28 ஆண்டுகள் என்எல்சியில் வேலைபார்த்து ஓய்வு பெற்றேன். அப்புறம் சொந்த ஊருக்கு வந்து 7 ஏக்கர்ல விவசாயம் செய்றேன். அரை ஏக்கரில் மீன்குட்டை வச்சிருக்கேன். விரால், திலேப்பி, கெண்டை எல்லாம் வளர்க்கிறேன்” என மீன் வளர்ப்பில் ஈடுபடுவதைப் பற்றி ஆர்வத்துடன் சொல்லத் தொடங்கினார் குணசேகரன். காட்டுமன்னார்கோயில் வட்டம், கூத்தூர் கிராமத்தில் சொந்த நிலத்தில் விவசாயத்தோடு மீன் வளர்ப்பிலும் ஆர்வத்தோடு ஈடுபட்டு வரும் இவரைச் சந்தித்து பேசினோம். . “அரை ஏக்கரில் 60 ஆடு வச்சிருந்தேன். ஆட்டுக்குட்டிகளை பராமரிக்க முடியாததால, மீனுக்கு மாறினேன். அதே அரை ஏக்கர் இடத்தை மீன்குட்டையா மாத்தி விரால், திலேப்பி, கெண்டை வளர்க்கிறேன். பரங்கிப்பேட்டை மீன்வளத்துறைல பதிவு பண்ணேன். லால்பேட்டை மீன் குஞ்சு பண்ணைல மீன்குஞ்சு ஒன்னு 40 பைசான்னு நெறய வாங்கினேன். பெரிய குட்டைக்கு செப்பனார்கோயில்ல போய் தீவனம் வாங்கியாருவேன். 20 கிலோ பாக்கெட் 2000 ரூபா. விராலுக்கு 20 கிலோ 2300 ரூபாய் தீவனம் போடுறேன். ஒரு மீனோட எடை 300 கிராம் வந்தா, மொத்தமா வலை போட்டு 20 கிலோவுக்கு மேல பிடிச்சி வித்துடுவோம். திலேபி கிலோ 150 ரூபா, மிருகா ரோக் கிலோ 200 ரூபாய்க்கு போகுது. விசிறி வலை போட்டு பிடிப்போம். பார்ட்டி வந்தப்புறம்தான் வலை போட்டு உயிரோட பிடிச்சி குடுப்போம்” என மீன் வளர்ப்பு, விற்பனை பற்றிக் கூறினார்.
மீன்குஞ்சு வளர்ப்பில் ஈடுபடுவதன் காரணம் பற்றிக் கேட்டபோது “மீன் வளர்ப்பில் வருவாய் கிடைக்க 2 முதல் 3 மாதங்கள் வரை ஆகும். மேலும் ஒவ்வொரு முறையும் மீன் பிடிக்க ஆட்களைக் கூப்பிட வேண்டும். இது இல்லாம தவளை, பாம்பு, சிலநேரம் கொள்ளிட ஆற்றில் வெள்ளம் வந்தால் முதலை கூட வந்து மீன்களைத் தின்னுடும். இப்படிக் கூடுதல் வேலையும் செலவும் பிரச்னைகளும் இருக்குற மீன் வளர்ப்புக்கு கூடுதல் வருவாய் ஈட்டுறது எப்டின்னு யூட்யூப்ல பார்த்தேன். கங்கைகொண்ட சோழபுரம், அரியலூர்ல பெரிய அளவில் பயோப்ளாக் வச்சிருக்காங்க. அங்க போய் அவங்க கிட்ட ஐடியா கேட்டு மீன்குஞ்சு வளர்க்கும் பயோப்ளாக் என்கிற சின்ன தொட்டி கட்டி, இதை செய்யத் தொடங்கினேன்” என்றார்.
“பயோப்ளாக் மீன் தொட்டி 60,000 ரூபாய் செலவுல, 5 மீட்டர் விட்டத்துல கட்டி விரால் மீன் குஞ்சு வளர்க்கிறேன். வால்வு திறந்தா பழைய குட்டைக்கு தண்ணி போய்டும். அசல் நாட்டுவிரால் குஞ்சுகள் செஞ்சி, விழுப்புரம், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி பகுதிகள்ல ஏரியில இயற்கையா கிடைக்கும். அந்த வட்டாரங்கள்ல இருக்குறவங்க அவங்க கிட்டருந்து வாங்கிக்கலாம். விரால் முதல் அரை அங்குலம் வளரும்போது சிவப்பு நிறமா இருக்கும். ரெண்டாயிரம் லர்ந்து ஐயாயிரம் குஞ்சு வரைக்கும் ஒரே இடத்துல கூட்டாக இருக்கும். அதுங்களுக்கு முதல்ல தீவனம் பழக்கணும். முதல்ல பாயிண்ட் 6ன்னு ஒரு தீவனம் இருக்கு. அதை போடணும். அப்புறம் பாயிண்ட் எய்ட். அப்றம் 1.8, 2.5ன்னு அதிகமாக்கணும். அப்பப்ப மீன் குஞ்சுகளை வித்துடுவோம். பெருசாயிட்டா பெரிய குட்டைல போடுவோம். இப்போ 28 ப்ரோட்டின்றததான் உணவா குடுக்கறேன்.
பயோப்ளாக்ல தினமும் அழுக்கு சேரும். ஒரு நாள் தண்ணிய மாத்தலன்னாலும் அம்மோனியா வாடை அடிக்கும். அதனால தினமும் தண்ணி மாத்தணும். காலைல 9 மணிக்குதான் தண்ணி மாத்துறேன். ஐயாயிரம் லிட்டர் தண்ணி 10 நிமிஷத்துல வடிஞ்சிடும். அப்புறம் 10 நிமிஷம் மோட்டர் போட்டு, புது தண்ணியையும் வடியவிட்டு, பிறகு தொட்டியிலர்ந்து வெளிய போற வால்வை மூடிடுவோம். 3 அடி அளவுக்கு தண்ணி நின்னதும், போர்வெல் தண்ணி விடுறத நிறுத்திடுவோம். அப்புறமா மீனுக்கு இரை போடுவோம். இரையை போட்டதும் மீனெல்லாம் அடிச்சி புடிச்சி திங்கும். மொதல்ல ஒரு கிலோ தீவனம் மட்டும் போடணும். மீன்லாம் அதை திங்குற வரைக்கும் பொறுத்திருக்கணும். அப்புறம் இன்னும் கொஞ்சம் தீவனம் போட்டுட்டு காத்திருக்கணும். மீன் தின்றத நிறுத்திட்டு, தீவனம் மேல மிதந்ததும், தீவனம் போடுறத நிறுத்திடுவேன்.
ஒரு குஞ்சு 30 ரூபா. கிலோ 700 ரூபான்னு குடுக்கணும். இந்த குஞ்சுகளைக் கொண்டு போய் வளத்தா சேதமில்லாம முழுமையா வளரும். நம்ம கிட்ட வாங்கின மீன்லாம் ஒரு மீனே 2 கிலோ வரைக்கும் வளந்திருக்கு. இந்த பயோப்ளாக்ல மீனோட எண்ணிக்கையையும், எடையையும் கண்காணிக்கலாம். மீன்குட்டையை அப்படி கண்காணிக்க முடியாது. மீன்ல போன மாசம் 30 ஆயிரம் ரூபாய் எடுத்தேன். இதுல செலவெல்லாம் போக மாசத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் நிக்கும். இந்த அரை ஏக்கர்ல பண்றது வெற்றிகரமா வந்ததும், பயோப்ளாக் மீன்குஞ்சு வளர்ப்பை விரிவுபடுத்துவேன்” என நம்பிக்கையுடன் கூறினார் குணசேகரன்.
தொடர்புக்கு:
குணசேகரன்: 63834 15032.


