Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மீன்வள தின விழா!

உலக மீன்வள தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் சார்பாக நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடி கிராமத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் பெலிக்ஸ் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து, மீன்வளர்ப்பு விவசாயிகளிடம் சிறப்புரை ஆற்றினார். அவரது உரையில், நன்னீர் மீன் வளர்ப்பில் எளிய முறையில் அதிக லாபம் ஈட்டக்கூடிய நவீன தொழில்நுட்பங்கள் குறித்து விரிவாக விளக்கினார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, இந்தியப் பெருங்கெண்டைகளான கட்லா, ரோகு, மிர்கால் ஆகிய இனங்களின் மீன்குஞ்சுகள் பண்ணைக் குட்டைகளில் இருப்பு செய்யப்பட்டது.

நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் மூலமாக 7 மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட தாக்க ஆய்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, விழுந்தமாவடி கிராம பண்ணைக் குட்டைகளில் இருப்பு செய்யப்பட்ட கிப்ட் திலேப்பியா மற்றும் கொடுவா மீன்கள் அறுவடை செய்யப்பட்டன. கிப்ட் திலேப்பியா மீன் அதிகபட்சமாக 900 கிராம் எடையிலும், கொடுவா மீன் 750 கிராம் எடையிலும் வளர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. துணைவேந்தர் பெலிக்ஸ் முன்னிலையில் அறுவடை செய்யப்பட்ட இந்த மீன்கள் கிராமவாசிகள் மற்றும் மீன் வியாபாரிகளுக்கு விற்பனைக்காக வழங்கப்பட்டன. சுமார் 50க்கும் மேற்பட்ட பண்ணையாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். முன்னதாக விழாவுக்கு வந்திருந்தவர்களை விரிவாக்கக் கல்வி இயக்குனர் கோபாலக்கண்ணன் வரவேற்றார். வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

மீன் குட்டை பராமரிப்பு!

மீன் வளர்க்க விரும்புகிறவர்கள் முதலில் குளத்திற்கான இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும். நாம் தேர்ந்தெடுக்கும் நிலத்தில் உள்ள மண் தண்ணீரைத் தேக்கிவைக்கும் திறனும், வெள்ளப் பெருக்கில் பாதிக்கப்படாத வகையிலும் இருக்க வேண்டும். மீன் வளர்ப்பிற்காக சேறும் சகதியுமான குளத்தை நன்றாக தண்ணீரின்றி உலர்த்தி, தூர் எடுத்து, நீர் உள்புறம் மற்றும் வெளிப்புறம் செல்வதற்கு ஏற்றவாறு புதுப்பிக்க வேண்டும். குளம் ஒருவடையதாகவோ அல்லது குத்தகைக்கோ எடுத்திருந்தால் இச்செயல்பாடுகள் குத்தகைக் காலத்தை நீட்டிக்கும்போது அல்லது குத்தகை செலுத்தும் காலத்தில் செய்ய வேண்டும். மீன் வளர்ப்பில் மீன் குஞ்சுகளை இருப்பு வைப்பதற்கு முன்னும், பின்னும் குளத்தை மேலாண்மை செய்வது மிக அவசியம்.