூர் பிஎஸ்என்எல் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (44). இவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி(59), ரமேஷ்(35), பன்னீர்(34), வெற்றி(35) ஆகியோர் 25ம் தேதி இரவு மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.

நேற்று(26ம் தேதி) அதிகாலை 2 மணிக்கு கோடியக்கரைக்கு தென்கிழக்கே 20 கடல் மைல் தொலைவில், மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு பைபர் படகில் வந்த 3 இலங்கை கடற்கொள்ளையர்கள், 5 பேரையும் தாக்கி கடலில் விரித்திருந்த 350 கிலோ வலை, பேட்டரி 1, லைட் ஆகியவற்றை பறித்து சென்றனர். இவற்றின் மதிப்பு ரூ.3 லட்சம்.  அதே போல் செருதூர் பிஎஸ்என்எல் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த செந்தில்(47) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் சென்ற மோகன்(33), ஆரோக்கியதாஸ்(23), மைக்கேல் சார்ஜ்(26) ஆகியோர், நேற்று (26ம் தேதி) அதிகாலை 2 மணியளவில் கோடியக்கரைக்கு கிழக்கே 20 நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, இவர்களை அங்கு பைபர் படகில் வந்த இலங்கையை சேர்ந்த 5 கடற்கொள்ளையர்கள், இரும்பு ராடு மற்றும் கல்லால் தாக்கி 500 கிலோ மீன்பிடி வலை, ஜிபிஎஸ் கேப் 1, கைபேசி 1, 12 வோல்ட் பேட்டரி 1 ஆகியவற்றை பறித்து சென்று விட்டனர். இவற்றின் மதிப்பு ரூ.4 லட்சம். நேற்று காலை கரை திரும்பிய மீனவர்கள் பஞ்சாயத்தார்களிடம் இதுகுறித்து தெரிவித்தனர். காயமடைந்த 4 பேரும் நாகப்பட்டினம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.