Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆதாயம் தரும் அலங்கார மீன்கள்!

பொழுதுபோக்குக்காக மேற்கொள்ளப்படும் அலங்கார மீன் வளர்ப்பு விவசாயிகளுக்கும், தொழில்முனைவோர்களுக்கு ஓர் அற்புதமான வாழ்வாதாரமாகவும் விளங்குகிறது. இன்றைய தேதியில் அலங்கார மீன்களுக்கு நல்ல சந்தை வாய்ப்பும் உருவாகி இருக்கிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் அலங்கார மீன் வளர்ப்பில் பல்வேறு தரப்பினரும் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார்கள். இத்தகைய அலங்கார மீன் வளர்ப்பு குறித்து நம்மிடையே விளக்குகிறார் தலைஞாயிறு மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இணை பேராசிரியர் விஜய் அமிர்தராஜ்.உலகளவில் சீனர்களும், ரோமானியர்களும் அலங்கார மீன் வளர்ப்பின் முன்னோடிகளாக திகழ்கிறார்கள். இந்தியா, சிங்கப்பூர், செக் குடியரசு, ஜப்பான், மலேசியா, இந்தோனேசியா, இஸ்ரேல், தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகள் அலங்கார மீன் ஏற்றுமதியில் ஈடுபட்டு வருகின்றன. அலங்கார மீன் வளர்ப்பு இறக்குமதியில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. உலக அலங்கார மீன் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 0.008 என்ற அளவில் உள்ளது. இந்தியாவில் குறிப்பாக கொல்கத்தாவில் 90 சதவீதமும், மும்பையில் 8 சதவீதமும், சென்னையில் 2 சதவீதமும் உற்பத்தி செய்யப்படுகின்றன. அலங்கார மீன் வளர்ப்பு மூலம் மாதம் ரூ.5000 முதல் ரூ.50,000 வரை லாபம் ஈட்ட முடியும். மேலும் அலங்கார மீன்களை சிறிய இடம் மற்றும் குறைந்த நீரில் வளர்க்கலாம். இந்தியாவில் மேற்கு வங்கம், தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகியவை முறையே 55 சதவீதம், 30 சதவீதம் 5 சதவீதம் என அலங்கார மீன் உற்பத்தியில் முக்கிய மையங்களாக உள்ளன.இனப்பெருக்கம் செய்யும் முறையைப் பொருத்து குட்டியிட்டு இனப்பெருக்கம் செய்யும் மீன்கள், முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் மீன்கள் என நன்னீர் அலங்கார மீன்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

குட்டியிட்டு இனப்பெருக்கம் செய்யும் மீன்கள்

கப்பி மீன்கள்

* பிறப்பிடம் - கயானா மற்றும் வெனிசுலா நாடு.

* வகைகள் - வாலின் தோற்றத்தைப் பொருத்து வட்டமான வால், வாள் போன்ற வால், ஈட்டி போன்ற வால், விரிந்த வால்.

* வளர்ச்சி - ஆண் மீன் 2.5 செ.மீ. பெண் மீன் 5 செ.மீ வரை வளரும்.

* இன முதிர்ச்சி - பெண் மீன் 2.5 செ.மீ வரையும், ஆண் மீன் 2.0 செ.மீ வரையும் வளரும்.

* இனப்பெருக்க விகிதம் - 1 ஆண் மீன் : 3-5 பெண் மீன்.

* 4 - 6 வாரத்திற்கு ஒருமுறை குட்டியிடும்.

* ஒரு இனப்பெருக்கத்தில் 50 முதல் 70 குட்டிகள் வரை ஈனும்.வளர்ப்பு, இனப்பெருக்கத்திற்கு உகந்த தட்பவெப்பநிலை 22-24 டிகிரி செ.கி, கார அமிலத்தன்மை 7-8.

மோலி மீன்கள்

* பிறப்பிடம் - மெக்சிகோ

* வகைகள் - கருப்பு மோலி, வெள்ளை மோலி, ஆரஞ்சு மோலி, பலூன் மோலி, மூன்டெயில் மோலி மற்றும் மார்பிள் மோலி.

* வளர்ச்சி - ஆண் மீன் 8.9 செ.மீ. பெண் மீன் 10 செ.மீ வரை வளரும்.

* இன முதிர்ச்சி - பெண் மீன் 7 செ.மீ வரையும், ஆண் மீன் 5 செ.மீ வரையும் வளரும்.

* இனப்பெருக்க விகிதம்: 1 ஆண்மீன் : 3-5 பெண்மீன்

* 4-6 வாரத்திற்கு ஒருமுறை குட்டியிடும்.

* ஒரு இனப்பெருக்கத்தில் 30 முதல் 70 குட்டிகள் வரை ஈனும்.

* வளர்ப்பு, இனப்பெருக்கத்திற்கு உகந்த தட்பவெப்பநிலை டிகிரி 25-30 செ.கி, கார அமிலத்தன்மை 7-8.5

பிளாட்டி மீன்கள்

பிறப்பிடம் - அமெரிக்கா, மெக்சிகோ.

*ஆண் மீன் 3-4 செ.மீ, பெண் மீன் 4-5 செ.மீ வரை வளரும்

* இன முதிர்ச்சி - பெண் மீன் 2.5 செ.மீ வரையும், ஆண் மீன் 2 செ.மீ வரையும் வளரும்.

* இனப்பெருக்க விகிதம் - 1 ஆண் மீன் : 3-5 பெண் மீன்

* 3 - 5 வாரத்திற்கு ஒருமுறை குட்டியிடும்.

* ஒரு இனப்பெருக்கத்தில் 20 முதல் 100 குட்டிகள் வரை ஈனும்

* வளர்ப்பு, இனப்பெருக்கத்திற்கு உகந்த தட்பவெப்பநிலை 22-24 டிகிரி செ.கி, கார அமிலத்தன்மை 7-8.

வாள் வால்மீன்கள்

* பிறப்பிடம் - மத்திய அமெரிக்கா.

* வளர்ச்சி - ஆண் மீன் 8-10 செ.மீ, பெண் மீன்-10-12 செ.மீ வரை வளரும்.

* இன முதிர்ச்சி - பெண் மீன் 6-8 செ.மீ, ஆண் மீன் 5-7 செ.மீ வரை வளரும்.

* இனப்பெருக்க விகிதம் - 1 ஆண் மீன் : 24 பெண் மீன்.

* 4 - 6 வாரத்திற்கு ஒருமுறை குட்டி ஈனும்.

* ஒரு இனப்பெருக்கத்தில் 20 முதல் 100 குட்டிகள் வரை ஈனும்

* வளர்ப்பு, இனப்பெருக்கத்திற்கு உகந்த தட்ப வெப்பநிலை 22-24 டிகிரி செ.கி, கார அமிலத்தன்மை 7 -8.

* வயது முதிர்ந்த பெண் மீன்கள், ஆண் மீன்களாக பால்மாற்றம் அடையும்.முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் மீன்கள்

பொன்மீன்

* பிறப்பிடம் - சீனா, கொரியா, ஜப்பான்.

* அலங்கார மீன்களில் அழகுக்காக வளர்க்கப்பட்ட முதல் மீன் பொன் மீன் ஆகும்.

* கி.பி. 1136ம் ஆண்டிலேயே சீனாவில் மன்னர்களால் மட்டும் வளர்க்கப்பட்டது.

* 4 மாத காலத்தில் 20-25 கிராம் எடையினை அடையும்.

* இன முதிர்ச்சி - 5 மாதம்.

* இனப்பெருக்க விகிதம் - 2 ஆண்மீன் : 1 பெண்மீன்.

* முட்டை ஒட்டும் தன்மை உடையவை, முட்டைகளை சிதறவிடும்.

* ஒரு இனப்பெருக்கத்தில் 2000 முதல் 3000 முட்டைகள் வரை இடும்.

* முட்டைகள் 62 -72 மணி நேரத்தில் பொரித்து நுண்குஞ்சுகள் வெளியேறும்.

* வருடம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் இனப்பெருக்கம் செய்யும்.

*வளர்ப்பு, இனப்பெருக்கத்திற்கு உகந்த தட்பவெப்பநிலை 25-28 டிகிரி செ.கி, கார அமிலத்தன்மை 7.5-8.5.அலங்கார மீன்களின் வகைகள் குறித்து அடுத்த இதழிலும் காணலாம்.

தொடர்புக்கு:

முனைவர் க.சே.விஜய் அமிர்தராஜ்:

99944 50248.